சின்னம்மை
குளிர் காலம் முடிந்து கோடை காலம் துவங்கும் இந்த சமயத்தில்தான் சின்னம்மை நோய் வேகமாக பரவுகிறது. அந்நோய்க்கான அறிகுறிகள் இவைதான்..
காய்ச்சலுடன் ஆரம்பிக்கும். காய்ச்சலோடு வயிற்றிலோ முதுகிலோ கொப்புளங்கள் தோன்றும். அடுத்த 48 மணி நேரத்தில் உடல் முழுக்க கொப்புளங்கள் பரவிவிடும்.
ஆரம்பத்தில் பார்த்து சிகிச்சை அளித்தால் நான்கு நாட்களில் குணமாகிவிட வாய்ப்பு உண்டு. அதனால், காய்ச்சல் வந்ததுமே மருத்துவரிடம் காட்டுவது நல்லது.
சின்னம்மை நோய் வி.இஸட்.வி (V.Z.V - Varicella Zoster Virus) என்ற வைரஸினால் உண்டாகிறது. இந்த வைரஸ் மூன்று விதங்களில் பரவுகிறது. பாதிக்கப் பட்டவர்களின் மூச்சுக் காற்றில் இருந்தும், அவர்கள் உடலில் உள்ள கொப்புளங்களில் இருந்து வெளிப்படும் நீரிலிருந்தும், கொப்புளங்கள் காய்ந்து உதிரும் செதில் போன்ற பகுதியிலிருந்தும் பரவுகிறது. மிக சுலபமாக பரவக் கூடிய நோய் என்பதால்தான் இதுபோன்ற நோய்களுக்கு சிகிச்சை தர சிறப்பு மருத்துவமனைகளை அரசு ஏற்படுத்தி உள்ளது. சென்னையில், தண்டையார்பேட்டை யில் உள்ள ஐ.டீ.எச் அரசு மருத்துவமனையில் தற்போது இதற்கென சிறப்பு வார்டே அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் அருகில் யாரையும் விடக் கூடாது. பொதுவாகவே, தும்மல் மற்றும் இருமல் இருப்பவரின் அருகில் நெருங்காமல் இருப்பது நல்லது. ஏனெனில், இந்த வைரஸ் ஒருவரின் உடலில் சென்று பதினேழு நாட்கள் கழித்தே நோயை வெளிப்படுத்துகிறது. அதுவரை இப்படி ஒரு பாதிப்பு ஏற்பட்டிருப்பது அந்த நபருக்கே தெரியாது. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில்தான் அவரின் உடலில் கிருமிகள் பல்கிப் பெருகும். இதை ‘இன்குபேஷன் பீரியட்’ என்று சொல்லுவோம். இந்த சமயத்தில் அவர் இருமினாலோ தும்மினாலோ அருகில் இருப்பவர்களுக்கும் இந்த வைரஸ் பரவிவிடும்.
இரண்டு நாட்களுக்கு காய்ச்சல் இருக்கும். அதற்கு பாரசிட்டமால் மருந்துகளை கொடுக்கலாம். ஆனால் ஆஸ்ப்ரின் மருந்துகளை கொடுக்கக் கூடாது.
கொப்புளங்கள் காய்ந்து உதிர்ந்தால், உடனுக்குடன் சுத்தம் செய்ய வேண்டும்.
காரமான உணவுகளைக் கொடுத்தால், கொப்புளங்களில் அதிக எரிச்சல் ஏற்படும். தண்ணீர், ஜூஸ், மற்றும் பழ வகைகளையே அதிகம் கொடுக்க வேண்டும்.
பொட்டாசியம் பெர்மாங்கனேட் ஒரு கிராம் எடுத்து நூறு கிராம் தண்ணீரில் கலந்து அவர்களின் உடலில் பூசி விட வேண்டும். மஞ்சள், வேப்பிலை இரண்டுமே உடலுக்கு நல்ல குளிர்ச்சியைக் கொடுப்பதால் அதை அரைத்து தடவலாம். அது கொப்புளங்களில் எரிச்சலை குறைக்கும்.
நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ‘Acylovir’ என்ற மாத்திரையை ஒரு நாளைக்கு ஐந்து முறை கொடுக்க வேண்டும். இந்த மாத்திரையால் நோயின் தாக்குதலும் கொப்புளங்களால் தழும்புகள் ஏற்படுவதும் வெகுவாகக் குறையும். பொதுவாக, நான்கு முதல் ஏழு நாட்களுக்குள் இந்நோய் குணமடைந்துவிடும்.
சின்னம்மைக்கான தடுப்பூசியை குழந்தைகளுக்கு மூன்று வயதிலேயே போட்டு விடுவது நல்லது.
பொதுவாக, மற்ற குழந்தைகளோடு நெருங்கி விளையாடுகிற குழந்தைகளுக்கே இந்த நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். அம்மாக்கள் அதிக கவனத்துடன் இருக்கவும்.
இந்த நோயில் ஒரு சின்ன சந்தோஷம் உண்டு. ஒருவருக்கு ஒருமுறை சின்னம்மை வந்து விட்டால் அவருக்கு மீண்டும் வரவே வராது என்பதுதான் அது!.