பக்கவாதம்
பாரிசவாயு, வாதம், பக்கவாதம், ஸ்ட்ரோக் என்றெல்லாம் விதவிதமாக அழைக்கப்பட்டாலும் அடிப்படை ஒன்றுதான். அது மூளையின் ஏதோ ஒரு பகுதிக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைப்பட்டிருக்கிறது.
ரத்த ஓட்டம் தடைப்பட்டதால், அதன் மூலம் அந்தப் பகுதிக்கு வந்து சேரும் ஆக்ஸிஜனும் பிற சத்துக்களும் கிடைக்காமல் போய்விடுகின்றன. இதன் விளைவாக அங்குள்ள செல்கள் மரிக்கத் தொடங்குகின்றன.
இந்த செல்களால் கட்டுப்படுத்தப்படும் உடல் பகுதிகள், தங்கள் இயக்கத்தை நிறுத்திக் கொள்கின்றன. அது எந்தப் பகுதி என்பதைப் பொறுத்து பாதிப்பு இருக்கும். அவரால் நடக்க முடியாமல் போகலாம். அவருக்குப் பேச்சு வராமல் போகலாம். எங்கே பாதிப்பு, என்ன அளவில் பாதிப்பு என்பதைப் பொறுத்தது இது.
மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் எதற்காகத் தடைப்பட வேண்டும்? இதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் உண்டு.
மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கலாம் அல்லது ரத்தக் குழாய் வெடித்திருக்கலாம். இதில் இரண்டாவது காரணமென்றால் இன்னும் ஆபத்து. மூளைச் செல்களுக்கு ரத்தம் பாயாதது மட்டுமல்ல, கசியும் ரத்தம் மூளைப் பகுதியில் வழிந்து, மூளையின் பிற பகுதிகளில் உள்ள செல்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தலாம்.
ஒருவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டுள்ளதை எப்படிக் கண்டுபிடிப்பது?
பக்கவாதம் வரப்போகிறது என்பதற்கான அறிகுறிகள் சில உண்டு. அவற்றை முதலில் தெரிந்து கொள்வோம்.
பாதிக்கப்பட்டவரின் சில தசைகள் திடீரென்று பலவீனமடையும். அதுவும் உடலின் ஒரு பகுதியில்தான் இந்தத் திடீர் பலவீனம் அல்லது செயலிழப்பு என்றால், அது பக்கவாதமாக இருக்க வாய்ப்பு அதிகம். திடீரென்று ஒரு கண்ணிலோ இரண்டு கண்களிலோ பார்வை பறிபோவது, பேச முடியாமல் போவது என்ற நிலை ஏற்பட்டாலும் அது மூளை பாதிப்பைக் குறிக்கிறது.
காட்சிகள் இரண்டிரண்டாகத் தெரிவது, குழப்பமான மனநிலை, ஒரு கையோ காலோ மரத்துப் போவது அல்லது முகத்தின் ஒரு பகுதி மரத்துப் போவது _ இவற்றில் ஏதாவது ஏற்பட்டால் உடனடியாக அது பக்கவாதம் என்று முடிவெடுத்துவிட முடியாதுதான். ஆனால், அதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு. எனவே, டாக்டரிடம் உடனடியாக ஆலோசனை பெறவேண்டும்.
பக்கவாதம் தொடர்பான சில நிலைகளையும் அவற்றை டாக்டர்கள் எப்படிக் குறிப்பிடுகிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்வோம்.
‘த்ராம்பஸ்’ (Thrombus) என்றால் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய் ஒன்றில் கட்டி அல்லது அடைப்பு உருவாகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். ரத்தக் குழாய்க்கு உள்ளே கொழுப்புப் படலம் உருவாவதால் இப்படி நேரலாம்.
இதயம் போன்ற ஒரு பகுதியில் சில அனாவசியப் பொருள்கள் உருவாகலாம். (செல்களிலிருந்து உதிர்ந்த அனாவசிய மிச்சங்களாகக்கூட இது இருக்கலாம்). அகலமான ரத்தக் குழாய்களில் அனாயாசமாகப் பயணம் செய்யக் கூடிய இந்தப் பொருள், குறுகலான ரத்தக் குழாயைக் கடக்க முடியாமல் அதை அடைத்துக் கொள்ளலாம். இந்த நிலையை ‘எம்போலஸ்’ (Empolus) என்பார்கள்.
‘செரிப்ரல் ஹெமரேஜ்’ (Cerebral Haemerrage) என்று கேள்விப்பட்டிருக்கலாம். இந்த நிலையில் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய் வெடித்துவிடுகிறது. இதனால் அதிக அழுத்தத்தில் ரத்தம் அங்கிருந்து வெளியேறி மூளையில் உள்ள மெல்லிய திசுக்களில் பரவுகிறது.
‘அனெயுரிஸம்’ (aneurysm) எனும் நிலையில் ரத்தக் குழாய் பலவீனமடைந்திருக்கிறது. ஆனால், வெடிப்பதில்லை. பலவீனமாக இருப்பதால் ரத்தம் அழுத்தத்துடன் பாயும்போது சிறு சிறு பலூன்கள் போல் அங்கங்கே ரத்தக் குழாய் தோற்றமளிக்கும். அப்படி ரத்தக் குழாய் சுவர் அதிகமாக அழுத்தப்படும் பகுதிகளில் அவற்றின் வெளியே உள்ள மூளைப் பகுதிகளில் அழுத்தம் ஏற்பட்டு பாதிப்பு உண்டாகும்.
மேலே குறிப்பிட்டுள்ள நான்கு நிலைகளில் எதுவானாலும் விளைவு (உடனடியாகவோ நாளடைவிலோ) ஒன்றுதான். பக்கவாதம்.
‘பார்ஷியல் ஸ்ட்ரோக்’கினால் (Partial Stroke) தாக்கப்பட்டிருப்பதாகச் சிலரிடம் டாக்டர்கள் கூறக்கூடும். அப்படியென்றால் என்ன? மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் சிறிதான ஒன்றில் மேற்படி பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால், அதை இப்படிச் சொல்வார்கள். இதன் விளைவுகள் அவ்வளவு மோசமாக இருக்காது. அதேசமயம் இதன் அறிகுறிகளையும் அவ்வளவு எளிதில் உணர முடியாது.
பக்கவாதத்தின் (முழுமையானதோ பகுதியோ) அறிகுறிகள் குறைந்தது ஒரு நாளைக்கு முன்பே தோன்றிவிடுகின்றன என்பது சின்ன ஆறுதல்.
சொல்லப்போனால் நம்மில் பலரையும் சிறு அளவினாலான பக்கவாதம் தாக்கிக் கொண்டுதான் இருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். இவற்றை நம் உடல் தானாகவே சரி செய்து கொண்டு விடுகிறது. ஆனால், பாதிப்பு அதிகமாக இருக்கும்போது அதன் விளைவுகளும் மோசமாக அமைந்துவிடுகின்றன.
பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவர், தன்னிடம் சிகிச்சைக்கு வரும்போது டாக்டர் உடனடியாக எதில் கவனம் செலுத்துவார் தெரியுமா? மூளையில் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்வதா? இல்லை, அதைவிட முக்கியமாக, அந்தப் பாதிப்பு மேலும் அதிகமாகாமல் பார்த்துக் கொள்வதுதான் அவரது முன்னுரிமையாக இருக்கும். உதாரணத்திற்கு, ரத்தக் கட்டியால் பக்கவாதம் என்றால் அங்கு மேலும் ரத்தம் கட்டிக் கொள்வதை தடைப்படுத்தும் மருந்துகளைத்தான் முதலில் அளிப்பார். உருவான கட்டி பெரிதாகமல் இருக்கவும், புதிய ரத்தக்கட்டி உருவாகாமல் இருக்கவும் இது உதவும். இந்தவகை மருந்துகளை ‘ஆன்டி கொயாகுலன்ட்ஸ்’ (Anti Coagulents) என்பார்கள்.
ஆனால், மூளையில் உள்ள ரத்தக் குழாயில் வெடிப்பு ஏற்பட்டிருந்தால் (செரிப்ரல் ஹெமரேஜ்) அப்போது இந்த மருந்துகளை டாக்டர் சிபாரிசு செய்யமாட்டார். காரணம், அது ரத்தப் பெருக்கை அதிகரிக்கச் செய்யும்.
மருந்துகள் மட்டும் மூளையின் பாதிப்பை நீக்கிவிடுவதில்லை. அதற்குப் பிறகு சீரமைக்கும் பணி நிறையத் தேவைப்படும். பாதிக்கப்பட்டவரோடு அவர் குடும்பத்திற்கும் மருத்துவர்களின் ஆலோசனை தேவைப்படும். டாக்டர், பிசியோதெரபிஸ்ட், மனநல ஆலோசகர் என்று ஒரு குழுவின் உதவி தேவைப்படக் கூடும்.
பக்கவாதத்தில் விழுந்தவர்களில் சிலரால் இறுதிவரை பழைய நிலைக்குத் திரும்ப முடியாமல் போகிறது என்பது வருத்தமான உண்மைதான். ஆனால், பெரும்பாலானவர்களால் சில வாரங்களிலோ சில மாதங்களிலோ முழுமையான குணமடைய முடிகிறது.
இதையெல்லாம் படிக்கும்போது உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம் (எழ வேண்டும்).
பக்கவாதம் வராமல் தடுத்துக் கொள்ள முடியுமா?
முடியும். உங்களது ரத்த அழுத்தம் அதிகமானதாக இருந்தால் அதைக் கட்டுக்குள் கொண்டு வருவது மிகவும் முக்கியம். ஏனென்றால் அதிக ரத்த அழுத்தம் ரத்தக் குழாய்களைப் பாதிக்கும். உப்பு, கொழுப்பு அடங்கிய உணவுகளைத் தவிர்த்தல், உடற்பயிற்சி, மருந்துகள் ஆகியவற்றின் மூலம் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டு வரலாம்.
மன இறுக்கத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். தொழில் மற்றும் குடும்பப் பிரச்னைகள் மிக அதிகமாக இருந்தால் அமைதியாக உட்கார்ந்து அவற்றுக்குத் தீர்வு காணவேண்டும். மனநல மருத்துவரின் ஆலோசனையை நாடலாம்.
புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. கருத்தடை மருந்துகளோடு புகையிலையும் உடலில் சேரும்போது, ரத்தக் கட்டிகள் தோன்ற மிக அதிக வாய்ப்பு உண்டு என்கிறது ஒரு மருத்துவ ஆராய்ச்சி.