அழகை அள்ளித்தரும் குங்குமப்பூ
சிகப்பழகைப் பெறத் துடிக்கும் பெண்மணிகள் முக அழகு கிரீம்களை தேட வேண்டியதில்லை. குங்குமப்பூ ஒன்றே போதும்.
குங்குமப்பூவை எப்படி பயன்படுத்துவது:
- குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும்.
- குங்குமப்பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும்.
- இந்த கலவையை தினமும் பூசிவர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.
- இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம்பெறும். நகச் சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும்.
- முகத்திற்கு வசிகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான் அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள் பட்டாம்பூச்சி போல படபடக்கும் இமைகள் அமைய குங்குமப்பூ உதவுகிறது.
மேனியை சிவப்பாக மாற்ற இப்படி செஞ்சு பாருங்க:
எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக்கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது. குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம். சில பெண்கள் நல்ல நிறமாக இருப்பார்கள். ஆனால் உதடுகள் மட்டும் கருமை படர்ந்து அசிங்கமாக இருக்கும். இப்படிப்பட்ட பெண்கள் குங்குமப்பூவை பயன்படுத்தினால் அழகு சிலையாக மாறுவது நிச்சயம்.
முக வசீகரம் பெற அழகிய குறிப்பு:
- குங்குமப்பூ - 10 கிராம், ரவை - 30 கிராம், வாதுமை பிசின் - 25 கிராம். இவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து பசும்பாலில் கரைத்து சிறிய சிறிய வில்லைகளாக அதாவது 2 கிராம் அளவு எடுத்து தட்டி உலரவைத்து தேவையானபோது அந்த வில்லைகளை எடுத்து பால் ஏடு அல்லது தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் முகம் வசீகரமாகும்.
- குங்குமப்பூ கீறல்-10 எடுத்து, கொதிக்கும் தண்ணீரில் போட்டு, இதனுடன் 2 டீஸ்பூன் மில்க் பவுடர் கலந்து, சின்ன அம்மியில் அரைத்து பேஸ்ட் ஆக்குங்கள். இந்த விழுதை முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். 'பளிச்'சென முகம் பிரகாசமாக ஜொலிக்கும்.
- ஜாதிக்காய், மாசிக்காய் - தலா 1 எடுத்து, இவற்றை ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளுங்கள். இதனுடன் 5 குங்குமப்பூ கீறல், சர்க்கரை ஒரு டீஸ்பூன் சேர்த்து ரவை போல் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை முகத்தில் நன்றாகத் தேய்த்தபடி கழுவுங்கள். கரடுமுரடான முகத்தை கனிந்த பழம்போல் மாற்றிவிடும்.
- சந்தனத்தூள், செம்மரத்தூள் தலா அரை டீஸ்பூனுடன், 5 குங்குமப்பூ கீறலை தண்ணீரில் ஊற வைத்து அரைத்துக் கொள்ளுங்கள். இதை வாரம் 2 முறை முகம், கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். முகத்தில் உள்ள கருந்திட்டுக்கள், கண்ணுக்கு கீழ் கருவளையம் மறைந்து முகம் ஒரே மாதிரியான நிறத்தில் மின்னும்.
- 2 டீஸ்பூன் பாலில், ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பைப் போட்டு ஊறவையுங்கள். இதனுடன் 10 குங்குமப்பூ கீறலை சேர்த்து அரைத்து, முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். தொய்ந்த முகத்தை தூக்கி நிறுத்தி, 'டல்'லான முகமும் டாலடிக்கும்.
- 10 குங்குமப்பூ கீறலுடன் 4 பாதாம்பருப்பை முந்தைய நாள் இரவே சிறிது தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் விழுதாக அரைத்து முகத்தில் பூசி 'பேக்' போட்டு பத்து நிமிடம் கழித்து தேய்த்துக் கழுவுங்கள். வாரம் ஒரு முறை இதுபோல் செய்துவர முகம் பளபளப்புடன் இழந்த அழகை மீட்டுத் தரும்.
- கால் கப் குங்குமப்பூவை முந்தைய நாளே வெந்நீரில் போட்டு ஊற வைத்து, மறுநாள் அதை அரைத்து முகத்தில் பத்து போல் போட்டு, அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள். இரும்புச் சத்து குறைவினால் ஏற்படும் கண்ணின் கீழ் கருமை, கரும்புள்ளிகள், திட்டுக்கள் எல்லாம் மறைந்து, முகம் அன்று மலர்ந்த தாமரையாகப் பூத்துக் குலுங்கும்.
- நான்கு அல்லது ஐந்து துளசி இலைகளுடன், குங்குமப்பூ கீறல்-15 சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை பருக்களின் மேல் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். வாரம் இருமுறை தடவிவர பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். மேலும் வராமல் தடுக்கும்.