ப்யூட்டி ரெசிபிகள்

நீண்ட தலைமுடியை சுருட்டையாக்குவது... சுருட்டை முடியை நேராக்குவது... மஞ்சள், பச்சை, சிவப்பு, நீலம் என்று கண்ணைப் பறிக்கும் நிறங்களில் விதவிதமாக ஹேர் கலரிங் செய்வது... இப்படி எத்தனை மார்டன் டிரெண்ட் வந்தாலும் அலை அலையாக நீண்ட கருங்கூந்தலுக்கு ஆசைப்படாத பெண்களே கிடையாது! அப்படிப்பட்ட கருங்கூந்தலுக்கு முதல் எதிரி இந்த வெயில் காலம்தான். வியர்வை, அழுக்கு, அரிப்பு என்று சூரியனோடு மல்லுக்கட்டி துவண்டு போன தலைமுடிக்கு இதோ சில சூப்பர், டூப்பர் டிப்ஸ்!

வெயில் காலத்தில் ஏன் முடி அதிகமாக பாதிக்கப்படுகிறது?

வெயில் காலத்தில் நம் தலையில் ஊறும் வியர்வையும், காற்றில் மிதக்கும் தூசியும் ஜம்மென்று கூட்டணி வைத்துக் கொள்ளும். இதனால் தலையில் அரிப்பு, ரணம், முடி கொட்டுதல் என்று தலையே போர்க்களமாகி விடும். இதற்கு ஒரே தீர்வு... வாரத்திற்கு இரண்டு நாட்களாவது தலைக்குக் குளிப்பதுதான்!

வெந்தய பேக்

தேவையான பொருட்கள்:  வெந்தயம் - 25 கிராம், தண்ணீர் - 1 கப்.

செய்முறை:  வெந்தயத்தை முதல் நாள் இரவே, 1 கப் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் நன்றாக ஊறிய இந்த வெந்தயத்தை ‘மை’ போல அரைத்து முடி வேர்க்கால்களில் படும்படி நன்றாகத் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து சீயக்காயோ அல்லது மைல்ட் ஷாம்பூவோ போட்டு கூந்தலை அலசினால் தலையும் சுத்தமாகும். முடியும் சில்க்கியாகும். இன்னொரு விஷயம்... வெந்தயம் முடியின் வேர்க்கால்களை நன்கு பலப்படுத்தவும் செய்யும்.

ஹென்னா நெல்லி ‘பேக்’

தேவையான பொருட்கள்:  மருதாணி இலைகள் - ஒரு கைப்பிடி, முழு நெல்லிக்காய் - அரை கைப்பிடி.

செய்முறை :  மருதாணி இலைகள், நெல்லிக்காய் இரண்டையும் விழுதாக அரைத்து முடியில் தடவுங்கள் (வேர்க்கால்களில் நன்கு படும்படி). ஒரு மணி நேரம் ஊற வைத்து பிறகு தரமான, மைல்டான ஷாம்பூவால் தலைமுடியை அலசி விடுங்கள். வாரம் ஒரு முறை இப்படிச் செய்து வந்தால் உடல் குளிர்ச்சியாகும். தலைமுடியும் நன்கு வளரும்.

ஹென்னா, தலைமுடியை வறண்டு போகச் செய்யும் என்று சொல்வார்கள். ஆனால், நெல்லிக்காயுடன் மருதாணி இலையும் சேர்த்து அரைத்து தலையில் தடவுவதால் முடி வறண்டு போகாது. அது மட்டுமல்ல... இந்த ‘ஹென்னா நெல்லி பேக்’ வறண்ட, எண்ணெய்ப் பசை, நார்மல் ஆகிய மூன்று வகை கூந்தலுக்கும் பொருந்தும்.

ஆயில் மசாஜ்

தேவையான பொருட்கள்:  தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் - 50 கிராம்

செய்முறை:  எண்ணெயை லேசாக சூடுபடுத்தி அதை விரல் நுனிகளில் தொட்டுக் கொண்டு முடியின் வேர்க்கால்களில் படும்படி மென்மையாக மசாஜ் செய்யுங்கள். அரை மணி நேரம் கழித்துத் தலையை ஷாம்பூவால் அலசி விடுங்கள். வாரம் இரு முறை இந்த ஆயில் மசாஜை தொடர்ந்து செய்து வந்தால் வெயிலால் முடி முரட்டுத் தனமாகி விடுவதைத் தவிர்க்கலாம்.

முடி வளர்ச்சிக்கு முழு நெல்லிக்காய்!

முடி கொட்டுவதைத் தடுக்க, தலை முடியை பலப்படுத்தி அதன் வளர்ச்சியைத் தூண்ட இதோ சில உணவுகள்!

நெல்லிக்காய், தயிர் பச்சடி

ஒரு கப் தயிரில், 4 அல்லது 5 முழு நெல்லிக்காய்களை நறுக்கிப் போட்டு சிறிதளவு இஞ்சித் துருவல், உப்பு சேர்த்து பச்சடியாக சாப்பிட்டு வந்தால் உடலும் குளிர்ச்சியடையும். முழு நெல்லிக்காய் முடி வளர்ச்சியையும் தூண்டும்!

வெள்ளரி சாலட்

நறுக்கிய வெள்ளரியுடன், 2 சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்து ‘சாலட்’டாக சாப்பிடலாம்... இது வெயிலுக்கேற்ற கூல், கூல் சாலட்!

இன்னும் சில டிப்ஸ்

  • 2 கப் மோருடன் நீராகாரம் லெமன் ஜூஸ் சேர்த்து நீர் மோராக குடிக்கலாம். வெயில் காலத்தில் நீர் மோரை அடித்துக் கொள்ள எந்த ஃப்ரெஷ் ஜூஸாலும் முடியாது!

  • உணவில் இரும்புச் சத்து அதிகமுள்ள கீரைகள், காய்கறிகள், பேரீச்சை, அத்தி போன்ற பழ வகைகள் ஆகியவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் கூந்தல் அழகில் வெயில் வெட்கப்பட்டு ஓடி விடும்!

  • பொதுவாக தலைக்கு ஹென்னா போட்டால் சைனஸ் தொல்லை ஏற்படும் என்பது பலருடைய கருத்து. ஆனால் ஹென்னாவில் எலுமிச்சை சாறு சேர்க்காமல் தலையில் தடவினால் சைனஸ் பிரச்னை ஏற்படாது.

  • வெயில் காலத்தில் அதிகமாக ஏற்படும் வியர்வையும், அழுக்கும்தான் பேன்களின் உற்ற நண்பர்கள்! இதனால் நம் தலையில் அதிகமாக அரிப்பு ஏற்படும். தாங்க முடியாமல் அழுத்தி சொறிந்து விட்டால் தலையெல்லாம் ரணமாகும். முடியோ பொல, பொலவென கொட்டும். இந்த பேன் தொல்லைக்கு ஒரே தீர்வு... வேப்பெண்ணெயை தலையில் நன்றாகத் தடவி நீராவிக் குளியல் (ஸ்டீம் பாத்) எடுத்தால் போதும்.
Powered by nasrullah.in - TechnoNasr 2003-2020.
Designed & Developed by Mohamed Nasrullah.M