ரமலான் சிறப்பு
அல்லாஹ்வின் அருள் மழை ரமலான் மாதத்தில்தான் பொழிகிறது. "ரமல்" எனும் மூலச் சொல்லில் இருந்தே ரமலான் ஆனது. "ரமல்" என்றால் "கரித்தல்", " பொசுக்குதல்" என பொருள். இந்த புனித மாதத்தில் முப்பது நோன்புகளை நோற்பதும், இரவில் நின்று வணங்குவதும், குர்ஆனை அதிகப்படியாய் ஓதுவதும் என அல்லாஹ்விடம் நாம் நெருங்கிப் போய், நம் பாவங்களுக்காக அழுது பிரார்த்திக்கும்போது அல்லாஹ் நம் பாவங்களை பொசுக்கிவிடுகிறான். "எனது உம்மத்தினர்கள் ரமலானின் சிறப்பை அறிந்திடுவார்களாயின் ஆண்டு முழுவதும் ரமலானாகவே இருந்திட வேண்டுமென்று மேலெண்ணம் கொள்வார்கள். ஏனெனில் அதில்தான் நற்செயல்கள் யாவும் ஒன்று திரட்டப்படுகின்றன. வணக்கங்கள் ஒப்புக் கொள்ளப்படுகின்றன. இறைஞ்சுதல் (துஆக்கள்) ஏற்கப்படுகின்றன. பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. மேலும் நோன்பாளிகளுக்காக சுவனம் ஆயத்தப்படுத்தப்படுகின்றன", என நபிகள் நாயகம்(ஸல்) கூறுகிறார்கள். ஒவ்வொருவரும் நோன்பு இருக்க வேண்டியது கடமையாகும். தள்ளாத வயதினர், நோயாளிகள், பயணத்திலிருப்பவர்கள், மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் அன்னையர் ஆகியோருக்கு நோன்பிருப்பதில் சலுகை இருக்கிறது. இருப்பினும் இவர்கள் இப்படி விட்ட நோன்புகளை, அடுத்த ரமலான் மாதம் பிறப்பதற்குள் திரும்ப நோற்றாக வேண்டும். உடல் தளர்ந்து நிச்சயம் நோன்பை நோற்க முடியவே முடியாது என்ற நிலையிலிருக்கிற முதியவர்களுக்கே நோன்பிலிருந்து விலக்கு இருக்கிறது. மற்றவகையில் பருவ வயது தொட்ட அனைவரும் அவசியம் நோன்பு நோற்க வேண்டும்.
குர்ஆன் இறங்கிய மாதம்: "ரமலான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)தென்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், நேரான வழியைத் தெளிவாக்கக் கூடியதும், நன்மை தீமைகளைப் பிரித்தறிவிக்கக் கூடியதுமான திருகுர்ஆன் அருளப்பெற்றது", என அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான். இந்த ரமலான் மாதத்தில்தான் முஸ்லிம்களின் புனித வேதமான அல்குர்ஆன் அருளப்பட்டது. இம்மாதத்தின் கடைசி பத்துநாட்களில் உள்ள "லைலத்துல் கத்ர்" எனும் ஓர் இரவில்தான் குர்ஆன் இறக்கப்பட்டது. இது ஆயிரம் மாதங்களை விட மேலான புனித இரவாகும். இந்த புனித இரவும் ரமலான் மாதத்தில்தான் வருகிறது. நாம் செய்த பாவங்களுக்கெல்லாம் மன்னிப்புக் கிடைக்கிற மேன்மையான மாதமாகவும் இம்மாதம் இருக்கிறது.
"உங்கள் ரட்சகனிடம் நீங்கள் பாவ மன்னிப்பு கோருங்கள் (உங்கள் பாவங்களை விட்டு மனம் வருந்தி) அவன் பாலே திரும்புங்கள் நிச்சயமாக ரட்சகன் அருளாளனும் அன்புள்ளவனுமாகவும் இருக்கிறான்", என்று அல்லாஹ் கூறுகின்றான். இந்நாட்களில் கேட்கப்படும் பாவமன்னிப்புகளால் நாம் நம்மை கழுவிக்கொண்டு சுத்தமாக சுகப்படும் வல்லமை நிச்சயம் கிடைக்கும். தாகித்தும், பசித்தும், கெட்ட செயல்பாடுகளில் தனித்தும் இருந்து அல்லாஹ் மீதான அச்சத்தோடு நாம் நோற்கும் இந்த நோன்பு, நமக்கான மறு உலக வாழ்வை மட்டுமல்லாது, உலக வாழ்க்கையிலும் இனிமை சேர்க்கும்.
பாவங்களில் இருந்து விடுதலை
கடவுள் மீது பயம் இருக்க வேண்டியது ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய கட்டாய பண்பாகும். இந்த பண்பினை நம்மிடம் வளர்ப்பதே ரமலானின் நோக்கமாகும். அதற்கான பயிற்சியை ரமலான் மாதம் முழுமையாக அளிக்கிறது.
அல்லாஹ் குறிப்பிட்ட சில மாதங்களையும், நாட்களையும் சிறப்பாக அமைத்துள்ளான். அவன் உயர்வாக கருதும் மாதங்களில் ரமலான் மாதமும் ஒன்று. பாவ மன்னிப்பு பெறுதல், கடவுளுக்கு பயப்படுதல், பண்பாடு மாற்றம் போன்ற நல்ல பலன்களை உருவாக்குவதில் ரமலான் மாதத்திற்கு பங்கு இருக்கிறது. அல்லாஹ் இதற்காக பல வழிகளை காட்டியுள்ளான். உடல் தேவைகளுக்கும், உணர்வுகளுக்கும் முடிச்சுப் போட்டு மனிதனை வதைப்பதை அல்லாஹ் விரும்புவதே இல்லை. குர்ஆனின் ஒரு இடத்தில், "அல்லாஹ் உங்களுக்கு இலகுவையே விரும்புகிறான். கஷ்டத்தை கொடுக்க விரும்பவில்லை", என வருகிறது. அதே நேரம் நோன்பின்போது பசி, தாகம் ஆகியவற்றை ஒவ்வொரு நோன்பாளியும் அனுபவிக்கிறார்கள். இதுவும் அல்லாஹ் கொடுக்கும் கஷ்டம்தானே என பொருள் கொள்ளக்கூடாது. ஒரு நோன்பாளி தனக்குள் இறைபயத்தை வளர்த்துக்கொள்வதை நோக்கமாகக் கொண்டு பசியையும், தாகத்தையும் அனுபவிக்கிறார். நோன்பின்போது ஏதாவது பாவங்கள் செய்ய நேர்ந்தால், "இப்போது நோன்பு இருக்கிறோம். இந்த நேரத்தில் பாவம் செய்வது தவறு" என்ற எண்ணம் உருவாகும். அந்த நேரத்தில் அல்லாஹ்வின் நினைவு மனிதனுக்கு ஏற்பட்டுவிடுகிறது. எனவே பாவங்களிலிருந்து நோன்பு மனிதனை காப்பாற்றுகிறது. வசதி வாய்ப்புகள் உள்ளவர்கள்கூட நோன்பு நேரத்தில் சாப்பிடுவதில்லை. துளி தண்ணீரும் குடிப்பதில்லை. தொழுகை போன்ற ஒரு வணக்கத்தில் இருக்கின்ற உணர்வால் நோன்பாளி வேறு பாவங்கள் செய்யவும் அஞ்சுகிறார். மாதத்தில் 30 நாட்களும் அவர் இந்த பயிற்சியை பெறுகிறார். எனவே நோன்பு நிகரற்ற ஒரு இறை அச்ச பயிற்சியாகவும் இருக்கிறது.
"நோன்பு நோற்பவர்கள் பொய்யான பேச்சுகளையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டுவிட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அவர் உண்ணாமலும், பருகாமலும் இருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை", என்கிறார்கள் நபிகள் நாயகம். இது மட்டுமின்றி, "நோன்பு என்பது உணவையும், தண்ணீரையும், இதர பானங்களையும் தவிர்த்திருப்பது மட்டுமல்ல; நிச்சயமாக நோன்பு என்பது வீண் விளையாட்டுகள், வீண் பேச்சுகளை தவிர்த்திருப்பதாகும். உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும்போது, யாரேனும் திட்டினாலோ, மடத்தனமாக நடந்துகொண்டாலோ 'நான் வீண் வம்புகளில் ஈடுபட மாட்டேன்' என கூறி ஒதுங்கிவிடுங்கள்", என்றும் அவர்கள் கூறுகிறார்கள். "நீங்கள் நோன்பிருக்கும் நாட்களில் வீணாக குரலை உயர்த்தி பேசக்கூடாது. யாராவது சண்டைக்கு வந்தால் 'நான் நோன்பாளி' என கூறி ஒதுங்கிவிடுங்கள்" என்றும் நோன்புகாலத்தில் கடைபிடிக்க வேண்டியது பற்றி அவர் விளக்கமாக சொல்லியுள்ளார்கள். நோன்பு முக்கிய கடமையாகும். எல்லா வகையான பாவங்களிலிருந்தும் நம்மை பாதுகாத்துக்கொள்ள நோன்பு அவசியமாகும். பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு கிடைத்த அரிய வாய்ப்பே ரமலான் நோன்பாகும்.
நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு!
உங்களுக்கு யாராவது ஒரு பொருள் தந்தால், மறக்காமல் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். மனதில் அவரை நன்றியோடு நினையுங்கள். செய்ந்நன்றியை மறக்கவே கூடாது. நபிகள் நாயகம் வாழ்வில் நடந்த ஒரு சிறு சம்பவத்தைக் கேட்டால், "நன்றி" என்ற சொல்லுக்கு இருக்கும் மகத்துவத்தை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். ஒருமுறை நாயகம் ஒரு வீட்டிற்கு சென்றிருந்தார்கள். அவ்வீட்டில் ஒரு குவளை தண்ணீர் வாங்கி குடித்தார்கள். குடித்து முடித்ததும், "இப்போது நான் பருகிய தண்ணீருக்கு அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லாவிட்டால் மறுமை நாளில் இதனைக் குறித்து அல்லாஹ் கேள்வி கேட்பான்", என்றார்கள். இதில் இரண்டு முக்கிய கருத்துகள் ஒளிந்து கிடக்கின்றன.
உலகில் தண்ணீரைப் போல உயர்ந்த பொருள் எதுவுமே இல்லை. மயக்கமடைந்து கிடக்கும் ஒருவன் முகத்தில் தண்ணீர் தெளிக்கிறார்கள். அவன் உடனே கண்விழித்து விடுகிறான். அவனுக்கு சிறிது தண்ணீர் புகட்டுகிறார்கள். அவன் சுதாரித்துக் கொண்டு எழுந்தே விடுகிறான். இது தண்ணீரை பாதுகாக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்துகிறது. இதே தண்ணீரை சிலர் அற்பமாக பார்க்கின்றனர். அவர்களுக்கும் நாயகம் ஒரு கருத்தை சொல்கிறார்கள். "சாதாரண தண்ணீரைத் தானே இறைவன் கொடுத்தான். இது என்ன பெரிய விஷயம்! நமக்கென்ன பொன்னையும், பொருளையுமா அள்ளிக் கொடுத்தான்", என்றும் எண்ணக்கூடாது. கடவுள் நமக்கு அற்பமான பொருளைக் கொடுத்தாலும் கூட காரணத்தோடு தான் கொடுப்பான். நமக்கு இறைவன் துன்பத்தையே தந்தால் கூட, "இந்த துன்பத்தை தந்ததன் மூலம், எனக்கு வாழ்க்கையில் அனுபவப்பாடத்தை கற்றுத் தந்த இறைவா, உனக்கு நன்றி, இந்த துன்பத்தை அனுபவிக்க வைத்ததன் மூலம் என் பாவங்களை குறைத்ததற்காக நன்றி", என்றே சொல்ல வேண்டும்.