எதையெல்லாம் சிந்திக்க வேண்டும்?

ஒரு மனிதன் தினமும் என்னென்ன சிந்திக்க வேண்டும் என்பது பற்றி நபிகள் நாயகம் சொல்கிறார்கள்.

  • மனிதர்கள் செய்த உதவியை சிந்திப்பதை விட இறைவன் செய்த உதவியை சிந்தனை செய்யுங்கள்.
  • நீங்கள் செய்த நன்மைகளைப் பற்றி சிந்திப்பதை விட, செய்த பாவங்கள் பற்றி சிந்தியுங்கள்.
  • நீங்கள் உயிருடன் வாழப் போவதை சிந்திப்பதை விட, வருகின்ற மரணத்தைப் பற்றி சிந்தனை செய்யுங்கள்.
  • மற்றவர்களின் குற்றங்களை நோட்டமிடுவதை விட உங்களின் குற்றங்களை நோட்டமிடுங்கள். உப்பை நீர் கரைப்பது போன்று, நற்குணம் உங்கள் பாவங்களை கரைத்துவிடும். கள்ளின் மண்டி தேனைக் கெடுத்து விடுவது போன்று துர்க்குணம் இறைவனை வணங்கி கிடைக்கும் பலனை கெடுத்து விடும்.
  • உன் வாயிலாக இறைவன் ஒரு மனிதனுக்கு நேர்வழி காட்டுவது இவ்வுலகத்தையும் இதிலுள்ள யாவற்றையும் விட உனக்கு நன்மை பயப்பதாகும்.
  • எவர் அண்டை வீட்டாரை துன்புறுத்துகின்றாரோ அவர் என்னை துன்புறுத்தியவராவார்.
  • அன்பு செலுத்தாதவன் அன்பு செலுத்தப்படுவதற்கு அருகதையற்றவன்.
  • தர்மம் செய்ய இயலாதவன் ஒரு நற்செயல் செய்வானாக. அல்லது ஒரு கெட்ட செயலில் இருந்து விலகிக் கொள்வானாக. அதுவே அவனது ஈகை.
  • உங்களை நம்பி ஒருவன் ஒரு செய்தியைச் சொன்னால், அதை அடைக்கலப் பொருள் போல பாதுகாத்து வையுங்கள்.
  • தன் பிள்ளைகளைப் பிறர் நல்லவிதமாக நடத்த வேண்டும் என்று விரும்புபவர், அனாதைப் பிள்ளைகளை நல்லவிதமாக நடத்த வேண்டும்.
  • ஒரு மனிதன் தன்னுடையவர்களிடத்தில் ஒழுக்கமாக நடந்து கொள்ளுதலே அவர்களை ஒழுக்கமாக நடந்து கொள்ளச் செய்தல் ஆகும்.
  • மனிதன் எதைச் செய்கிறானோ அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்பதைத் தான் இறைவன் கவனிக்கிறான்.
இந்த சிந்தனை மொழிகளை தினமும் படியுங்கள். உங்களுக்குள் நற்குணம் கொடி கட்டி வளரும்.

பள்ளிவாசலில் வீண்பேச்சு எதற்கு?

பள்ளிவாசலின் சிறப்பையும், அங்கே நடந்து கொள்ள வேண்டிய விதம் பற்றியும் நபிகள் நாயகம் சொல்வதைக் கேளுங்கள். ஒருமுறை அவர்கள் வானுலகம் சென்றிருந்த போது, அங்கே சிலர் பன்றிக்கறியை தின்று கொண்டிருந்தனர். "இவர்கள் யார்?" எனக்கேட்டார்கள் நாயகம். அதற்கு ஜிப்ரில் (அலை) அவர்கள், "இவர்கள் பள்ளிவாசலில் அமர்ந்து ஊர்வம்பு அளந்து கொண்டிருந்தவர்கள்", என்று பதிலளித்தார்கள். பள்ளிவாசலுக்குள் உலக விஷயங்கள் பற்றியோ அல்லது வேறு காரியங்கள் குறித்தோ பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், நபிகள் நாயகம் நெருப்பை மிதித்தது போன்ற உணர்வை அடைவார்கள். பள்ளிவாசலை விட்டு உடனே வெளியேறி, பேச வேண்டியதை வெளியில் வைத்து பேசிவிட்டு, மீண்டும் பள்ளிவாசலுக்குள் நுழைவார்கள். இதிலிருந்து, இறைவழிபாட்டால் நன்மைகளைச் சுமந்து செல்வதற்காக பள்ளிவாசல் வருபவர்கள், வீண் பேச்சுகளின் மூலம் பாவமூட்டையை சுமந்து கொண்டு செல்கிறார்கள் என்பதை அவர்கள் உணர வைக்கிறார்கள். அதுமட்டுமல்ல, ஏதாவது ஒரு செயல் கவலை தருமானால், அவர்கள் உடனே தொழுகைக்கு சென்றுவிடுவார்கள். பள்ளிவாசல் பற்றி நபிகள் நாயகம் மேலும் சொல்வதாவது.

  • எமது உம்மத்தவர்களில் (பின்பற்றுவோர்) அல்லாஹ்வுக்கு பயந்தவர்கள் பள்ளிவாசல்களில் தங்கியிருப்பார்கள்.
  • ஒரு காடைக்குருவி போன்ற சின்னஞ்சிறிய பள்ளிவாசலைக் கட்டுபவருக்காக, சொர்க்கத்தில் அல்லாஹ் ஒரு மாளிகையை எழுப்புகிறான்.
  • பாங்கொலி கேட்டு தொழுகைக்கு வராதவர் அநியாயமும், வஞ்சகத்தன்மையும் உடையவர் ஆகிறார்.
இனியாவது பள்ளிவாசலுக்கு செல்லும் போது வீண்பேச்சு வேண்டாம். சரிதானே!

ஆறு கடமைகள்

ஒரு முஸ்லிமுக்கு இன்னொரு முஸ்லிம் ஆற்ற வேண்டிய கடமைகள் ஆறு உள்ளன. என்னென்ன தெரியுமா?
  • ஒருவர் ஸலாம் சொன்னால் அவருக்கு பதில் ஸலாம் சொல்வது.
  • ஒருவர் விருந்துக்கு அழைத்தால் அதை ஏற்றுக்கொள்வது.
  • பிறர் நலம் வேண்டி அவருக்கு அறிவுரை கூறுவது.
  • ஒருவருக்கு தும்மல் வந்து "அல்ஹம்துலில்லாஹ்" (எல்லாப்புகழும் இறைவனுக்கே) என்று சொல்லும் போது, அதற்கு "யர்ஹமுகல்லாஹ்" (அல்லாஹ் உம் மீது கருணை பொழியட்டும்) என்று பதில் சொல்வது.
  • ஒருவர் நோயுற்றால் அவரை நலம் விசாரிப்பது.
  • ஒருவர் இறந்து விட்டால் அவரது ஜனாஸாவுடன் செல்வது.

பணத்தின் மீது மட்டும்தான் பற்றா?

இந்த உலகம் பணத்தின் மீது மட்டும் தான் பாசம் வைத்திருக்கிறது. பணத்தின் மீது பாசம் வைப்பது இவ்வுலகைப் பொறுத்தவரை இன்பமாகத் தெரியும். ஆனால், மறுமை நாளில் இந்த பணத்தாசை ஒருவனை நரகத்தில் தள்ளிவிடும். நபிகள் நாயகம் இதுபற்றி கூறும் போது, "மறுமைநாளில் இறைவன் முன்னிலையில் மனிதன் கொண்டு வரப்படும் போது, பலவீனம், அவமானம் காரணமாக அவன் ஆட்டுக்குட்டியை போன்ற நிலையில் இருப்பான். பிறகு இறைவன் புறத்தில் இருந்து, "நான் உனக்கு செல்வத்தை அள்ளித்தந்து உனக்கு பல பேருதவிகளை செய்தேனே. அவற்றில் நீ எவ்வாறு செயல்புரிந்தாய்?" என்று கேள்வி கேட்கப்படும். அதற்கு அவன், "இறைவா! நான் செல்வத்தை அதிகமாக திரட்டி, அதனைப் பன் மடங்காகப் பெருக்கி, அதை உலகத்திலேயே விட்டு வந்துவிட்டேன். என்னை மீண்டும் உலகத்திற்கு அனுப்பினால், அவை அனைத்தையும் என்னுடன் எடுத்துக் கொண்டு வந்து விடுவேன்", என்று கூறுவான். "சரி...நீ மறுமைக்காக என்ன அனுப்பி வைத்தாய்? அதைக்காட்டு", என்று அடுத்தகேள்வி கேட்கப்படும். அதற்கும் அவன் முந்தைய பதிலையே கூறுவான். இவ்வாறு சொல்பவன் நரகத்தில் தள்ளப்படுவான்", என்கிறார்கள்.

Powered by nasrullah.in - TechnoNasr 2003-2020.
Designed & Developed by Mohamed Nasrullah.M