அளவுக்கு மீறிய சுமையை இறைவன் சுமத்துகிறானா?

"இறைவன் என்றுமே மனிதர்களுக்கு அவர்களது சக்தியை மீறி எந்த சுமையையும் கொடுப்பதில்லை. இறைவனுக்கு கட்டுப்பட்டு அஞ்சி நடக்கும் விஷயத்தில் கூட மனிதனை இறைவன் சிரமப்படுத்தவில்லை", என்கிறார்கள் நபிகள் நாயகம்.


எந்த நாடு என்ற பேதமில்லை

நமது பூர்வீகத்தை ஆராய்வோம். நம் தாத்தா..தாத்தாவுக்கு தாத்தா...இப்படி அடுக்கிக் கொண்டே போனால், என்றோ ஒருநாள் ஒரே ஒரு ஆணும், ஒரே ஒரு பெண்ணும் மட்டும் இருந்திருப்பார்கள். இவர்கள் தான் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். இவர்களில் முதல்வர் தான் ஆதம். இவரிடமிருந்தே எல்லா மனிதர்களும் பிறக்க ஆரம்பித்தனர். எண்ணிக்கை அதிகமாகியதும், நாடு,மொழி, நிறம் என்ற பேதங்களெல்லாம் ஏற்பட்டன. மொத்தத்தில் எல்லோரும் சகோதரர்கள் தான். ஆனால், ஏன் இந்த பேதம் ஏற்பட்டது. இதற்கு விடை தருகிறது குர்ஆன்."அல்லாஹ் இந்த பூமியின் அனைத்துப் பகுதியில் இருந்தும் மண்ணைச் சேகரித்து, அதன் ஒரு பிடியில் இருந்து ஆதமைப் படைத்தான். அதனால் தான் பூமியின் பலதரப்பட்ட தன்மைக்கேற்ப ஆதமின் மக்கள் வந்துள்ளனர். அம்மக்களில் கருப்பர், வெள்ளையர். சிவப்பு நிறத்தவர் என பல பலதரப்பட்ட நிறமுடையவர்களும், நல்லவர், கெட்டவர், மிருதுவானவர்கள், கவலை கொள்பவர்கள் என பலதரப்பட்ட பண்புகளை உடையவர்களும் உள்ளனர்," என அதில் சொல்லப்பட்டுள்ளது. அல்லாஹ் பூமியின் எல்லாப்பகுதிகளிலும் மண்ணைச் சேகரித்ததால், அந்த மண்ணின் நிறத்திற்கேற்ப மனிதனின் நிறம் அமைந்தது. பண்புகளும் மாறுபட்டன. நிறமும், பண்பும் மாறுபட்டிருந்தாலும், எல்லாரும் இறைவனின் குழந்தைகளே என்பதை நினைவில் கொண்டு, பேதங்களை மறந்து ஒற்றுமையாகவும். அமைதியாகவும் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.


பள்ளிவாசல் செல்வோம்!

பள்ளிவாசலுக்கு செல்வதால் ஏற்படும் மகிமைகள் பற்றித் தெரிந்து கொள்வோம்.

  • ஒவ்வொரு மனிதனும் பள்ளிவாசலில் அமர்ந்து விடும் ஒவ்வொரு மூச்சுக்கும் அல்லாஹ் சுவர்க்கத்திலே பல அந்தஸ்துகளை தருகிறான். அவன் மீது வானவர்கள் ஸலவாத்து சொல்கின்றனர். ஒருவன் விடும் ஒவ்வொரு மூச்சுக்கும் பத்து நன்மைகள் எழுதப்படுகின்றன. அத்துடன் பத்து தீமைகள் அழிக்கப்படுகின்றன.
  • பள்ளிவாசலுக்குள் அமர்ந்து தேவையில்லாமல் பேசுவது, வானவர்களின் பிழை பொறுக்குவதை தூரமாக்கி விடும். அவர்களின் நன்மை நிறைந்த துஆவிற்கு பதிலாக, உலகப் பேச்சின் கெட்ட வாடையால், வேதனைகள் வந்து சேரும்.
  • எவர் பள்ளிவாசலை கட்டுகிறாரோ, அவருக்காக அப்பள்ளிவாசலை போன்ற வீடு சொர்க்கத்தில் கட்டப்படுகிறது. இதைவிட பெரிய பாக்கியம் மனிதனுக்கு வேறென்ன வேண்டும்.
  • எந்தப்பகுதியில் பள்ளிவாசல் கட்டப்படுகிறதோ, அதுதான் இறைவனுக்கு மிகப்பிரியமான இடம் ஆகும்.

தற்பெருமை

நபிகள் நாயகத்திடம் அவரது நண்பர் ஒருவர் கேட்டார். "நாயகமே! ஒருவர் நல்ல ஆடைகள் அணிய எண்ணுகிறார். ஏன்...தன் காலணிகள் கூட அழகாக இருக்க வேண்டுமென நினைக்கிறார். இப்படிப்பட்ட செயல்கள் எல்லாம் தற்பெருமை தானே", என்றார். அதற்கு நாயகம், "இல்லை, இதை தற்பெருமை என சொல்ல முடியாது. ஒரு மனிதர் தன்னை அழகுபடுத்திக் கொள்ள நினைப்பதை தற்பெருமையாகக் கருத முடியாது. ஏனெனில், அல்லாஹ் தூய்மையையே விரும்புகின்றான். தற்பெருமையின் பொருள், அல்லாஹ்வுக்கு நாம் அடிபணிந்து வாழ வேண்டிய கடமையை நிறைவேற்றாமல் இருப்பதும், பிற மக்களை இழிவாகப் பேசுவதுமே ஆகும்", என்றார்கள். "நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள். விரும்புவதை அணியுங்கள். ஆனால், ஒரு நிபந்தனை. உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக் கூடாது", என்கிறார்கள் நாயகம்.

Powered by nasrullah.in - TechnoNasr 2003-2020.
Designed & Developed by Mohamed Nasrullah.M