அறிவுரை கூறும் தகுதி

நபிகள் நாயகத்திடம் ஒரு பெண்மணி தன் உறவுப்பையனை அழைத்து வந்தார். "ஐயா! இந்தப் பையன் அளவுக்கதிகமாக இனிப்பு சாப்பிடுகிறான். இப்படி சாப்பிட்டால் உடல்நிலை கெட்டு விடும் என புத்திமதி சொல்லுங்கள்", என வேண்டிக் கொண்டார். நாயகம் அப்பெண்ணிடம், "அம்மணி! தாங்கள் இப்போது அவனை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். மூன்று நாட்கள் கழித்து வாருங்கள்", என்றார்கள். அப்பெண்ணும் மூன்று நாள் கழித்து நாயகத்தின் இல்லத்திற்கு வந்தார். அந்தப் பையனை அருகில் அழைத்த நாயகம், "தம்பி! இனி இனிப்பை அதிகமாக சாப்பிடாதே. உடல்நிலை கெட்டுவிடும்", என்றார்கள். அந்தப் பெண்ணுக்கோ கோபம். "இதை நீங்கள் அன்றே அவனிடம் சொல்லியிருக்கலாமே! இன்னொரு தடவை ஏன் என்னை அலைய வைத்தீர்கள்", என்றார். நாயகம் மிகவும் சாந்தமாக, "அம்மா! தாங்கள் கோபிப்பது சரிதான். ஆனால், அன்று நான் அவனுக்கு புத்திமதி சொல்லும் தகுதியில்லாமல் இருந்தேன். ஏனெனில் எனக்கே இனிப்பு பண்டம் சாப்பிடும் பழக்கம் அதிகமாக இருந்தது. இந்த மூன்றுநாளாக கஷ்டப்பட்டு முயன்று இனிப்பு பண்டம் பழக்கத்தை கைவிட்டேன். என்னிடமே அந்த வழக்கம் இருந்தபோது, எனக்கு மற்றவர்க்கு அறிவுரை கூறும் தகுதியில்லாதவன் ஆகி விடுகிறேன். எனவே தான் அன்று சொல்லவில்லை", என்றார்கள்.


வயதான பெற்றவர்களைக் கவனியுங்கள்

நபிகள் நாயகத்தின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைக் கேளுங்கள். ஒருமுறை நாயகம் மதினா நகரில் உலா வந்து கொண்டிருந்த போது தோட்டம் ஒன்றைக் கடந்து சென்றார்கள். தோட்டத்திற்குள் ஒரு வயதான ஒட்டகம் நின்றது. அதன் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது. நாயகம் ஒட்டகத்தின் அருகில் சென்றார்கள். அதை அன்புடன் தடவிக் கொடுத்தார்கள். அதன் கண்ணீரைத் துடைத்தார்கள். அந்த ஒட்டகம் அவரை ஏக்கப் பார்வை பார்த்தது. அதன் வயிறு ஒட்டி உலர்ந்திருந்தது. சாப்பிட்டு சில நாட்களாவது ஆகியிருக்க வேண்டும். நாயகம் அதன் நிலையைப் புரிந்து கொண்டார்கள். அவரது தோழர்களிடம், அந்த ஒட்டகத்திற்கு சொந்தக்ககாரரை அழைத்து வரச்சொன்னார்கள். அவர் வந்ததும், "இந்த ஒட்டகம் உங்களுடையது தானே", என்றார்கள்.அவர் "ஆம்" என தலையசைக்க, "அப்படியானால், இதை கவனிக்காமல் ஏன் விட்டு வைத்திருக்கிறீர்கள்?" என்றார்கள். "இதற்குத் தான் வயதாகி விட்டதே. இதனால் இனி எப்படி உழைக்க முடியும்?'' என்றார் சொந்தக்காரர். "அப்படி சொல்லாதீர்கள். இதன் இளமைக்காலத்தில் உங்களுக்காக எவ்வளவோ உழைத்து செல்வத்தை ஈட்டித் தந்திருக்கிறது. அந்த நன்றியை நீங்கள் மறக்கக்கூடாது. இதை பட்டினி போட்டு கொடுமை செய்தால் உங்களுக்கு கடவுள் கடுமையான தண்டனை தருவார்", என்றார்கள் நாயகம். ஒட்டக சொந்தக்காரர் பேச முடியாமல் தலை குனிந்தார். பின்னர் இவ்வாறு நடந்து கொள்ள மாட்டேன் என உறுதியளித்தார். விலங்குகளுக்கு மட்டும் நாயகம் செய்த இந்த சேவை இக்காலத்தில் மனிதர்களுக்கும் பொருந்தும். நமது பெற்றோர் இளமையாக இருந்த காலத்தில் நமக்காக கடும் உழைப்பை ஈந்தனர். அவர்களே நமக்கு உணவும், உடையும், கல்வியும் அளித்தனர். அவர்களுக்கு வயதான பிறகு பிள்ளைகள் அந்த நன்றியைச் செலுத்த வேண்டும். அவர்களை ஆறுதலாக பார்த்துக் கொண்டால், அவர்களின் நல்லாசியுடன் இறுதிவரை இனிமையாக வாழ்வோம்.


குர்ஆன் பொன்மொழிகள்

  • அல்லாஹ் தனது அருளிலிருந்து தங்களுக்கு வழங்கியவற்றில் எவர்கள் கஞ்சத்தனம் புரிகின்றார்களோ, அவர்கள் அதனைத் தமக்கு நல்லது என எண்ணிவிட வேண்டாம். மாறாக, அது அவர்களுக்கு மிகவும் கெட்டதாகும். தமது கஞ்சத்தனத்தின் மூலம் அவர்கள் சேமித்து வைத்தவை எல்லாம் மறுமை நாளில் அவர்களின் கழுத்தில் விலங்காகப் பூட்டப்படும். வானங்களும் பூமியும் அல்லாஹ்வுக்கே உரித்தானவையாய் இருக்கின்றன. மேலும் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கிறான்.
  • மது மற்றும் சூதாட்டம் இரண்டிலும் பெருங்கேடு இருக்கிறது. அவற்றினால் ஏற்படும் பாவம் அவற்றின் பயனை விட அதிகமாக இருக்கிறது.
  • இறைநம்பிக்கையாளர்கள் ஒருவர் மற்றவருக்கு சகோதரர் ஆவார்கள். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே தொடர்பைச் சீர்படுத்துங்கள். மேலும் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் மீது கருணை பொழியப்படக்கூடும்.

சொர்க்கத்தை பார்க்க முடியாதவர்கள் யார்?

சொர்க்கத்தின் பக்கம் தலை வைக்க முடியாதவர்கள் ஏழு வகையினர் இருக்கிறார்கள். அவர்கள் யார் தெரியுமா?
  • மோசடி செய்பவர்கள்,
  • கஞ்சர்கள்,
  • கொடுத்த தர்மத்தைச் சொல்லிக் காட்டுபவர்கள்,
  • மது அருந்துவோர்,
  • வட்டி வாங்கி சாப்பிடுவோர்,
  • அனாதையின் சொத்தை சாப்பிடுபவர்,
  • பெற்றோருக்கு எதிராக நடந்தவர்
  • ஆகிய ஏழு வகையினரும் சொர்க்கத்திற்குள் நுழைய முடியாது என்கிறது இஸ்லாம்.
Powered by nasrullah.in - TechnoNasr 2003-2020.
Designed & Developed by Mohamed Nasrullah.M