இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்


NATIONAL EDUCATIONAL DAY
11 NOVEMBER
BIRTH ANNIVERSARY OF MAULANA ABUL KALAM AZAD
Every individual has a right to an education that will enable him to develop his faculties and live a full human life

நமது நாட்டின் கல்வித் துறையை வடிவமைத்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு. சுதந்திர இந்தியாவின் முதல்கல்வி அமைச்சராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள் இத்துறையை வழிநடத்திச் சென்றார்.

ஆசாத் அவர்கள்தான் தேசக் கல்வி முறைக்காக முதலில் குரல் எழுப்பியவர். தேசகல்வி கொள்கைக்கு (1986) இதுதான் அடிப்படையாக விளங்குகிறது. இந்த கொள்கை 1992 இல் புதுப்பிக்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும், சாதி, மத இட, பால் பாகுபாடின்றி தரமான கல்வியை குறிப்பிட்ட நிலை வரை அளிக்க வேண்டும் என்று ஆசாத் வலியுறுத்தினார். அனைத்துக் கல்வித் திட்டங்களும், மதச்சார்பற்ற மதிப்பீடுகளுக்கும், அரசியல் அமைப்பு சட்டத்தின் கட்டமைப்பிற்கும் ஏற்றவாறு இருக்க வேண்டும் என்பதில் ஆசாத் உறுதி காட்டினார்.

10+2+3 என்ற பொதுவான கல்வி முறையை இந்தியா முழுவதிலும் பரவலாக்க அவர் விரும்பினார். இலவச கல்வி உரிமை மசோதா மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ள இத்தருணத்தில் மௌலானா ஆசாத் இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். இந்த மசோதா இலவச, கட்டாயக் கல்வியை அடிப்படை உரிமையாக்கியுள்ளது.

நமது நாட்டின் செல்வம் வங்கிகளில் இல்லை, ஆரம்ப பள்ளிகளில் உள்ளது என்று சொன்னவர் அவர். 1888ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி, மௌலானா கைருதீனுக்கும், அலியாவுக்கு மகனாக, மெக்காவில், மௌலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்தார். 10 வயதிலேயே குர்ஆனை கற்றுத் தேர்ந்தார். 17 வயதில் இஸ்லாமிய உலகில் பயிற்சி பெற்ற ஆன்மீகவாதியாக அறியப்பட்டார். கெய்ரோவில் உள்ள அல் அஸார் பல்கலைக்கழகத்தில் அவர் கற்ற கல்வி அவரது அறிவை விசாலமாக்கியது. அவரது குடும்பம் கல்கத்தாவில் குடியேறிய பின்பு லிசான்-உல்-சித்க் என்ற இதழைத் துவக்கி நடத்தினார்.

1905 இல் வங்கப் பிரிவினையின் போது ஆசாத் அரசியலில் நுழைந்தார். நடுத்தரவர்க்க இஸ்லாமிய சமூகத்தினர் பிரிவினையை ஆதரித்த போது, அவர் கடுமையாக எதிர்த்தார். அரவிந்த கோஷ், சியாம் சுந்தர் சக்கரவர்த்தி ஆகியோருடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். இந்தியா ஒன்றுபட்ட நாடாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு பிறகு இந்தியா சுதந்திரத்தை வெல்கிறது. (INDIA WINS FREEDOM) என்ற பிரசித்தி பெற்ற நூலை எழுதினார். சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட ஆசாத், சிறையில் பல ஆண்டுகளைக் கழித்தார். இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய தலைவராக விளங்கினார். 1920 இல் திலகரையும், மகாத்மா காந்தியையும் சந்தித்தார். இச்சந்திப்பு அவர் வாழ்க்கையின் திருப்புமுனையாக இருந்தது. காந்தியடிகள் கிலாபத் இயக்கத்தைத் துவக்கினார்.

முஸ்லீம் லீக் கட்சி காந்தியின் உண்ணாவிரதத்தை புறக்கணித்தபோது ஆசாத் காந்தியுடன் இணைந்து முனைப்புடன் பணியாற்றினார். 35வது வயதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக உயர்ந்தார். அக்கட்சியின் இளம் வயது தலைவரும் அவரே. 1942 இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிம்லாவில் 1946 இல் நடைபெற்ற கேபினட் மிஷன் பேச்சு வார்த்தைகளிலும் முக்கிய பங்காற்றினார்.

காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் 1947 இல் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்த போது, அதற்கு எதிராக ஆசாத் உண்ணாவிரதம் இருந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்தபின் மௌலானா அபுல் கலாம் ஆசாத் முதல் கல்விஅமைச்சராக பொறுப்பேற்றார். 1947 முதல் 1958 வரை அவர் இந்தப் பதவியில் இருந்தார். சாகித்திய அகாடமி (1954), லலித் கலா அகாடமி (1954), கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் உள்ளிட்ட பல பிரபல அமைப்புகளை ஆசாத் உருவாக்கினார்.

ஆங்கிலேய ஆட்சியில் இந்திய கல்வியில் கலாச்சாரம் தொடர்பான அம்சங்கள் குறைவாக இருந்ததை உணர்ந்த அவர், அவற்றை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார். கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் தலைவராக இருந்த ஆசாத், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய மாநில கல்வி முறைகளில் சீர்திருத்தங்கள் செய்ய பரிந்துரைத்தார். 14 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பெண் கல்வி, தொழிற் பயிற்சி, வேளாண் கல்வி, தொழில்நுட்ப கல்வி உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை பரிந்துரைத்தார். பல்கலைக் கழகங்களுக்கு கல்வித்துறை சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்பும் உள்ளது என்று கூறினார். வயது வந்தோருக்கான கல்வித் துறையில் ஆசாத் ஒரு முன்னோடியாக இருந்தார்.

உருது, பார்சி, அரபு மொழிகளை கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும் தேசிய மற்றும் சர்வதேச தேவைகளை முன்னிட்டு ஆங்கில மொழியை தொடர்ந்து பயன்படுத்தச் செய்தவர் ஆசாத். ஆரம்பக் கல்வி தாய் மொழியிலேயே இருக்க வேண்டும் என்றார். தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சிலை வலுவான அமைப்பாக மாற்றினார்.

1951 இல் காரக்பூரில் இந்திய தொழில்நுட்ப பயிலகம் (ஐஐடி) அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பம்பாய், சென்னை, கான்பூர்,தில்லி ஆகிய நகரங்களிலும் ஐ.ஐ.டி.கள் அமைக்கப்பட்டன. தில்லியில் 1955 இல் திட்டமிடுதல் மற்றும் கட்டிட கலைக்கான பள்ளி ஏற்படுத்தப்பட்டது. மதவாதத்தை ஒரேடியாக குழி தோண்டிப் புதையுங்கள் என்பதுதான் ஆசாத் மாணவர்களுக்கு எப்போதும் கூறும் அறிவுரையாகும். மாணவர்களின் ஒழுக்கமின்மை குறித்து அவர் வேதனைப்படுவார்.

1954 இல் கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியகூட்டத்தில் பேசும் போது, எந்த காரணமுமின்றி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து மிகவும் வேதனைப்படுவதாகவும், இத்தகைய போராட்டங்கள் தேசத்தின் கலாச்சார வேரை அசைத்துப் பார்ப்பதாகவும் அவர் வருத்தப்பட்டார். இன்றைய மாணவர்கள் நாளைய அரசியல் தலைவர்கள், அவர்களுக்கு முறையான பயிற்சிகளை அளிக்காவிட்டால் தேசத்திற்கு தேவையான தலைமைத்துவம் கிடைக்காமல் போய்விடும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார் ஆசாத்.

அரபு, உருது, பார்சி ஆகிய மொழிகளில் மௌலானா அபுல் கலாம் ஆசாத் பல நூல்களை எழுதியுள்ளார். குர்ஆனை அரபு மொழியிலிருந்து பார்சி மொழிக்கு மொழிபெயர்த்தார். 1977 இல் சாகித்திய அகாடமி இதனை ஆறு பகுதிகளாகப் பிரசுரித்தது. மௌலானா அபுல் கலாம் ஆசாத் அற்புதமான ஒரு மனிதர். தனது வாழ்வின் இறுதி வரை இந்து -முஸ்லீம் ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டார்.

நன்றி - ராஜகிரி கஸ்ஸாலி

Powered by nasrullah.in - TechnoNasr 2003-2020.
Designed & Developed by Mohamed Nasrullah.M