நீர்க் கோர்வை, பீனிசம் - Sinus

மண்டையில் நீர்க் கோர்த்து ஆடுவது போன்ற உணர்ச்சியும், குளிர்ச்சியும், தலைவலியும், குத்தல் குடைச்சலும் இருப்பதற்கு எளிய வைத்தியம்.

வேளைக் கீரை என்ற மூலிகையை எடுத்து வந்து இடித்துப் பிழிந்த சக்கையை தலைவலி உள்ள இடத்தில் வைத்து, மேலே ஒரு பானை ஓடு வைத்துக் கட்டி, 15 நிமிடங்கள் பொறுத்து, கட்டவிழ்த்துவிட, சக்கையில் நீர் இருக்கும். எடுத்துப் பிழிய நீர் வரும். இது மாதிரி வாரம் 2 முறை செய்துவர, இந்த நோய் இருக்குமிடம் தெரியாமல் போய்விடும்.

பீனிசம் மட்டுமல்ல, எல்லாவிதமான தலைவலிகளுக்கும் குப்பைமேனி செடியின் இலைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து, சுத்தமான மெல்லிய துணியில் இந்தப் பொடியை சன்னமாக சலித்து, மூக்கினுள் அவ்வப்போது சிறிதளவு உறிஞ்சிவர, தலைவலி போன இடம் தெரியாமல் போய்விடும்.

கீழாநெல்லி, குப்பைமேனி, வேலிப்பருத்தி இந்த மூலிகைச் செடிகளின் தழையை சாறு பிழிந்து, இந்தச் சாற்றின் அளவுக்கு சம அளவில் நல்லெண்ணெய் கலந்து, அடுப்பில் ஏற்றி, சிறு தீயில் காய்ச்ச வேண்டும். இந்த எண்ணெயை சில சொட்டுகள் மூக்கினுள் உறிஞ்சினால் போதும். எப்படிப்பட்ட நாட்பட்ட தலைவலியும், குடைச்சலும் பறந்தே போகும்.

தாய்ப்பாலில் கிராம்பை உறைத்துத் தலையில் பற்று போட்டாலும், தலைவலி நீங்கும்.

நொச்சி இலைகள் 4 கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். சமையல் மஞ்சள் சுண்டு விரல் அளவில் 2 துண்டுகள் எடுத்து, நொச்சி இலையுடன் உரலில் இட்டு, ஒன்றிரண்டாக இடித்து, தண்ணீரில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி, பிறகு அந்த நீரையும் நன்றாகக் காய்ச்ச வேண்டும். செங்கல்லை சிறிய கொய்யாக் காய் அளவில் சிறு துண்டுகளாக உடைத்து, விறகு அடுப்பினுள் போட்டு நன்றாகப் பழுக்கக் காயும் அளவுக்கு சூடாக்க வேண்டும். நொச்சி இலை, மஞ்சள் போட்டுக் காய்ச்சிய நீரை ஒரு உலோக பாத்திரத்தில் வைத்துக் கொண்டு, அடுப்பில் சூடேறிய செங்கல் துண்டுகளை ஒவ்வொன்றாகக் காய்ச்சிய நீரினுள் போட்டு, தலைக்கு மேலாக துண்டைப் போர்த்திக் கொண்டு, முகத்தில் ஆவியைப் பிடித்து, சுவாசத்திலும் உள் இழுக்க வேண்டும்.

தலை நோய், நீர்க் கோர்வை, ஜலதோஷம், சள்ளைக் கடுப்பு இவைகளுக்கு கடுகுப் பற்று உபயோகப்படும். ஒரு சிறிய கரண்டி கடுகு, ஒரு சிறிய கட்டி கஸ்தூரி மஞ்சள், அதே அளவு சாம்பிராணி இவைகளைப் பொடி செய்து, தண்ணீரில் கலந்து, ஓர் இரும்புக் கரண்டியில் கொதிக்க வைத்துச் சூடாக இருக்கும் போது, முன் நெற்றி, முன் மண்டை இவைகளில் பூசி, மறுநாள் காலை தண்ணீர் விட்டுச் சுத்தம் செய்துவிட வேண்டும். கீல் வலி, முழங்கால் வீக்கம், மூட்டுப் பிடிப்பு இவைகளுக்கும் கடுகுப் பற்றுப் போடலாம்.

தலைபாரம், நீரேற்றம் ஆகியன நீங்க, கிராம்பு (இலவங்கம்) 2, சுக்கு ஒரு துண்டு, இரண்டையும் மைபோல் அரைத்து, மூக்கு, நெற்றிப் பொட்டு, ஆகிய இடங்களில் பற்றிட்டு சாம்பிராணி அனல் புகை காட்டிட, அவை விலகும்.

ஜலதோஷம், தலையில் ஏறிக் கொண்டிருக்கும் நீர் போகவும் ஒரு யோசனை.

சாம்பிராணி புகையைப் போட்டுத் தலையைக் காய வைத்துக் கொள்வது போல, ஓமம் சிறிது, மஞ்சள் சிறிது போட்டு, புகையை மூக்கு, தொண்டையில் இழுத்துக் கொண்டால், இத்தொல்லைகள் குறையும்.

தலையில் நீர் கோர்த்துக் கொண்டு அடிக்கடி வரும் தலைவலிக்கு, நல்லெண்ணெயில் தும்பைப் பூவைப் போட்டுக் காய்ச்சி, எண்ணெயுடன் அந்தப் பூவையும் நன்றாகத் தலையில் அழுத்தித் தேய்த்துத் தினமும் குளித்து வந்தால், தலைவலி குணமாகும்.

ஓமம் வாங்கி, அதைத் தூள் செய்து கொள்ளவும். சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து இரண்டையும் சாம்பிராணியுடன் கலந்து வைத்துக் கொண்டு, தலைக்குக் குளிக்கும் போதெல்லாம், இக்கலவையை நெருப்பிலிட்டு வரும் புகையில் தலையைக் காட்டினால், தலையில் நீர்க் கோர்க்காது. தலைவலி வராது.

ஓமம் 50 கிராம், பூங்கற்பூரம் 10 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம், இவற்றைத் தனித் தனியே இடித்துப் பிறகு ஒன்றாகக் கலந்து, சிறிய துணி முடிச்சுகளில் முடிந்து, தினசரி காலை-மாலை-இரவு மூன்று வேளை 10 நிமிடம் முகர்ந்து, மூச்சினை உள்ளுக்கு இழுத்து வர, மெல்ல மெல்ல அந்த முடிச்சில் ஊறிவரும் மருந்துத் தன்மை, மூச்சுக் குழல், மூக்கு, நுரையீரல்களில் உள்ள நுண் காற்றறைகளை சுத்தம் செய்து, சளியைச் கரைத்து வெளியேற்றி, மூக்கடைப்பினை 10 நாளில் கரைத்து விடும். மண்டைப் பீனிசம் என்னும் சைனஸ் நீங்கிவிடும்.

மண்டைப் பீனிசம், நுரையீரல், கபம் காரணமாக மழைக் காலத்திலும், குளிர் காலங்களிலும் அடிக்கடி தொல்லையுறும் ஆண், பெண், குழந்தைகள் அனைவருக்கும் துரித நிவாரணம் - குங்குமப்பூ.

சிறிது குங்குமப்பூவை எடுத்து, கற்பூரம் சிறிது அளவு எடுத்து, இரண்டையும் தேங்காய் எண்ணெய் 20 சொட்டு விட்டு உரைத்து, தலையின் கன்னப் பொட்டு, நெற்றி, மூக்கு, கழுத்துப் புறங்களில் தேய்த்து விடவும். அரை மணி நேரத்தில் வலி குறையும். தலை பாரம் நீங்கும். மூக்கடைப்பு விலகும். தொடர்ந்து செய்து வர, மண்டைப் பீனிசம் விலகும்.

குப்பைமேனிச் செடியின் இலைகளை நிழலில் உலர்த்தி, தூள் செய்து சுத்தமான மெல்லிய துணியில் சலித்து, மூக்கினுள் அவ்வப்போது உறிஞ்சிவர, பீனிசம் மட்டுமல்ல, எல்லாவிதத் தலைவலிகளும், போன இடம் தெரியாமல் போய்விடும்.
Powered by nasrullah.in - TechnoNasr 2003-2020.
Designed & Developed by Mohamed Nasrullah.M