உடல் ஆரோக்கியம் - Health

உடல் பலத்திற்கு

தேரையர் கூறும் தினசரி காயகல்பம்.

காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய்

கடும்பகல் சுக்கு என்பது பகல் உணவில் சுக்கு சேர்ப்பது ஆகும். தேர்ந்த 'மாவு சுக்கு' என்பது எல்லா ஊர்களிலும் கிடைக்கும். பூச்சி அரிப்பு, சொத்தை இல்லாத சுக்கு அரை கிலோ வாங்கி வெயிலில் உலர்த்தி மேல் தோலை சீவி நன்றாக இடித்துப் பொடி செய்து சலித்து 1 பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். பகல் உணவில் 1 பிடி சாதத்துடன், 1 ஸ்பூன் மேற்படி சுக்குப் பொடியைக் கலந்து பிசைந்து சாப்பிடவும். ஒரு மண்டலம் இவ்விதம் சாப்பிட்டு நிறுத்தவும். ஆண்டுக்கு 4 முறை இவ்விதம் சாப்பிடுவது தினசரி காயகல்பமாகும்.

சுக்கு போலவே 'கடுக்காயும்' நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும். இதனை 1 கிலோ வாங்கி உள்ளிருக்கும் கொட்டையை நீக்கிப் பின் உலர்த்தி பொடி செய்து கலந்து வைத்துக் கொள்ளவும். மாலை 6 மணிக்கு அரை ஸ்பூன் அளவு எடுத்து பசும் பாலுடன் அல்லது தேனுடன் கலந்து சாப்பிட, உடல் நோய் அணுகாமல் 'கல்பம்' போல் இறுகும்.

நாள் தோறும் சாப்பிட்ட பிறகு இரண்டொரு நெல்லிக் காய்களை மென்று தின்று வாருங்கள். அத்துடன் தினம் ஒரு முறை ஒரு சிட்டிகை கடுக்காய்ப் பொடியையும் சாப்பிட்டு வரவும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இளமையாக இருக்கலாம்.

கேழ்வரகு மாவுடன் எள்ளும் சிறிது வெல்லமும் சேர்த்து இடித்து அடை செய்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் ஆக இருக்கும்.

காலையில் எழுந்ததும் தேன் 2 ஸ்பூன் எடுத்து கால் டம்ளர் பசும்பாலில் கலந்து பருகவும். இரவில் கொண்டைக் கடலை 1 பிடி எடுத்துத் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் வேக வைத்து, அதனை வடிகட்டி அதில் சீமை அத்திப் பழம் 2, பசும்பால் அரை டம்ளர் கலந்து காய்ச்சி, கல்கண்டு சிறிது சேர்த்து, 7 மணிக்குப் பருகவும்.

ராகி, கோதுமை, புழுங்கல் அரிசி இவற்றை அரை கிலோ எடுத்து லேசாக வறுத்துப் பொடி செய்து, கஞ்சி செய்து, அதில் கால் ஸ்பூன் பொடியைக் கலந்து தினம் 1 வேளை பருகி வரவும்.

எல்லாவற்றுக்கும் மேலாக கீழ்க்கண்ட முறைப்படி கஞ்சி செய்து தினம் ஒரு வேளை கட்டாயம் பருக வேண்டும்.

பாதாம் பருப்பு - 2, பிஸ்தா பருப்பு 5, கசகசா 1 ஸ்பூன் ஆக இம்மூன்றையும் மாலை 3 மணிக்கு கால் டம்ளர் பசும்பாலில் ஊற வைக்க வேண்டும். ஒரு மணி நேரம் ஊறிய பின் அதனை அப்படியே அரைத்து ஒரு டம்ளர் பசும்பாலில் காய்ச்சி பனங்கற்கண்டு சேர்த்துப் பருக வேண்டும். இப்படி 3 மாதம் சாப்பிட, உடம்பு கல் போன்று வலிமை பெறும்.

நீண்ட கால நோயாளிகளுக்கு: கடுமையான நாள்பட்ட நோயால் பாதிக்கப் படுபவர்களுக்கு, அடிக்கடி சோர்வு, தூக்கமின்மை, அதிகமான உஷ்ணம், ஆகியன உண்டாகும். சப்போட்டாப் பழம் தினம் 5 சாப்பிட்டு பால் அருந்தி வர, தூக்கமும் குளிர்ச்சியும் உண்டாகி, உடலில் போதுமான சக்தி வளர்ந்து, விரைவில் சுகம் பெறுவர்.

வெகு நேரம் உட்கார்ந்து, வேலை செய்பவர்களுக்கு (வியாபாரம் செய்பவர்கள்) நோய்கள் அணுகாமலிருக்க: வாரம் 2 முறை பிரண்டைத் துவையலும், 15 நாளைக்கு ஒரு தரம் அகத்திக் கீரையும் உணவில் சேர்ப்பதுடன், விடியற்காலை 1 மைல் குறு நடையில் பயிற்சி செய்தல். அப்படி இன்றி உட்கார்ந்த இடத்தில் இருந்து வந்தால், பெருங்குடல் அசைவின்றி முதலில் மூலச்சூடு உண்டாகி, மூலம், பௌத்திரம் நோய்கள் உண்டாகிவிடும்.

மயக்கம்: அதிமதுரம், சிறுதேக்கு, பனங்கற்கண்டு, வகைக்கு 20 கிராம் சிதைத்துப் போட்டு, 200 மில்லி தண்ணீர் விட்டு கொதிக்கக் காய்ச்சி, 100 மில்லியாக சுண்ட வைத்த குடிநீரை தினமும் காலை உட்கொள்ள மயக்கம், தாகம், உட்சூடு, மூர்ச்சை போட்டு மயக்கத்தால் கீழே விழுதல் ஆகியன நீங்கும்.

களைப்பும், இளைப்பும்: சிலர் சிறிது தூரம் நடந்தால் போதும், களைத்து விடுவார்கள். சிலர் கொஞ்ச தூரம் வேகமாக நடந்தால் போதும், களைத்துப் போவார்கள். அது மட்டுமல்ல, மூச்சுத் தடுமாற்றமும் ஏற்படும் ஒரு சிலருக்கு உட்கார்ந்து எழுவதில் கை, கால்களை மடக்கி நீட்டுவதில் சிறிது சிரமம் ஏற்படும். ஒரு சிலருக்கு உடல் கனமாக இருப்பது போன்ற மன உணர்வும் தளர்வும் இருக்கும். இவர்களுக்கு இப்படிப் பட்ட நோய் ஏற்பட முக்கியக் காரணம் விட்டமின் 'பி' காம்ப்ளக்ஸ் குறைவே ஆகும். கீழ்க்கண்டவைகளை இவர்கள் பச்சை ஆகவும், முறையாகச் சமைத்தும் உண்டு வந்தால், நோயும் தணியும், நோய் வராமலும் நிச்சயம் தடுக்கலாம்.

முளைக்கீரை, அகத்திக் கீரை, சிறுகீரை, முள்ளங்கிக் கீரை, தூதுவளை, மணத்தக்காளி, பச்சைக் கொத்துமல்லிக் கீரை, தண்டுக் கீரை, பெரிய வெங்காயம், வேர்க்கடலை, பச்சைப் பட்டாணிக் கடலை, பச்சைப் பயறு, கைக் குத்தல் அரிசி ஆகியவற்றில் விட்டமின் 'பி' காம்ப்ளக்ஸ் நிறைந்து இருக்கிறது.

உடல் இளைக்க

நம் நாட்டில் பொற்கொடி என்னும் பொற்றாலைப் பாவை என்னும் கரிசலாங்கண்ணியை அடிக்கடி பருப்பு, நெய் சேர்த்து பொரியல், குழம்பு கடையல் ஆக உணவு பதார்த்தமாக உண்பது வழக்கம். இதனால் உடம்பில் தேங்கிய கெட்ட நீர்கள் வெளியாவதுடன் உடல் பலம் பெற்று மலச்சிக்கல் நீங்கி புத்திக்குத் தெளிவும், ஆரோக்கியமும் தரும். உடல் கனமும், பருமனையும், தொந்தியையும் கறைக்க விரும்புபவர்கள் நாள் தோறும் பகல் உணவில் இரண்டு முதல் நான்கு வாரம் தொடர்ந்து உண்டுவர, நல்ல பலனுண்டு.

வாழைத் தண்டு, வெள்ளை முள்ளங்கி இவைகளைப் பொடியாக நறுக்கி, எலுமிச்சைச் சாறு, உப்பு இவை சேர்த்து, பச்சையாக வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வர, அங்கங்கே விழும் சதை மடிப்புகள் மறையும்.

வாழைத் தண்டை வாரத்திற்கு இரண்டு முறையாவது உணவுடன் சேர்த்துக் கொள்ள உடல் பருமன் குறையும்.

உடற்பருமன் ஏற்பட்டு விட்டதா? ஆமணக்குச் செடி வேரைக் கொண்டு வந்து, நன்றாகப் பொடித்து, அத்துடன் தேனைக் கூட்டிப் பிசைந்து, ஒரு டம்ளர் தண்ணீரில் அப்படியே ஊற வைத்து விடுங்கள். இரவு முழுவதும் ஊறினதும், காலையில் அதைக் கலக்கி வடிகட்டி அந்த நீரை மட்டும் சாப்பிட்டு வாருங்கள். நாலு வாரத்திற்குள் உங்களுக்கு நல்ல பலன் தெரியும்.

பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவரம் பருப்புடன் மிளகு சேர்த்து சமைத்து உண்டு வந்தால், 3 மாதங்களில், பெருத்த உடல் பருமன் குறைந்து, நல்ல கெட்டியடைந்து ஆரோக்கியமடையும். நல்ல தேஜஸூம், வீரிய விருத்தியும் உண்டாகும். நேத்திர ரோகமும் விலகும்.

தூல சரீரம் கறைந்து கெட்டிப்பட நில ஆவாரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துத் தூளாக்கி, துணியில் சலித்து, ஒரு ஜாடியில் போட்டு வைத்துக் கொண்டு, தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் போதும். தன்னில் தானே, உடல் வற்றிக் கெட்டிப் படும்.

பச்சை வாழைத் தண்டை நறுக்கி, அதில் எலுமிச்சைச் சாற்றினைக் கலந்து சாப்பிட்டு வந்தால், உடல் பருமன் குறையும்.

காலையில் எலுமிச்சைப் பழச் சாற்றை உப்பு சேர்த்துக் கலந்து, ஒரு மாதம் வரை வெறும் வயிற்றில் அருந்தினால், தேவையற்ற கொழுப்புச் சத்தும், ஊளைச் சதையும் குறையும். ரத்தமும் சுத்தப் படும்.

அகில் கட்டையை பசும்பால் விட்டு சந்தனம் அரைப்பது போல அரைத்து, அதை உடம்பில் பூசிக் கொள்ள, உடல் தளர்ந்து சதையெல்லாம் தொள தொள என்று ஆடும், தசை நார்கள் கெட்டிப்படும்.

கொழுப்பு உணவையும், அரிசி உணவையும் குறைத்துக் கொண்டு தினம் எலுமிச்சம்பழச் சாறு 1 அவுன்ஸ், தேன் அரை அவுன்ஸ், தண்ணீர் 4 அவுன்ஸ் மூன்றையும் கலந்து, சிறிது சூடு செய்து, காலையில் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு வர, எடை குறையும்.

50 கிராம் கொள்ளு எடுத்து, 400 மில்லி தண்ணீரில் இரவே ஊற வைத்து விடவும். காலையில் அதைக் கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் கால் தேக்கரண்டி இந்துப்பு சேர்த்துக் குடிக்கவும். அதே போல் காலையில் ஊற வைத்து, மாலையில் கொதிக்க வைத்து வடிகட்டி, இந்துப்பு சேர்த்துச் சாப்பிடவும். ஒரு மாதத்தில் தூல சரீரம் இளைக்கும்.

வாழைத்தண்டு சூப் - வாழைத்தண்டை சிறு துண்டுகளாக வெட்டி, மிளகு, சீரகம், பூண்டு, சிறிது எலுமிச்சை பழச் சாறும் (ஒரு அவுன்ஸ்) சூப்பிற்கு ஒரு தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாறு கலந்தால், போதுமானது) கலந்து, மூடிக் கொதிக்க வைத்து, உப்பிட்டு முறைப்படி தாளித்துக் கொள்ளவும். இதனை காலை, பகல் உணவுக்கு முன் அருந்தவும். உடல் கனம் குறையும். இரத்த அழுத்தம் கூடுதலானவரகளுக்கு மிகவும் சிறந்த உணவு இது.

வேறு முறை சூப் - வாழைத் தண்டை இடித்துத் தேவையளவு சாற்றை எடுத்து, மண் சட்டியில் ஊற்றிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, இவைகளைத் தட்டிப் பச்சைக் கொத்தமல்லியும் போட்டு மூடிக் கொதிக்க விட்டு, இறக்கிச் சிறிது எலுமிச்சம்பழச் சாற்றைக் கலந்து உப்பிட்டு அருந்தி வரலாம். 3 மாதங்களில் உடல் கனம் குறையும்.

கல்யாண முருங்கை என்ற முள் முருங்கை இலைச் சாற்றைத் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று மாதங்கள் காலை, மாலை 2 வேளையும் 40 மில்லி அளவு அருந்தி வர, மிகப் பருத்த உடலை இளைக்கச் செய்யும். மலட்டு நோயையும் நீக்கும்.

உடல் பருமன் குறைய, பொதுவாக உடற்பயிற்சி அவசியம் தான். ஆனாலும் அடிவயிறு, பருத்து இருந்தால், குறைக்க மருந்தும் தேவை. சிறு கீரை, தண்டுக் கீரை, இவைகள் சதையைக் குறைக்கும். பார்லி குடிநீர் உடம்பிலுள்ள நீரைக் கரைக்கும். தினமும் காலை, மாலை குனிந்து நேராக நிமிரும் உடற்பயிற்சி 15 நிமிடம் செய்ய, அடி வயிறு கரையும்.

உடல் பருமனைக் குறைக்க, கொள்ளு அரை கிலோ லேசாக வறுத்து இடித்து சலித்துக் கொண்டு, தினமும் காலை மதியம் மாலை ஆகிய 3 வேளையும் ஒரு தேக்கரண்டி அளவு வாயில் போட்டு பொறுமையாக தண்ணீர் குடித்தால், ஊளைச் சதை குறைந்து, உடல் கெட்டிப்படும். "இளைத்தவனுக்கு எள்ளும், கொழுத்தவனுக்குக் கொள்ளும் கொடு" என்பது பழமொழி.

Powered by nasrullah.in - TechnoNasr 2003-2020.
Designed & Developed by Mohamed Nasrullah.M