தலை - Head (5)

சிந்தினீர்க் கண்டம் தெறிசுக்கு தேன் அளாய மோந்தபின் யார்க்கும் தலைக் குத்தில் - 'திருவள்ளுவமாலை'


சர்க்கரை, சுக்குத் துண்டு, தேன் இந்த மூன்றையும் கலந்து மோந்தால், யாருக்கும் தலைவலி இல்லாமல் போகும்.

மருதோன்றி இலையைத் தேவையான அளவு எடுத்து, அம்மியில் வைத்து மை போல அரைத்து, வலியுள்ள பக்கம் ஒரு ரூபாய் அகலம், ஒரு ரூபாய் கனத்திற்கு பற்றுப் போட வேண்டும். போட்ட கால் மணி நேரத்தில் தலைவலி குணமாகும்.

வெள்ளை மிளகு 15, அருகம்புல் ஒரு பிடி, பசும்பால் 50 கிராம் (அல்லது அரை டம்ளர்) - மூன்றையும் நன்கு மை போல் அரைத்து குளிர்ச்சி மாறும் அளவுக்கு மட்டும் அடுப்பில் வைத்து சூடேற்றவும். அதிகம் சூடானால் பலன் இல்லை. காலையில் நன்றாகத் தலைக்குத் தேய்த்து அரை மணி ஊற வேண்டும். பின்பு கடலை மாவினால் தேய்த்துக் குளிக்க வேண்டும். தொடர்ந்து 21 நாட்கள் இவ்வாறு செய்தால், தலைவலி வருவதே இல்லை.

குப்பை மேனி கீரையின் சாற்றில் சுக்கு தேய்த்து, 'பற்று' போட்டுக் கொண்டால் அரை மணியில் தலைவலி இருந்த இடம் தெரியாது.

கருப்பு மிளகு 10, கல் உப்பு 4, இவற்றைத் துளி நீர் விட்டு, அம்மியில் மை போல் அரைத்து, 'பற்று' போட்டால், தலை வலி போன இடம் தெரியாது.

வெள்ளை எள்ளுடன் எருமைப் பாலை சேர்த்து அரைத்து, இளங் காலை நேரத்தில் நெற்றியில் பற்று போட்டுக் கொண்டு, சூரிய வெளிச்சத்தில் நின்றால் குணமாகும்.

முழு மிளகாய் 175 கிராம் பொறுக்கி எடுத்து, அதில் 1 லிட்டர் சுத்த நீர் விட்டுக் கால் பங்காகக் காய்ச்சி இறக்கவும். அதில் 350 கிராம் சுத்தமான நல்லெண்ணெய் விட்டுக் கலக்கி, 20 கிராம் மிளகுடன் பசும்பால் விட்டு அரைத்துக் கலக்கிய விழுதையும் போட்டு அடுப்பில் ஏற்றவும். நெய் போல் பதமான உடன் இறக்கி வைத்துக் கொள்ளவும். இளங்காலை நேரத்தில் இதைத் தேய்த்து நீராடி வந்தால், ஒற்றைத் தலைவலி நீங்கும்.

வேப்பம் பட்டை - 5 பலம், கஸ்தூரி மஞ்சள், பூண்டு, மிளகு, சீரகம் - வகைக்கு ஒரு பலம், சாம்பிராணி - அரை பலம், இவைகளை இடித்துத் தூளாக்கி, ஒரே மாட்டின் பசும்பால் 1 படி, நல்லெண்ணெய் ஒன்றரை படி சேர்த்து, யாவும் கலந்து காய்ச்சி, முருகு பதம் வரும்போது இறக்கி, ஆறினவுடன் வடிகட்டி வைத்துக் கொண்டு, குளித்து வந்தால், மண்டையிடி, பீனிசம், வாத ரோகங்கள், பாரிச வாயு தொந்தரவு உடையவர்கள், சீதள ரோக சம்பந்தமுடையவர்கள், சர்ம ரோகத்தில் நீண்ட நாள் அவஸ்தைப் படுபவர்கள் முதலியவர்களுக்கு நல்ல பலனுண்டு.

தாங்க முடியாத தலைவலிக்கு சுக்கு, கிராம்பு இரண்டையும் சுடுதண்ணீரில் உரைத்து பற்று போட்டுக் கொண்டால் சரியாகிவிடும்.

எப்போது பார்த்தாலும் 'தலை வலிக்கிறது', 'ஒரே தலைவலி' என்று கூறுபவர்கள் பகல் உணவுக்குப் பின் தினசரி 15 பச்சை திராட்சைப் பழங்கள் வீதம் தொடர்ந்து 9 நாட்கள் சாப்பிட்டால் போதும். தலைவலியே உங்கள் பக்கம் வராது.

இஞ்சிச் சாறு 200 மில்லி, அசல் நல்லெண்ணெய் 200 மில்லி, இரண்டும் கூட்டி காய்ச்சி (மெழுகு பதமாக) வடிகட்டி வைத்துக் கொண்டு தலைக்குத் தேய்த்து வாரம் ஒரு முறை குளித்து வர வேண்டும். அதனால் பித்த மயக்கம், ரத்த அழுத்தத்தால் வரும் மயக்கம், மண்டை இடி, வாத நோய்கள் யாவும் நீங்கிப் போகும்.

வெள்ளை வெங்காயச் சாறு 50 மில்லி, புளியாரைக் கீரைச் சாறு 50 மில்லி கலந்து மெல்லிய துணியில் ஊற வைத்து, நெற்றிப் பொட்டில் போட்டு வர, நீங்காத தலையும் நீங்கும்.

கொஞ்சம் மண்ணெண்ணையை விட்டு அதில் மிளகை மைபோல் அரைத்து வலியுள்ள இடத்தில் பற்றுப் போட, தலைவலி குணமாகும்.

மிளகைத் தாய்ப்பாலில் இட்டு அரைத்துக் கொதிக்க வைத்துப் பற்றுப் போட்டு ஓய்வாகப் படுத்திருந்தால் குணம் கிடைக்கும்.

ஓற்றைத் தலைவலி வந்து அவதிப்படுபவர்கள், தேரையர் கூறும் கீழ்க்கண்ட தைலத்தை தயாரித்து, வாரம் 2 நாள் தலை முழுகிவர, கபாலக் குத்தல், கபால சூலை காரணமாக வரும் ஒரு பக்கத் தலைவலி, ஒரு மணடலத்திற்குள் விலகும். பூசணிக்காய், புடலங்காய், முள்ளங்கி, தக்காளி, எலுமிச்சம் பழம், இளநீர் ஆகியன சாப்பிடக் கூடாது. வெள்ளைப்பூண்டு, வலம்புரிக்காய், மாசிக்காய், லவங்கம், கொம்பாக்கு தலா 50 கிராம், இவைகளை பசும்பாலில் அரைத்து, 1 கிலோ நல்லெண்ணையில் கலந்து காய்ச்சி, முறுகு பதத்தில் இறக்கி ஆற வைத்து எண்ணெய் குளியல் செய்யவும்.

ஓற்றைத் தலைவலிக்கு அதிமதுரத்துடன் கால் ஸ்பூன் சீரகம் கலந்து பொடி செய்து தேனுடன் கலந்து தினம் ஒரு வேளை சாப்பிட்டு வர, கோளாறுகள் விலகும்.

டென்ஷன் காரணமா தாங்க முடியாத தலைவலிக்கு 6 வெற்றிலையை அரைச்சு அந்த விழுதை நெத்தியிலே பத்து போட்டு, அரை மணி நேரம் அப்படியே கண்ணை மூடி படுங்க, தலைவலி டாட்டா காண்பித்து ஓடிடும்.

தலைவலி ஜலதோஷத்திற்கு மாத்திரைகள் சாப்பிட்டால், 1 லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, சூடக்கற்பூரம் சிறிசு, மஞ்சள் தூள் அரை டீ ஸ்பூன் போட்டு ஆவி பிடித்தால், தலை வலி உடனே விட்டு விடும்.

காபியில் சில சொட்டுகள் எலுமிச்சைச் சாறு கலந்து பருகிப் பாருங்கள் - தலைவலி உடனே போய்விடும்.

துளசி இலைகளை வாயிலிட்டு மென்றால், தலை வலி குணமாகுமாம். கடுமையான மைக்ரேன் தலைவலிக்கு, கொதிக்கும் நீரில் சில துளிகள் துளசி எண்ணெய் அல்லது சாற்றை விட்டு ஆவி பிடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

துளசி டீ அருந்தினாலும், தலைவலி ஓடிவிடும்.
Powered by nasrullah.in - TechnoNasr 2003-2020.
Designed & Developed by Mohamed Nasrullah.M