தலைவலி
கடுகு, சுக்கு, சாம்பிராணி வகைக்கு 5 கிராம் எடுத்து நசுக்கி ஆமணக்கு எண்ணெய் (விளக்கெண்ணெய்) சிறிது விட்டு அம்மியில் நன்றாக அரைத்து தலையில் வலியுள்ள இடங்களில் பூசி, சிறிது அடுப்பு அனலில் தலையைக் காட்டி, சுமார் 5 நிமிடங்கள் மெதுவாகத் தேய்த்து பின்னர் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாட்கணக்கில் தலைவலி உள்ளவர்கள் இம்முறையை நாள் 1க்கு 3 தடவை செய்து கொள்ள வேண்டும். இதுபோல் மூன்றே தினங்கள் செய்தால் போதுமானது. ஆனால் அதே தினங்களில் சுண்டைக்காய் அல்லது கண்டங் கத்தரிக்காய் குழம்பு வைத்து பகல் உணவுடன் கலந்துண்டு வரவேண்டும்.
இம்மாதிரி நாட்களில் வழக்கமாக உடம்புக்கு பொருந்தும் உணவு முறைகளை மட்டும் கடைப்பிடித்து வர வேண்டும். இரவு ஆகாரம் அரை பாகம் தான் (அளவில்) எடுத்துக் கொள்ள வேண்டும்.
பால் சேர்க்காத கடுங்காப்பி சூடாக ஒரு டம்ளர், அதில் அரை எலுமிச்சைச் சாறு பிழிந்து உடனே அருந்துங்கள். தலைவலி என்றால் என்ன என்று கேட்கத் தோன்றும்.
தலா கால் தேக்கரண்டி சின்ன வெங்காயச்சாறு, கடுகு, சுக்குப்பவுடர் இம்மூன்றையும் வெந்நீர் விட்டு அரைத்து நெற்றியில் பற்று போட்டு 10 நிமிடங்கள் வைத்து பின் சுடுநீரில் கழுவி விட வேண்டும். இதனால் தலைவலி, சளி நீங்கும்.
நெல்லிக்காய் சாறு பிழிந்து சம அளவு விளக்கெண்ணெய் கலந்து நெற்றிப் பொட்டில் வைத்துத் தேய்த்தால் தலைவலி நீங்கும்.
கடும் தலைவலி ஏற்பட்டால் சிறிது பஞ்சை எடுத்து பீட்ரூட் சாற்றில் நனைத்து காதுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.
களிமண்ணை அரைத்து நெற்றிப் பொட்டுகளில் பற்று போடலாம். இம்முறையில் குணமாகாத தலைவலியே கிடையாது.
கடுகும், தொட்டால்சிணுங்கி இலையையும் அரைத்து நெற்றியிலும் உள்ளங்காலிலும் தடவுங்கள்.
நெற்றிப் பொட்டில் (உரோம பாகத்தில் படாதவாறு) சிறிது தேனைத் தடவலாம்.
தலைநோய், நீர்க்கோர்வை, ஜலதோஷம், சள்ளைக்கடுப்பு இவைகளுக்கு கடுகுப்பற்று உபயோகப்படும். ஒரு சிறிய கரண்டி கடுகு, ஒரு சிறிய கட்டி கஸ்தூரி மஞ்சள், அதே அளவு சாம்பிராணி இவைகளைப் பொடி செய்து தண்ணீரில் கலந்து ஒரு இரும்புக் கரண்டியில் கொதிக்க வைத்து, சூடாக இருக்கும்போது, முன் நெற்றி, முன் மண்டை இவைகளில் பூசி மறுநாள் காலை தண்ணீர் விட்டுச் சுத்தம் செய்ய வேண்டும்.
கீல்வலி, முழங்கால், வீக்கம், மூட்டுப்பிடிப்பு இவைகளுக்கும் கடுகுப் பற்று போடலாம்.
ஆலிவ் எண்ணெய் 2 அவுன்சில் இருபது சம்பங்கி அல்லது சண்பக பூக்களை நன்றாய் அரைத்து இந்த விழுதைப் பற்றுப் போட்டால் எவ்விதமான தலைவலியும் நீங்கும்.
அன்னாசிப்பழத்தை நீடித்துச் சாப்பிட்டு வந்தால் வெள்ளை வெட்டை, வாந்தி, தாகம், தீராத்தலைவலி முதலியவை நீங்கும். மேனியழகு உண்டாகும்.
தலைவலி சைனஸ் ஆகியவற்றிற்கு எளிய வைத்தியம் - வேம்பு எண்ணெய் அரை லிட்டரில் கரும்துளசி ஒரு பிடி சேர்த்து மண் சட்டியில் விறகு அடுப்பில் தைலமாகக் காய்ச்சி நெற்றியின் இரண்டு பக்க பொட்டுகளில் தேய்க்கக் குணமாகும்.
பெரிய பூண்டாக இரண்டு எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு அதை நம் இரு காதினுள் அடைத்து வைத்துக் கொண்டால் தலைவலி கப்பென்று நிற்கும்.
ஆறு கிராம்பை எடுத்து பசும்பால் விட்டு விழுதுபட அரைக்கவேண்டும். பின் அதனுடன் மேலும் கொஞ்சம் பால் விட்டு அடுப்பில் கொதிக்க வைத்து, நம் நெற்றியில் ஒட்டுமளவுக்கு கட்டியானவுடன் இறக்கி விடவேண்டும். வெது வெதுப்பாக இருக்கும்போது அதை எடுத்துத் தடவிக் கொண்டால் தலைவலி இறக்கை கட்டிக் கொண்டு பறக்கும்.
வேப்பங்கொட்டையை வெந்நீர் விட்டு கரகரப்பான கல்லில் உரசி அதன் சாற்றைத் தடவினால் தலைவலி நீங்கும்.
தினசரி காலை வெறும் வயிற்றில் அருகம்புல் அரைப்பிடி எடுத்து மிளகு-5, சீரகம் கால் ஸ்பூன் சேர்த்து சிறிது நீர் தெளித்து அரைக்கவும். நெல்லிக்காயளவு உருண்டை போல் வரும். இதை வாயிலிட்டு வெந்நீர் அரை டம்ளர் பருகவும்.
மிளகாய், மிளகு, செம்மண் ஒரு அளவாக எடுத்து தண்ணீர் விட்டு மை போல் அரைத்துக் கொதிக்க வைத்து இளஞ்சூடாகப் பற்று போட தலைவலி குணமாகும்.
தீராத தலைவலிக்கு எண்ணெய்
ந.எண்ணெய் - கால் படி, மிளகாய் வற்றல் – 15, மிளகு - 1 ஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு, வெற்றிலை – 5.
ந.எண்ணெயை இருப்பு சட்டியில் போட்டு மிளகாய் போட்டு, மிளகாய் கறுப்பாகும் வரை காய்ச்சி, பிறகு மிளகு, இஞ்சி துண்டாக்கிய வெற்றிலை போட்டு இஞ்சி வறுபடும் வரை காய்ச்சி இறக்கவும். எண்ணெய் நன்றாக ஆறியதும், மிளகாயைக் கையால் நன்றாக நொறுக்கிப் பிசைந்து, வடிகட்டி பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். வாரம் இருமுறை இந்த எண்ணெயை தலைக்குத் தேய்த்துக் குளித்தால் தலைவலி வராது.
தலைவலி, பித்த மயக்கம் உள்ளவர்கள் மஞ்சள் நிற மாம்பழங்களைத் தோலுடன் சாப்பிடலாம். அல்லது சாறு பிழிந்து அதில் சுக்குப் பொடி கால் ஸ்பூன், ஏலக்காய் - 5, தேன் 1 ஸ்பூன் கலந்து பருகிவரலாம்.
5 கிராம்பை மைபோல் அரைத்து பற்றுப் போட்டால் தலைவலி நிமிடத்தில் சரியாகும்
இஞ்சிச்சாறு, ந.எண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து ஒன்று சேர்த்து காய்ச்சிப் பாடடிலில் பத்திரப்படுத்த வேண்டும். இத்தைலத்தை நன்றாகத் தேய்த்து 20 நிமிடங்கள் ஊறியபின் பயத்தமாவு, அல்லது அரப்புத்தூள் தேய்த்து வெந்நீரில் குளிக்க நல்ல குணம் கிடைக்கும். பிரசவித்த பெண்களுக்கு வரும் ஒற்றைத் தலை வலிக்கு இது நல்ல பலனைத் தரும். இந்த எண்ணையைத் தேய்த்து வாரம் இருமுறை குளித்து வந்தால், தலைவலி, மண்டைக் குடைச்சல், பித்த மயக்கம், ஆகியவை குணமாகும்.
ஏதாவது ஒரு கையின் பெருவிரலையும, சுட்டுவிரலையும் சேர்த்து அழுத்திக் கொள்ளுங்கள். இப்போது புறங்கையில் ஒரு மேடு ஏற்படும். இந்த மேட்டில் 10 நிமிடங்கள் அழுத்தினால், தலைவலி உட்பட, உடலில் எந்த இடத்தில் வலி இருந்தாலும் காணாமல் போய்விடும்.
கற்பூரம் 10 கிராம், மென்தால் 10 கிராம் (நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்) இரண்டையும் ஒன்றாக்கினால், திரவமாகிவிடும். இதை ஒரு கண்ணாடிப் பாட்டிலில் கலந்து சில துளிகள் எடுத்து வலியுள்ள இடங்களில் சூடு பறக்கத் தேய்த்து விட்டால், வலி விலகும்.
மண்டைப் பீனிசம், நுரையீரல் கபம் காரணமாக மழைக் காலத்திலும், குளிர் காலங்களிலும் அடிக்கடி தொல்லையுறும் ஆண், பெண் குழந்தைகள் அனைவருக்கும் துரித நிவாரணம் அளிக்கவல்லது குங்குமப்பூ. சிறிது குங்குமப்பூவை எடுத்து கற்பூரம் சிறிது அளவு எடுத்து, இரண்டையும் தேங்காய் எண்ணெய் 20 சொட்டு விட்டு உரைத்து, தலையின் கன்னப்பொட்டு, நெற்றி, மூக்கு, கழுத்துப் புறங்களில் தேய்த்து விடவும். அரை மணி நேரத்தில் வலி குறையும். துலை பாரம் நீங்கும். மூக்கடைப்பு விலகும். தொடர்ந்து செய்து வர மண்டைப் பீனிசம் விலகும்.
மண்டையிடி போல் சில நேரங்களில் தலைவலி வரும். சுக்குடன் பெருங் காயம், தனியா தூள் சேர்த்து அரைத்து நெற்றி மீது பற்றுப் போட்டு சாம்பிராணி புகை அனல் காட்டிவர, மண்டையிடி தணியும்.
குப்பை மேனி செடியின் இலைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து, சுத்தமான மெல்லிய துணியில் சலித்து, மூக்கினுள் அவ்வப்போது உறிஞ்சி வர, பீனிசம் மட்டுமல்ல, எல்லாவித தலைவலிகளும் போன இடம் தெரியாமல் ஓடிவிடும்.
கீழா நெல்லி, குப்பை மேனி, வேலிப்பருத்தி இவைகளின் தழையை சாறு பிழிந்து சாற்றின் அளவுக்கு சம அளவு நல்லெண்ணை கலந்து, அடுப்பில் ஏற்றி சிறுதீயில் காய்ச்ச வேண்டும். இந்த எண்ணெயை சில சொட்டுகள் மூக்கினுள் உறிஞ்சினால் போதும், எப்படிப்பட்ட கடுமையான நாட்பட்ட தலைவலியும், குடைச்சலும் பறந்து விடும்.