தலை - Head (3)

ஒற்றைத் தலைவலி

கரிசாலை, கீழாநெல்லி, பொன்னாங்கண்ணி, இஞ்சி ஆகியவைகளை இடித்து எடுத்த சாறு வகைக்கு 200 மில்லி வீதம், ஒன்றாகக் கலந்து, அதில், மிளகு, கருஞ்செம்பைப் பூ, கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி ஆகியவைகளை இடித்துத் தூள் செய்து, 500 மில்லி நல்லெண்ணையும், முன் கூறிய மூலிகைச் சாற்றையும் ஒருங்கே கலந்து, சிறு தீயாகக் காய்ச்சி, முடியும் போது பால் சாம்பிராணியும் 10 கிராம் பொடித்துப் போட்டு, வடிகட்டி வைத்துக் கொண்டு, வாரம் இருமுறை காலையில் தலைக்குத் தேய்த்து முழுக வேண்டும். அன்று புளி இல்லாத மிளகு நீர் (ரசம்) சோறு சாப்பிட வேண்டும். இதனால் ஒற்றைத் தலைவலி, மூக்கு, பீனிசம், மூலச் சூடு, தலை கிருகிருப்பு, மயக்கம் நீங்கும்.

சவுரிப் பழத்தை மட்டும் 5 எடுத்து, அத்துடன் 50 கிராம் நற்சீரகத்தைச் சேர்த்துச் சிதைத்து, ஒரு லிட்டர் நல்லெண்ணையுடன் கலந்து காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு, வாரம் இரண்டு முறை தலைக்கு, சூரிய உதயத்திற்கு முன்பு தேய்த்து, தலை முழுக, நாட்பட்ட தலைவலி, ஒற்றைத் தலைவலி, தலை பாரம், மண்டைக் குத்தல், மண்டை பீனிசம் யாவும் நீங்கிப் போகும்.

வெள்ளெருக்கம் பூ ஒரு கைப்பிடி, கொம்பரக்கு 100 கிராம், உயர்ந்த ரக சாம்பிராணி 200 கிராம், மலைப்பூண்டு 25 கிராம், பூசு மஞ்சள் தூள் 1 ஸ்பூன், இவற்றை நாட்டு மருந்துக் கடையில் மேற்கண்ட அளவுப்படி வாங்கி, சிறு சிறு துண்டுகளாக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு கிலோ நல்லெண்ணையினை நீலநிற ஜ்வாலையில் காய்ச்சவும். கொதிக்கும் நிலையில் இறக்கி வைத்து, மேற்கண்ட பொருள்களை சிறிது சிறிதாக சேர்க்கவும். அவை பொரிந்து கரைந்து விடும். மேல் தட்டினால் மூடி ஆற விடவும். மறுநாள் ஒரு கண்ணாடிப் புட்டியில் அதனை மாற்றி, தினசரி வெயிலில் வைக்கவும். 10 நாள் வைத்தபின் அதனைக் கொண்டு வாரம் 2 நாள் வீதம், தலைக்குத் தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்துப் பின் வெந்நீரில் ஸ்நானம் செய்யவும். சீயக்காய் தேய்த்துக் குளிக்கவும். இப்படி 3 மாதம் செய்துவர, டாக்டர்கள் கைவிட்ட Unidentified migraine தலையை விட்டு ஓடிவிடும்.

இஞ்சிச் சாறு, நல்லெண்ணை ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து ஒன்று சேர்த்துக் காய்ச்சி, பாட்டிலில் பத்திரப் படுத்த வேண்டும். இத்தைலத்தை நன்றாகத் தேய்த்து, 20 நிமிடம் ஊறியபின், பயத்த மாவு அல்லது அரப்பு தேய்த்து, வெந்நீரில் குளிக்க நல்ல குணம் கிடைக்கும். பிரசவித்த பெண்களுக்கு வரும் ஒற்றைத் தலைவலிக்கு இது நல்ல பலனைக் கொடுக்கும்.

ஒற்றைத் தலைவலிக்கு அதிமதுரத்துடன் கால் ஸ்பூன் சீரகம் கலந்து, பொடி செய்து, தேனுடன் கலந்து, தினம் ஒரு வேளை சாப்பிட்டு வர, கோளாறுகள் விலகும்.

முழு மிளகாய் 175 கிராம் பொறுக்கி எடுத்து, அதில் ஒரு லிட்டர் சுத்த நீர் விட்டுக் கால் பங்காகக் காய்ச்சி இறக்கவும். அதில் 350 கிராம் சுத்தமான நல்லெண்ணை விட்டுக் கலக்கி, 20 கிராம் மிளகுடன் பசும்பால் விட்டு அரைத்துக் கலக்கிய விழுதையும் போட்டு, அடுப்பில் ஏற்றவும். நெய் போல் பதமான உடன், இறக்கி வைத்துக் கொள்ளவும். இளங்காலை நேரத்தில் இதைத் தேய்த்து, நீராடி வந்தால், ஒற்றைத் தலைவலி நீங்கும்.

பவளமல்லிகைப்பூவுடன், 7-8 மிளகைச் சேர்த்து, அம்மியில் விழுது போல் அரைத்து, தலைக்குத் தேய்த்துக் குளித்தால், மண்டைக் குடைச்சலும், ஒற்றைத் தலைவலியும் நாளடைவில் நீங்கிவிடும்.

தூங்க முடியாத ஒற்றைத் தலைவலிக்கு, சின்ன வெங்காயத்தை எடுத்து அம்மியில் நசுக்கி துணியில் வைத்து மூக்குத் துவாரத்தில் (ஒற்றைத் தலைவலி வலது புறம் என்றால் இடது துவாரத்திலும், இடது புறம் என்றால் மூக்கின் வலது துவாரத்திலும்) இரண்டு துளிகள் வெங்காயச் சாறை விட வேண்டும். சுரீர் என்று மூக்கில் பட வேண்டும். உடனே ஒற்றைத் தலைவலி போயே போய் விடும்.

சைனஸ் தலைவலி

சைனஸ் பிரச்னை இருப்பவர்கள் தலைவலி வரும்போது புருவங்களுக்கு மேலும் கண்ணுக்குக் கீழும் வரிசையாக அழுத்தம் கொடுத்து விலக்க வேண்டும். கண்ணுக்குக் கீழே அழுத்தம் கொடுக்கும் போது கண்ணில் படாமல் எலும்பில் அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் தலைவலி மட்டுமல்ல சைனஸ் பிரச்னையும் தீரும்.

இத்துடன் தினம் இருமுறைகள் விரல்களின் நுனிகளில் ஒவ்வொன்றிலும் 14 முறைகள் அழுத்தம் கொடுத்து விலக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் சைனஸ் பிரச்னைக்குத் தீர்வு காணலாம். சைனஸ் வராமல் தடுக்கலாம். மெரிடியனில் அக்குபங்சர் சிகிச்சை செய்வதால் இத்தொல்லையை அறவே ஒழிக்கலாம்.

கண்பார்வைக் கோளாறினால் வரும் தலைவலி

கண் பார்வையில் கோளாறு இருந்தால் அடிக்கடி தலைவலி வரும். இவர்கள் கண் பரிசோதனை செய்து கண்ணாடி அணிந்தால் தலைவலி குறையும்.

இதைத் தவிர கண்ணைச்சுற்றி அழுத்தமாக மஜாஜ் செய்ய வேண்டும். விழிகளில் கை படாமல் கவனத்துடன் செயல்பட வேண்டும். விழியைச்சுற்றிலும் உள்ள எலும்புகளில் மட்டுமே அழுத்தம் கொடுக்க வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தி

நமது உள்ளங்கைகளில், நம் உடலின் எல்லா உறுப்புகளுக்கும் பிரதிபலிப்புப் புள்ளிகள் உள்ளன. உள்ளங்கைகளில் உள்ள எல்லாப்புள்ளிகளிலும் அழுத்தம் கொடுத்து விலக்குவதால் உள் உறுப்புகள் பலம் பெறுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி அல்லது தடுப்புச் சக்தி அதிகரிக்கின்றன. இவ்வாறு தினமும் செய்வதால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் இரு வேளைகளும் ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி செய்வதால் மூளை, உடலின் உள்உறுப்புகள் எல்லா இடங்களுக்கும் அதிக அளவில் ஆக்ஸிஜன் செல்கிறது. அசுத்தங்கள் எரிக்கப் படுகின்றன. இரத்தம் சுத்தமடைந்து இரத்த ஓட்டம் சீராகிறது.
Powered by nasrullah.in - TechnoNasr 2003-2020.
Designed & Developed by Mohamed Nasrullah.M