இயற்கை ஷாம்பு
7 அல்லது 8 செம்பருத்தி இலைகளைப் பறித்து சிறிது தண்ணீர் தெளித்து அரைத்தால் விழுதாக நுரைத்து வரும். இதை தலையில் தேய்த்து அலசிக் கொண்டால் ஷாம்பு போட்டுக் குளித்தது போல் இருக்கும். தலைமுடியும் கருப்பாக மாறும். உடலுக்குக் குளிர்ச்சியும் கூட.
செம்பருத்திப்பூவை நல்ல வெயிலில் உலர்த்துங்கள். எண்ணெய் குளியலுக்கு மறுநாள் அல்லது தேவையான போது கொஞ்சம் வெந்தயத்தை அரைத்து (ஊறவைத்தோ அல்லது மிக்சியில் பொடியாகவோ) கொஞ்சம் நீரில் 5 நிமிடங்கள் போடுங்கள். அதில் உலர்ந்த செம்பருத்திப்பூவை கொஞ்சம் ஊறவைத்துக் கசக்குங்கள். சோப்பு மாதிரி வரும் நுரையைத் தலையில் தேய்த்து அலசுங்கள். பிசுபிசுப்பு விட்டுவிடும். தலைமுடிக்கும் கேடு இல்லை.
கூந்தலுக்கு வாசனை தூபம் தயாரித்தல்
சாம்பிராணி 5 பலம், சந்தனத்தூள் 5 பலம், அகிற்கட்டை 5 பலம், மட்டிப்பால் 2 பலம். ஒவ்வொன்றையும் தனித்தனியாகத் தூள் செய்து, சன்னமான துவாரங்களுள்ள சல்லடையில் சலித்துக் கொள்ளவும். பிறகு இந்தப் பவுடர்களைத் தனித் தனியாகப் பாட்டில்களில் போட்டு வைத்துக் கொள்ளவும். தலைக்கு குளிக்கும் நாட்களில் தலையை நன்கு துவட்டியபின், இந்த வாசனைப் பவுடர்களை, சம அளவு எடுத்துத் தணலில் போட்டு, கேசத்தில் புகை பிடித்தால், கேசம் விரைவில் உலர்வதோடு, நாள் முழுவதும் மனோகரமான வாசனை வீசும். தலைபாரம், தலைவலி போகும். சிறுகுழந்தைகளுக்கும், நீராட்டிய பிறகு போடலாம்.
பேன், பொடுகு, ஈறு
கருந்துளசியைத் தலையணை மீது பரப்புங்கள். அதன்மேல் வெள்ளைத் துணியைப் போட்டுப் படுத்து உறங்குங்கள். பேன்கள் உடனே இறங்கிவிடும்.
தூங்கப்போகும் முன் காடியை (வினிகர்) தலையில் அழுந்தத் தேய்த்து, தலையில் ஒரு துணியைக் கட்டிக் கொண்டு, காலையில் சோப்பு அல்லது ஷாம்பூ தேய்த்துக் குளித்து வந்தால் போதும். இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒரு முறை பேன்கள் ஒழிகிற வரை இதைத் தொடர்வது நல்லது.
பொடுகும் பேனும் சேர்ந்து விட்டால், வில்வக்காயை நன்றாக உலர்த்திப் பொடி செய்து, அதைச் சீயக்காயுடன் அளவோடு சேர்த்து அரைத்துத் தலையில் தேய்த்துக் குளியுங்கள். இதனால் கண்ணுக்கும் தோலுக்கும் கூட நல்லது.
எலுமிச்சம்பழத்தை கொதிக்கும் நீரில் 2 அல்லது 3 நிமிடங்கள் போட்டு எடுக்கவும். அதன் சாறு பிழிந்து, அத்துடன் சிறிது உப்பு கலந்து நன்றாகக் கரைத்து தலையில் அழுத்தித் தேய்த்து 2 மணி நேரம் ஊறவேண்டும். அதன்பின் தலைக்குக் குளிக்க வேண்டும். தொடர்ந்து ஒரு வாரம் செய்தால் பொடுகு உதிர்ந்து விடும்.
தலையில் பேன் இருந்தால் நெருக்கமான பல் உடைய சீப்பை உபயோகித்து அகற்றலாம்.
பகல் அல்லது இரவில் தலையணையில் வேப்பிலை, துளசி இவைகளைப் பரப்பி வைத்துக் கொண்டு படுத்தாலும் பேனைக் குறைக்கலாம்.
பேனை அகற்ற கடலைப்பருப்பு 2 ஸ்பூன், வெட்டிவேர் 1 ஸ்பூன், சிறிய தேங்காய்த் துண்டு, ஐந்தாறு பூண்டு துண்டுகள், சிறிதளவு வெந்தயம் முதலியவற்றை அரைத்து, கூந்தலில் தடவிக் கொள்ள வேண்டும். அரை மணி நேரத்திற்குப் பிறகு நீரில் கூந்தலை அலசினால் பேன்கள் அறவே ஒழியும்.
தேங்காய் எண்ணெயில் வெங்காயச் சாற்றைப் பிழிந்து, தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து தலையை அலசினால் பேன் அறவே ஒழியும்.
படிகாரத்தைச் சிறிதளவு தண்ணீரில் கரைத்து, அத்துடன் இரண்டு சிட்டிகை மூக்குப் பொடியை நன்றாகக் கலக்கி, தலையில் தேய்த்துக் கொண்டு, ஒரு மணி நேரம் கழித்து, சீயக்காய் கொண்டு தலை முழுகினால், பேன் அறவே ஒழிந்து போகும்.
ஒரு கையளவு துளசி எடுத்து நன்றாக அரைத்துத் தலையில் தடவிக்கொண்டு, அரை மணி நேரம் கழித்து ஷாம்பூ போட்டு குளித்தால், பேன் தொல்லை இருக்காது.
மருதாணி விதை 100 கிராம், வெந்தயம் 50 கிராம், வசம்பு 50 கிராம் ஆகியவற்றை ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி அதனை அன்றாடம் பயன் படுத்தி வர பேன், பொடுகு அடியோடு ஒழியும்.
சீயக்காய் உபயோகிப்பவர்கள் அதைப் புளித்த தயிருடன் கலந்து தலைமுடியை அலசினால் பொடுகு தொல்லை நீங்கும். கேசம் மிருதுவாகும். நல்ல மணத்துடன் இருக்கும்.
வேப்பம்பூவை வாட்டி தலையில் கட்டிக் கொண்டால், பேன் பொடுகு ஈறு முதலியன போய்விடும்.
வெந்தயத்தை பாலிலோ, தயிரிலோ அரைத்துத் தலைக்குத் தேய்த்துக் குளித்தாலும் பொடுகு வராது.
தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரத்தைப் போட்டு அந்த எண்ணெயைத் தினமும் தேய்க்கலாம். 15 நாட்களில் நல்ல பலன் கொடுக்கும். ஒரு பேன், பொடுகு இருக்காது.
காட்டு சீரகத்தை எலுமிச்சைச் சாற்றில் அரைத்து தலையில் தடவ பேன்கள் சாகும்.
வசம்பை மை போல் அரைத்துத் தலையில் தேயுங்கள். பின்பு ஒரு மணி நேரம் கழித்துக் குளித்தால், ஈறுகளே தலையில் இருக்காது.
ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு முழு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து எடுத்த சாறு. இவற்றில் பூண்டுப்பல் சிலவற்றைப் போட்டு - இவை சிறிது ஊறி, கலந்தவுடன் பேன் உள்ள தலையில் தேய்த்து, சிறிது ஊறியபின் குளிக்கவும். இவ்வாறு தொடர்ந்து சில முறைகள் குளிக்க பேன் தொல்லை ஒழியும்.
பொடுகு தலையில் நிறைய இருந்தால், கொஞ்சம் கடுகை அரைத்துத் தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்துக் குளிக்கவும். ஒரு வாரம் செய்யவும். பொடுகு போன இடம் தெரியாது.
பொடுகுத் தொல்லையிருந்தால், வினிகரை மயிர்க் கால்களில் தடவி ஷாம்பூ போட்டு அலசவும். பொடுகு காணாமல் போய் விடும்.
முதல் நாளே ஊற வைத்த வெந்தயம், மிளகை நைசாக அரத்துக் கொண்டு, ஒரு எலுமிச்சம்பழம் பிழிந்து, அதில் கரைத்து, தலையில் தடவி வர, பொடுகு தொல்லை நீங்கும்.
சீயக்காய் அரைக்கும் போது, மற்ற சாமான்களுடன் சிறிது வேப்பிலையும் காய வைத்து அரைத்தால், பேன் பிடிக்காது.
புத்தம் புதிய வேப்பம்பூ ஒரு கைப்பிடி அளவு எடுத்து, காம்பு ஆய்ந்து சுத்தம் செய்து, கால்படி தேங்காயெண்ணையிலிட்டு ஒரு நாள் முழுதும் வெயிலில் வைத்து, அவ்வப்போது கலக்கி விடுங்கள். மறுநாள் சிறு தீயில் பூ கருகாமல் மொறு மொறு என வரும்வரை காய்ச்சி, (கொட்டைப் பாக்கு அளவு) ஒரு துண்டு வெல்லத்தை மறக்காமல் போட்டு இறக்குங்கள். ஆறியபின் ஒரு பாட்டிலில் ஊற்றி, ஒரு வாரம் வைத்திருந்து பிறகு, இதையே தலைக்குத் தினமும் உபயோகித்து வாருங்கள். பொடுகு பறந்து விடும். மறுபடி வராது. தலையில் உள்ள பிற புண்கள், பேன் போன்றவை கூட நீங்கும்.
புதிய காட்டுச் சீரகம் 250 கிராம் எடுத்து, இதில் 50 கிராம் சோறு சேர்த்து நன்றாக இடித்துக் கொள்ளவும். தேவையான அளவு எடுத்து, வெந்நீரில் குழைத்து, தலையில் நன்றாகத் தேய்த்து பசை போல் அப்பி, 10 நிமிடங்கள் கழித்து, வெந்நீரில் தலை குளிக்கவும். குளித்ததும் தலையைத் துவட்டி, உடன் நெருக்கமான பற்களுள்ள சீப்பால், தலையைச் சீவ, பேன்கள் கீழே விழும். தொடர்ந்து 3 நாட்களுக்குச் செய்யவும்.
100 கிராம் வேப்பம் பருப்பை இடித்துக் கொள்ளவும். அதில் 10 கிராம் உலர்ந்து புகையிலையை இடித்துப் போடவும். அல்லது மூக்குப் பொடியைப் போடவும். இரண்டையும் கலந்து, 250 கிராம் வேப்ப எண்ணெயில் குழைத்துக் கொள்ளவும். தேவையான அளவு எடுத்துத் தலையில் அழுத்தித் தடவி முடியிலும் தடவி, 10 நிமிடங்கள் கழித்து சிகைக்காய் தேய்த்து வெந்நீரில் தலை குளிக்கவும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் 3 குளியலுக்குப் பின் பேன் ஒழியவும்.
இரண்டு ஸ்பூன் வினிகருடன் கடலை மாவைக் குழைத்து, கால் மணி நேரம் ஊற வைத்து. நன்றாக மயிர்க்கால்களில் படும்படி தடவி அரை மணி நேரம் ஊறிய பிறகு அலசி விடவும்.
துளசி இலைச் சாறு 50 மில்லி, வசம்புத் தூள் 5 கிராம், இரண்டையும் கால் கிலோ எண்ணெயில் போட்டு காய்ச்சி வடிகட்டுங்கள். இந்த எண்ணெயை தலையில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். பிறகு 2 டீஸ்பூன் வெந்தயப் பவுடருடன், 2 டீஸ்பூன் சீயக்காய்த் தூள் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளியுங்கள். வாரம் 2 முறை இப்படிச் செய்தால், பேன் உங்கள் தலை பக்கமே தலை காட்டாது.
துளசி இலைச் சாறு, வில்வ இலைச் சாறு இரண்டிலும் தலா ஒரு கப் எடுத்து, இரண்டு கப் தேங்காய் எண்ணெயை சேர்த்துக் காய்ச்சுங்கள். சாறு வெந்து அடியில் கசடாக தங்கிவிடும். மேலே தெளிவாக நிற்கும் எண்ணெயை தினமும் தலையில் தடவி வர, பேன், பொடுகு, அரிப்பு சகலமும் ஒழிந்துவிடும்.
தலை, சருமம் உலர்வதால் தான், பொடுகு ஏற்படுகிறது. தனி சீப்பைப் பயன்படுத்தவும். மரச்சீப்பு, கொம்பு சீப்பினால் வாரிப் பின்னிய காலத்தில் பொடுகு இருந்ததில்லை.
முடி வளர
மருதாணி இலையை அரைத்து அத்துடன் கொஞ்சம் வினிகரும் உப்பும் சேர்த்துத் தடவிக் கொண்டு அரை மணி நேரம் கழித்துக் குளியுங்கள். வழுக்கைத் தலையில் முடி வளரும் அதிசயத்தைக் காண்பீர்கள்.
தலையில் சொட்டை விழுந்திருந்தால் அந்த இடத்தில் சிறிது வெங்காயத்தை (சாம்பார் வெங்காயம்) தேய்த்து வந்தால் நாளடைவில் சொட்டை நீங்கி முடி வளரும்.
தலையில் உள்ள சொட்டை மற்றும் வழுக்கை மறைய சின்ன வெங்காயத்தைத் தோல் நீக்கி, செம்பருத்திப் பூவுடன் கலந்து அரைத்து, அந்தச் சாறை மேற் குறிப்பிட்ட இடங்களில் தடவினால் தலைமுடி வளர வாய்ப்புண்டு.
தலை முடி கொட்டுவதைத் தடுக்க எளிதான வழி - பூண்டை நன்றாக நசுக்கி அதன் சாறு மயிர்க்கால்களில் படும்படி மென்மையாக மசாஜ் செய்து வருவதுதான். இதனால், ரத்த ஓட்டம் அதிகரித்து முடிகொட்டுவது படிப்படியாக நின்று விடும்.
அரை லிட்டர் தேங்காயெண்ணையில் 100 கிராம் கற்றாழைக் கதுப்புகளைப் போட்டுக் காய்ச்சி, தலைக்குத் தேய்த்து, குளித்து வந்தால், தலை முடி நன்றாக வளரும். கண்கள் குளிர்ச்சி பெறும்.
செம்பருத்திப்பூ, மருதாணி இலை, வேப்பந்தழை, கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, வல்லாரைக்கீரை - சம அளவு எடுத்து, தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும். அதிமதுரம், வேம்பாளம்பட்டை, வெந்தயம், கார்போக அரிசி, வாசனைப் பட்டை, நெல்லி முள்ளி, மகிழம்பூ - பொடி செய்யவும். வெட்டிவேரைத் துண்டு துண்டாக வெட்டி, இவை அனைத்தையும் தேங்காயெண்ணையில் போட்டு இலேசாக சூடு படுத்தி, ஆற வைத்துத் தலையில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.
கூந்தல் செழிப்பாக வளர வேண்டுமா? இரு கட்டை விரலையும் நெற்றிப் பொட்டில் அழுத்திக் கொண்டு, மற்ற விரல்களின் நுனியால், நெற்றியில் தொடங்கி, தலையின் பின்புறம் வரை சுற்றிச்சுற்றி, 10 நிமிடங்கள் அழுத்தி விடவேண்டும். பிறகு அழுத்தமான சீப்பால் தலைவார வேண்டும். இரவு ஆலிவ் எண்ணெயை 5 டீஸ்பூன் அளவு லேசாக சுடவைத்து, அதில் அரை எலுமிச்சம்பழச்சாற்றை கலந்து, தலையின் தோலில் அழுத்தித் தேய்த்து வைத்து காலையில் தலை முழுகிட வேண்டும். மாதம் மும்முறை இவ்வாறு குளிக்கலாம்.