வளரும் குழந்தைகள் - Growing Children (7)

"சரி விகித உணவாக" எப்படிக் கொடுப்பது என்ற உதாரணத்திற்கு சில செய்முறை குறிப்புகள்.

தினமும் செய்யும் சப்பாத்தி மசாலா போன்றவற்றையே ஒரு சில மாற்றங்கள் செய்து சரிவிகித உணவாக குழந்தைகளுக்கு கொடுக்க தாய்மார்கள் கற்றுக் கொள்வது அவசியம்.

பாலக் சீஸ் ரோல்:

சப்பாத்தி மாவு செய்ய:
கோதுமை மாவு - 1 கப், சோயா மாவு - கால் கப், உப்பு – தேவையானது, பாலக் கீரை - 1 கட்டு

பாலக் கீரையைக் கிள்ளி, கழுவி சிறிது எண்ணையில் ஓரிரு நிமிஷங்கள் வதக்கி ஆற விட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதை கோதுமை மாவு, சோயா மாவு உப்பு கலந்த கலவையில் போட்டு தேவைக்கு ஏற்ப தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல பதமாகப் பிசைந்து மூடி வைக்கவும்.

மசாலா செய்ய: உருளைக்கிழங்கு - 1, கேரட் - 2, பீட்ரூட் - அரை கிலோ, பொடியாக அரிந்த வெங்காயம் - கால் கப், துருவிய பனீர் - கால் கப், துருவிய சீஸ் - 1 க்யூப், இஞ்சி, பூண்டு விழுது - அரை ஸ்பூன், மிளகாய்த் தூள் - அரை ஸ்பூன், மஞ்சள் தூள் - கால் ஸ்பூன், கரம் மசாலாத் தூள் - கால் ஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய், வெண்ணெய் விருப்பத்திற்கு ஏற்ப.

காய்கறிகளை குக்கரில் ஆவியில் வேக வைத்து மசித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணை விட்டு வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதோடு மசித்த காய்கறிகள், உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும் கடைசியாகத் துருவிய பனீர், சீஸ் சேர்க்கவும். சப்பாத்தி ரோல் செய்யப் பிசைந்த மாவில் சப்பாத்திகள் செய்து கல்லில் சுட்டு எடுக்கவும். மத்தியில் மசாலா வைத்து சுருட்டி ஒரு அலுமினியம் ஃபாயில் பேப்பரில் சுருட்டி லன்ச் பாக்ஸில் வைக்கவும்.

குறிப்பு: அலுமினியம் ஃபாயில் பேப்பரில் சுருட்டிக் கொடுக்கும் போது சப்பாத்தி காய்ந்து விடாமல் நன்றாக இருக்கும். சத்துக்கள் விவரம்: சப்பாத்தி மாவுடன் சோயா மாவு சேர்ப்பதால் மாவுச் சத்துடன் புரதச் சத்தும் சேர்ந்து முழுமையான உணவாகிறது

இதோடு கீரை சேர்ப்பதால் இரும்புச் சத்து, வைட்டமின் "ஏ" சேருகிறது. மற்றும் மசாலாவில் மூன்று விதமான காய்கறிகள், பனீர். சீஸ் சேருவதால் இந்த ஒரு உணவிலேயே குழந்தைகளுக்குத் தேவையான முக்கிய ஊட்டச் சத்துக்கள், உயிர்ச்சத்துக்கள், தாது உப்புக்கள் கிடைக்கின்றன.

Seven Wonders (ஏழு அதிசயங்கள்): பொட்டுக்கடலை, மக்காச் சோளம், சோயா பீன்ஸ், கோதுமை, ராகி, ஜவ்வரிசி, பாசிப்பயறு - தலா 100 கிராம்.

மாவு தயாரிக்கும் முறை: எல்லாப் பொருட்களையும் கல் இல்லாமல் சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு தானியங்களை அலசி முளை கட்டியோ அல்லது அப்படியே காய வைத்தோ வாணலியில் தனித்தனியாக லேசாக வறுத்து எடுத்து நைஸாக அரைத்து மாவாக்கிக் கொள்ளவும். குழந்தைகளுக்குத் தினம் ஒரு புதுவித திண்பண்டம் வேண்டும். இந்த மாவைத் தயாரித்து வைத்துக் கொண்டால் 7 நாட்களுக்கு ஒவ்வொன்று செய்ய சரியாக இருக்கும். குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள்

பாதாம் டிரிங்க்: மாவு - 1 ஸ்பூன், தண்ணீர் - முக்கால் டம்ளர், பால் - கால் டம்ளர், பாதாம், வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு பவுடர் - ஒரு ஸ்பூன்.

மாவை நீரில் நன்றாகக் கரைத்துக் கொதித்த உடன் பாலும் சர்க்கரையும் கலந்து, ஆறியவுடன் குடிக்க, நன்றாக இருக்கும். ஃப்ரிட்ஜ் இருந்தால் குளிர்ந்தபின் அருந்தலாம்.

பிஸ்கட்டுகள்: மைதா - 1 கப், சத்துமாவு - 1 கப், சர்க்கரை - 1 கப், வெண்ணை - 1 கப், பால் - 2 ஸ்பூன், கோகோ பவுடர் அல்லது நியூட்ரமுல் - 1 ஸ்பூன், வெண்ணிலா எஸன்ஸ் - அரை ஸ்பூன், சமையல் சோடா - அரை ஸ்பூன், ரவை - 2 ஸ்பூன்.

முதலில் சர்க்கரையைப் பொடி செய்து அத்துடன் வெண்ணையைப் போட்டு, நுரைவரும் வரை கலக்கவும். பாலில் கோகோ பவுடரைப் போட்டுக் கரைத்து, வெள்ளை சர்க்கரையுடன் கலக்கவும். பிறகு மைதா, சத்துமாவு, சோடா, ரவையைக் கலந்து 3 முறை சலிக்கவும். சலித்தபின், நுரைத்த கலவையில் கொஞ்கம் கொஞ்கமாய் போட்டுக் கலக்கவும். இது கெட்டியாக இருக்கவேண்டும். கொஞ்ச நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு ஓவனில் பிஸ்கட் போல் செய்து 240 டிகிரிக்கு அரைமணி நேரம் பேக் (Bake) செய்யவும்.

கேக்: மைதா, சத்துமாவு, சர்க்கரை - தலா ஒரு கப், முட்டை – 2, வெண்ணை - அரை கப், வெது வெதுப்பான பால் - அரை கப், வெண்ணிலா எஸன்ஸ் - அரை ஸ்பூன், ரவை - 2 ஸ்பூன், பேக்கிங் சோடா - 2 ஸ்பூன், சமையல் சோடா - அரை ஸ்பூன். இவற்றை கேக் செய்வது போல் கலந்து. ஓவனில் 220 டிகிரிக்கு அரை மணி நேரம் பேக் (Bake) செய்யவும்.

பொரி விளங்காய் உருண்டை:: சத்து மாவு, வெல்லம் - தலா 1 கப், தேங்காய் (சின்னத் துண்டுகளாக நறுக்கியது) - அரை கப், வேர்க்கடலை வறுத்துத் தோல் நீக்கியது - கால் கப், சுக்கு, ஏலக்காய்ப்பொடி வாசனைக்கு

சத்துமாவை கொஞ்சம் வறுத்துக் கொள்ளவும், வெல்லத்தைப் பாகு வைத்து, கெட்டிப்பாகு வந்தவுடன் தாம்பாளத்தில் உள்ள மாவில் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு (வெல்லத்திலேயே தேங்காய், கடலை, ஏலம் போட்டு விடவும்) கிளறி சூட்டுடன் உருண்டைகளைப் பிடிக்கவும். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். கர்ப்பிணிகளுக்கும் நல்லது.

புளி மாவு: அரிசி மாவு - கால் கப், சத்து மாவு - 1 கப், தயிர். (அ) மோர் - 1 கப், உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி - ஒரு ஸ்பூன், எண்ணெய் - கால் கப், கடுகு, உ.பருப்பு - தாளிக்க, பச்சை மிளகாய் – 2, கொத்துமல்லி – தேவைக்கு

சத்துமாவுடன் தயிர், அரிசி மாவு, உ.பருப்பு, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி எல்லாவற்றையும் கெட்டியாகப் பிசைந்து. தாளித்தவுடன், மிதமான தீயில் மாவைப் போட்டு வதக்கிக் கொண்டே இருக்கவும். மாவு உதிரி உதிரியாக ஆனவுடன் நிறுத்தி விடவும்.

தோசை மாவுடன் ஒரு கப் சத்துமாவு போட்டுத் தோசை வார்க்கலாம்.

ஒரு கப் அரிசியை ஊற வைத்து அரைத்து அதில் ஒரு கப் சத்து மாவு. ஒரு கப் ரவை கலந்து கொஞ்சம் மோர் விட்டுக் கரைத்து சீரகம, கடுகு, கொத்துமல்லி போட்டு, ரவை தோசை போல் வார்க்கலாம்.

சப்பாத்தி பிசையும்போது கோதுமை மாவுடன் ஒரு கப் சத்து மாவு. கால் கப் பொடியாக நறுக்கிய புதினா அல்லது வெந்தயக்கீரை, மஞ்சள், உப்பு, கொஞ்சம் சர்க்கரை, கால் கப் தயிர் முதலியன கலந்து சப்பாத்தி தயாரித்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். தொட்டுக் கொள்ள வெங்காயச் சட்னியோ, தக்காளிச் சட்னியோ அல்லது தயிர்ப்பச்சடியோ இணையாக இருக்கும்.

ஜீரா ரைஸ்: ஒரு ஆழாக்கு பாஸ்மதி அரிசியை உதிரியாக சாதம் வடித்துக் கொள்ளுங்கள். வாணலியில் ஒரு ஸ்பூன் நெய்யில் 2 ஸ்பூன் சீரகத்தை வறுத்துக் கொள்ளுங்கள். வறுக்கும் பொழுது கொஞ்சம் கறிவேப்பிலையும் சேர்த்துக் கொள்ளவும். இதில் சாதத்தைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். தேவையான அளவு உப்பு, 2 ஸ்பூன் நெய் சேர்த்துக் கிளறவும். நல்ல வாசனையாகவும் ருசியாகவும் இருக்கும். இதற்கு கத்தரிக்காய் கொத்ஸூ தொட்டுக் கொண்டால் நன்றாக இருக்கும்.

கத்தரிக்காய் கொத்ஸூ: பெரியதான முழுக் கத்தரிக்காயை எண்ணை தடவி மைக்ரோவேவ் ஓவனில் வைத்து எடுத்து தோல் நீக்கி கெட்டித்தயிரில் கரைத்து உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து வைக்கவும். வாணலியில் சிறிது எண்ணை விட்டு கடுகு. மிளகாய் வற்றல் தாளித்து சேருங்கள். கொத்துமல்லி இலைகளையும். தூவி விடுங்கள். கத்தரிக்காய் கொத்ஸூ ரெடி.

குழந்தைகளுக்கு மதிய உணவாக இவற்றைச் செய்து லன்ச் பாக்ஸில் வைத்து அனுப்பினால் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

குழந்தைகளுக்குப் பிடித்த லன்ச் பாக்ஸ்

சப்ஜி சாதம் (சப்ஜி சாதத்திற்கு மிக முக்கியமானது காய்கறி தான்): அரிசி - 1 ஆழாக்கு, பச்சை மிளகாய், உருளைக்கிழங்கு, கேரட், மிளகாய் வற்றல், கேப்சிகம், வெங்காயம், தக்காளி தலா 2, காலிப்ளவர், கோஸ் தலா 1 கப், பச்சைப்பட்டாணி அரை கப், எண்ணெய் - 1 கரண்டி, கடுகு – தேவைக்கு, நெய் 2 ஸ்பூன், பச்சை மிளகாய் 4 எடுத்து வைத்துக் கொள்ளவும்.

முதலில் அரிசி ஒரு ஆழாக்கு எடுத்து சாதம் வடித்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து சூடேற்றி எண்ணெய் ஒரு ஸ்பூன் விட்டு கடுகு, மிளகாய் வற்றல் தாளித்து, பச்சை மிளகாய், வெங்காயம் உரித்து நறுக்கிப் போட்டு மேலே சொன்ன காய்கறிகளைப் பொடியாக நறுக்கி மஞ்கள் பொடி சேர்த்து நன்றாக வதக்கி தேவையான உப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்க்கவும். 2 ஸ்லைஸ் பிரெட் எடுத்து துண்டுகளாகக் கட் பண்ணி 2 ஸ்பூன் நெய்யில் பொரித்துப் போடலாம். சாதத்தில் சப்ஜியை சேர்த்து நன்றாகக் கிளறவும்.

இந்த சப்ஜி சாதத்திற்கு பருப்பு, புளி இரண்டுமே தேவையில்லை. இதைக் குழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள். இந்த சப்ஜி சாதத்திற்குத் தொட்டுக்கொள்ள "டாங்கர்" என்ற தயிர்ப்பச்சடி ருசியாக இருக்கும். வெண்டைக்காயைப் பொடியாக நறுக்கி வாணலியில் சிறிது எண்ணையை விட்டு நன்றாக முறுகலாக வதக்கிக் கொள்ளுங்கள். நல்ல கட்டித் தயிரில் கொஞ்சம் உளுந்து மாவைக் கரைத்து சிறிது உப்பு, சீரகம் சேர்த்து, வெண்டைக்காயையும் சேர்த்து நன்றாகக் கலந்து கடுகு தாளித்து எடுத்து வைக்கவும். டாங்கர் ரெடி.

பாலக் ரைஸ்: பாலக்கீரையை நன்றாக அலம்பி நறுக்கி வேகவைத்து இலேசாக மசித்துக் கொள்ளவும். 2 பச்சை மிளகாய், சிறிது சீரகம், தேங்காய்த்துருவல் முதலியவை அரைத்து கீரையில் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து இறக்கவும். ஒரு ஆழாக்கு அரிசி, அரை ஆழாக்கு பயத்தம் பருப்பு இரண்டையும் சேர்த்து வேகவைத்துக் கொள்ளுங்கள். அதில் கீரையைச் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து 2 ஸ்பூன் நெய் விட்டு நன்றாகக் கலந்து பரிமாறுங்கள். இதற்குத் தொட்டுக்கொள்ள அப்பளம், வற்றல் ருசியாக இருக்கும்.
Powered by nasrullah.in - TechnoNasr 2003-2020.
Designed & Developed by Mohamed Nasrullah.M