ஒரு சில சத்தான உணவுகள்
முட்டை கஸ்டர்டு:
பால் - ஒன்றரை டம்ளர், மிகப் பொடியாக அரிந்த கனிந்த வாழைப்பழம் – 1, மஞ்சள் கரு – 1, சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்.
பாலுடன் சர்க்கரை, முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். குறைந்த தணலில், விடாமல் கிளறி விட்டுக்கொண்டே இருந்தால், கலவை ஓரளவு கெட்டிப்பட்டு கூழ் போன்ற பதத்திற்கு வரும். ஒரு ஸ்பூனை அதற்குள் முக்கி அதன் பின்புறம் கஸ்டர்டு படிய வேண்டும். அந்தப் பதத்தில் இறக்கி ஆறவிட்டு வாழைப்பழத்தைக் கலந்து தேவையான உஷ்ணத்தில் கொடுக்கலாம்.
பருப்பு சூப்:
பயத்தம் பருப்பு - 2 டீஸ்பூன், அரிந்த கேரட் - கால் கப், வெண்ணை - கால் டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா 1 சிட்டிகை, தக்காளி சிறியது - 1, உப்பு - ருசிக்கேற்ப,
பருப்புடன் கேரட், தக்காளி சேர்த்து மெத்ததென்று வேக விடவும். வெந்ததும் நன்கு மசித்து வடிகட்டவும். தேவையான பதத்திற்கு தண்ணீர் விட்டு கரைத்து உப்பு. மிளகு. சீரகத்தூள் சேர்த்துச் சூடாக்கவும். கடைசியில் வெண்ணை விட்டுக் கலந்து இறக்கி ஆறவிட்டு பரிமாறவும்.
சத்து மாவு பாயாசம்:
சத்து மாவு, பால் பவுடர் தலா 1 டேபிள் ஸ்பூன், தண்ணீர் 1 கப்.
எல்லாவற்றையும் ஒன்றாகக் கரைத்து நன்றாக அடுப்பில் வேகவிடவும். கரைசல் பளபள என்று வெந்ததும் துருவிய வெல்லம். ஏலக்காய் தூள் விருப்பத்திற்கு ஏற்ப கலந்து இறக்கவும். வேண்டிய பக்குவத்திற்குக் கரைத்துக் கொள்ளலாம். இதைப் பாயாசமாகக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
தினமும் கொடுக்கப்படும் உணவுகளை மேலும் சத்துள்ளதாக, ருசியாக மாற்றியமைத்து உணவுப்பழக்கங்களை ஏற்படுத்தினால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் ஆரோக்கியமாக இருக்க இயலும்.
துறுதுறு குழந்தைகள்
குழந்தைகள் முதன் முதலில் பள்ளிக்குச் செல்லும்போது பல புதியவர்களைச் சந்திப்பதும், உணவுப் பழக்கங்கள் மாறுவதுமாக இருக்கும். குழந்தைகள் சுறுசுறுப்பாக இருக்கவும் வேண்டும், நன்கு படிக்கவும் வேண்டும் எனும்போது இந்த வயதிற்கேற்ற சரியான ஊட்டச்சத்து கிடைக்கப்பெறுகின்றனரா? என்பதே கேள்வி. பல தாய்மார்களின் முதல் பிரச்னையே இது தான்.
இந்த வயதில் கலோரிகளும் புரதமும் படிபடிப்படியாக அதிகரிக்கப்படவேண்டும். 10-12 வயது குழந்தைகளுக்குப் பெரியவர்களை விட அதிகக் கால்சியம் தேவைப்படுகிறது உடலில் எலும்பு வளர்ச்சி அதிகமாக இருக்கும் வயது இது. இரத்த விருத்தி அதிகமாவதால் இரும்புச்சத்தும் அதிகம் தேவை. வைட்டமின் "சி" மற்றும் "ஏ" இரண்டும் வயதானவர்களுக்குத் தேவையான அளவு குழந்தைகளுக்கும் தேவை. ஒரு நாளைய உணவைத் தேர்ந்தெடுக்க இதை எல்லாம் மனதில் கொள்ள வேண்டும்.
சுறுசுறுப்பாகக் குழந்தைகள் ஓடிக் கொண்டே இருப்பதால் முதலில் காலை உணவு கட்டாயம் தரப்படவேண்டும். காலை உணவு சரியாக உண்ணாவிடில் குழந்தையின் சுறுசுறுப்பு குறையலாம். சரிவர பள்ளியில் படிப்பில் கவனம் செலுத்த இயலாமல் போகலாம். சுலபமாக உண்ணும் உணவாகவும் இருக்க வேண்டும். குழந்தைகளுக்குப் பிடித்ததாகவும் இருக்க வேண்டும். அதே சமயம் ஊட்டச்சத்து மிகுந்த உணவாகவும் தர வேண்டும். இந்த வயது குழந்தைக்குத் தினமும் ஒரே மாதிரி உணவு கொடுத்தால் "போர் மம்மி" என்று கூறிவிடுவர். அவர்களுக்கு நல்ல வெரைட்டி, கலர், ருசி, மணம் எல்லாமே தேவை.
வெயில் காலமா, மழைக் காலமா என்று அதற்குத்தகுந்த உணவு தரவேண்டும்.
இந்த வெயில் நாட்களில் அதிகமான ஜூஸ், மோர், லஸ்ஸி, இளநீர், மில்க்ஷேக் போன்றவைகளைக் கொடுக்கலாம். அடிக்கடி ஏதாவது "ஸ்னாக்ஸ்" போல உண்ணப் பிரியப்படும் குழந்தைகள் அதிக உணவை ஒரே நேரம் உண்ண ஆசைப்படமாட்டார்கள். அவர்கள் சுலபமாக எடுத்துச் சாப்பிடும் உணவையே விரும்புவர்.
ஒரு முக்கியமான விஷயத்தை இங்கு குடும்பத்தினர் கவனத்தில் கொள்ளவேண்டும். குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் வந்து அமர்ந்து உண்ணும்போது அந்தக் குழந்தைக்கும் தட்டு வைத்து எல்லோருடனும் சேர்ந்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தப்பட வேண்டும்.
"சாலட்" போன்றவைகளைத் தனியாக உண்ணப் பிரியப்பட்டால் சாண்ட்விச், ரோல்ஸ் போன்று அவர்கள் விரும்பும் வண்ணம் தருதல் அவசியம்.
பள்ளி செல்லும்போது குழந்தைகள் மதிய உணவின் போது மற்ற குழந்தைகள் எதைக் கொண்டு வருகிறார்கள் என்பதில் இருந்து, வெளியில் மற்றவருடன் பழகும்போது கற்றுக்கொள்வதில் இருந்து, குழந்தையின் பலவிதங்களில் மனம் மாற்றப்படுவதால், உணவு உண்ணும்போது அவர்கள் அதிகமாகவே மிக எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்குப் பிடித்தமானதாக சமைப்பது என்பது பல இளம் தாய்மார்களுக்குச் சவாலாகவே உள்ளது.
மதிய உணவைக் கட்டித்தரும்போது லன்ச் பாக்ஸை முடிந்த வரை ஒரே டப்பாவில் 2, 3 பிரிவாக உள்ளதாகத் தேர்ந்தெடுத்தால் நல்லது. பெரிய காரியரில் தனித் தனியாகக் கொடுத்தால் அவர்களுக்குத் திறந்து பார்க்கக் கூட பொறுமை இருக்காது.
கீழ்க்காணும் குறிப்புகள் குழந்தைகளுக்கு மதிய உணவை கட்டித் தரும்போது மனதில் கொண்டால் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வழி செய்யும்.
- ஒரு நாளைக்குத் தேவையான கலோரிகளும், புரதமும் மூன்றில் ஒரு பாகம் கட்டாயம் இந்த மதிய உணவில் அமைய வேண்டும். (தானியங்கள் பருப்பு வகைகளில் இருந்து கிடைக்கும்).
- மதிய உணவில் கட்டாயம் ஐந்துவகை உணவுத்தொகுதியில் எல்லாவற்றில் இருந்தும் கலந்த உணவு அமைவது அவசியம்.
- தானியங்கள்
- பயறுகள்
- காய்கறி – பழங்கள்
- முட்டை - பால் - மாமிச உணவுகள்
- கொழுப்பு – சர்க்கரை
- தினமும் கீரையை ஏதாவது ஒரு விதத்தில் சேர்த்தால் வைட்டமின்கள், தாது உப்புக்கள் போன்றவைகள் ஒரு நாளைய தேவையில் மூன்றில் ஒரு பாகம் கிடைத்து விடும்.
- புரதச்சத்து கிடைக்க பால், பால் பொருட்களான தயிர், சீஸ் போன்றவை அல்லது தானியம், பருப்பு கலந்த கலவை அல்லது முட்டை இவற்றில் ஏதாவது ஒன்று இடம் பெறுதல் அவசியம்.
- சமைத்த உணவை பல குழந்தைகள் அப்படியே கொண்டு செல்வதானால் கூட ஒரு பழம், சிப்ஸ் அல்லது ஜூஸ், மோர் போன்றவைகளைத் தவிர்ப்பது நலம். அவற்றினால் ஏதும் பயன் இருக்காது.
- தினமும் ஒரே மாதிரி உணவை தவிர்ப்பது நல்லது.
- காலை டிபனுக்குக் கொடுத்ததையே மதிய உணவிற்கும் கட்டிக் கொடுக்கக்கூடாது.
- கொடுக்கும் உணவானது சரியான பதத்தில் இருப்பது நலம். உதாரணத்திற்கு - குழம்பு சாதம்: அதிகமாகத் தளர்த்தியாகக் கலந்தால் உண்ணும்போது வழியும். அதனால் குழந்தைகள் உண்ணாது. தயிர் சாதத்தை மிகக் கெட்டியாக, புளிப்பாகக் கொடுத்தால் உண்ண முடியாது. சப்பாத்தியை ஒரு பாலிதின் கவரில் அல்லது அலுமினியம் ஃபாயில் பேப்பரில் சுற்றிக் கொடுத்தால் காய்ந்து வரட்டென்று ஆகாமல் நன்றாக இருக்கும். நாம் சரியாகக் கொடுக்காமல் உண்ணாத குழந்தையின் மேல் பழி போடுவது கூடாது.