உணவா? விளையாட்டா?
ஆரோக்கியமான உணவை குழந்தைக்குத் தர வேண்டுமென்று எண்ணும் தாய்மார்களுக்கு மிகச் சோதனையான கட்டம் ஸ்கூலுக்குக் குழந்தைகள் செல்வதற்கு முன் உள்ள முதல் நான்கு வருடங்கள் என்று கூறலாம்.
பல் முளைக்கும்போது ஒருவிதமான பிரச்னை. முதலில் வந்த முன் பற்கள் விழும்போது மற்றொரு வகையில் பிரச்னை என எதிர்கொள்ள வேண்டிவரும். வளரும் நிலையில் உள்ள குழந்தைகள் எப்போதும் துறுதுறுவென்று ஓடிக்கொண்டே விளையாடிக்கொண்டே இருப்பதால் ஒரு இடத்தில் உட்கார வைத்து அவர்களுக்கு உணவு கொடுப்பது என்பது பெரிய விஷயமாக இருக்கிறது.
இப்போதெல்லாம் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறுவதில்லை என்பதால் அக்குழந்தையின் பின்னாலேயே சென்று விதவிதமான விளையாட்டுக் காட்டி அவர்களுக்கே தெரியாமல் வாயில் உணவைத் திணிக்கும் தாய்மார்களே அதிகம். அப்படிச் செய்யாமல் எல்லோரும் உணவு உண்ண அமரும்போது குழந்தைகளையும் அவர்களோடு சாப்பிடப் பழக்க வேண்டும். அவர்களாகவே எடுத்துச் சாப்பிடும் பழக்கத்தை உண்டாக்கவேண்டும். ஒருவேளை. இரண்டு வேளை சரியாக சாப்பிடாவிட்டால் பரவாயில்லை. பசித்தால் தானே வந்து உட்கார்ந்து உண்ண வேண்டும் என்று அக்குழந்தை உணரும்படி தாய்தான் செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு நாமே அதன் பின்னால் திரிந்து பழக்கப்படுத்திவிட்டு பிறகு வருந்தினால் பயன் இல்லை.
அதே போல குழந்தையின் முதல் வருட வளர்ச்சியில் மூளை வளர்ச்சி மிக அதிகம். இரண்டிலிருந்து ஆறு வருடம் வரை ஒருவித நிதானமான, எல்லா விதத்திலும் முழு வளர்ச்சி நடைபெறும். குழந்தை ஓடியாடி விளையாடுவதால் மட்டுமின்றி உடல் வளர்ச்சியும் நடைபெறுவதால் நல்ல ஊட்டச்சத்து மிகுந்த உணவு மிக மிக அவசியம் இப்போதைய கால கட்டத்தில் நான் கவனித்தவரை பலரும் அந்த நேரப் பசிக்கு குழந்தைக்குப் பிடித்ததை உண்ணட்டும் என்று மத்தியில் பிஸ்கட் சாக்லேட் கேக் போன்றவைகளைக் கொடுப்பது ஒரு ஃபேஷன் போல ஆகியிருக்கிறது. உணவு உண்ணும் இடைவேளையில் பசி எடுப்பதற்கு முன் இந்த மாதிரி கொடுத்தால் உணவு நேரத்தில் பசி எடுக்காமல் குழந்தை உண்ணவே உண்ணாது. இதனால் என்ன ஆகிறது? ஊட்டச்சத்துள்ள உணவிற்குப்பதில் வெறும் கொழுப்பும் சர்க்கரையும் மாவுச்சத்தும் மட்டுமே சேருகிறது.
புரதச்சத்து சரியான அளவு கிடைக்காவிடில் எலும்பின் வளர்ச்சியும், திசுக்களின் வளர்ச்சியும் குறையும். நல்ல உயரம் திடம் வர வேண்டிய நேரத்தில் கொழுப்புச் சத்து மட்டும் சேர்த்தால் என்ன ஆகும்? ஆரோக்கியம் குறையும். நோய் எதிர்ப்புச் சக்தி குறையும்.
எதிலெல்லாம் புரதச்சத்து இருக்கிறது என்று கேட்கிறீர்களா? முழுப்புரதம் என்றால் பால், மற்றும் அசைவ உணவுகளான முட்டை, மீன், கோழி, மாமிசம் போன்றவற்றில் உள்ளது. அதுவே சைவ உணவு உண்பவர்களாயிருந்தால் முழுப்பயறு வகைகள் சோயா, கோதுமைத் தவிடு, பருப்பு வகைகளில் இருந்தாலும் அதோடு தானியங்கள் சேரும்போது முழுப்புரதம் கிடைக்கிறது.
அதனால் இட்லி முதல் பொங்கல் கிச்சடி வரை எல்லாமே சத்தானவைதான். 4 பங்கு தானியத்திற்கு 1 பங்கு பருப்பு சேர்க்கும் எல்லா உணவுமே நல்ல புரதம் கொண்டவை தான் காய்கறி பழங்கள் கீரை போன்றவை சேரும் படி உணவு கொடுத்துப் பழக்குங்கள்.
திரவ உணவிலிருந்து கூழ் போன்ற உணவிற்கு மாறி திட உணவு உண்ண ஆரம்பிக்கும்போது உள்ள பருவம் மிக முக்கியமானது. அப்போது பல பிரச்னைகள் ஏற்படும். ஐந்திலிருந்து ஆறு வயது வளரும் பருவம் உள்ள குழந்தைகள் மிகவும் தேர்ந்தெடுத்து உண்ணுபவர்களாக இருப்பார்கள்
பள்ளிக்குச் செல்லும் முன் உள்ள பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு உணவைத் தேர்ந்தெடுக்கும் போது கீழே உள்ள குறிப்புகளை நன்கு படித்து மனதில் கொள்ளவும்.
- குழந்தைக்குக் கொடுக்கப்படும் உணவானது அதற்கு முழுச்சத்தையும் கொடுக்கும்படியும் வயிறு நிறையும்படியும் இருக்க வேண்டும். தேவைக்கேற்ப பால் மட்டுமின்றி அதிகப்புரதம் நிறைந்த உணவு இரண்டு வகையாவது இருத்தல் அவசியம். குழந்தைக்கு 18 மாதங்கள் ஆகும்போது கடித்து விழுங்கும்படியாக உள்ள கேரட் போன்றவைகளைத் தரலாம்.
- குழந்தையின் வயதிற்கேற்ப அது உண்ணும் காய்கறிகள், பழங்கள், பயறுகளைத் தேர்ந்தெடுப்பது அவசியம். உதாரணத்திற்கு சரியாக விழுங்கத் தெரியாத குழந்தைக்கு ஆப்பிள் போன்றவைகளைத் தவிர்க்கலாம்.
- ஒரே விதமான உணவுகளே தினமும் கொடுக்கக்கூடாது. வெரைட்டி மிகவும் அவசியம். எந்தக் குழந்தை தன் தட்டில் வைக்கப்படும் எல்லா உணவுகளையும் உண்ணப் பழகுகிறதோ அக்குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். தேர்ந்தெடுத்துத் தனக்குப் பிடித்ததை மட்டும் எடுக்கும் குழந்தை அந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்காது. தினமும் எல்லாவிதமான உணவுத் தொகுதிகளில் இருந்தும் உணவுகள் தேர்ந்தெடுக்கப்படுதல் அவசியம் (தானியங்கள், பயறு, பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், பால், பால் பொருட்கள், எண்ணெய், சர்க்கரை வகைகள்).
- உணவை வெவ்வேறு வடிவங்களில், கலர்களில் மாற்றி குழந்தைக்கு அது உண்ணத் தூண்டும்படி அமைய வேண்டும். தினமும் ஒரே மாதிரி பால் கொடுப்பதைவிட வெவ்வேறு காம்பினேஷன், கலர்கள், மாற்றி வரும்படி கொடுக்கலாம். (உ-ம்) ரோஸ் மில்க், சாக்லேட் மில்க், பாதாம் மில்க் போல) அது மட்டுமின்றி இப்போது விதவிதமான டிசைன்களில் கப்புகள், கண்ணாடி டம்ளர்கள் கிடைக்கின்றன. அதை மாற்றினாலும் பலன் கிடைக்கும் (இன்றைக்கு மிக்கி மவுஸ் டம்ளர், நாளை சூப்பர்மேன் கப் என்று கூறினால் குழந்தை ஆர்வத்துடன் குடிக்கும்)
- அதிகமான காரம், புளிப்பு தவிர்க்கப்படுதல் அவசியம்.
- குழந்தையை எப்போதும் கட்டாயப் படுத்தியோ, துன்புறுத்தியோ உணவை உண்ணச் சொல்லக்கூடாது.
- குழந்தைகள் தம்மைச்சுற்றி இருப்பவர்களிடமிருந்துதான் எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறது. அதனால் வீட்டில் மற்ற எவரும் தனக்கு அந்த உணவு பிடிக்கவில்லை என்றெல்லாம் கூறாமல் பார்த்துக் கொள்ளவும்.
- சிறிய குழந்தைகள் அதிக வாசனைகள், ருசிகள் போன்றவற்றிற்கு மிகவும் பரிச்சயம் இல்லாததால் உணவில் திடீரென ஒரு புதுவித வாசனையுடன் கொடுத்தால் பழக சில நாட்கள் பிடிக்கும். அதனால் உடனடியாக அந்த உணவை உண்ணாமல் போகலாம்.
- தினமும் வேளை தவறாது உணவை உண்ணக் கற்றுக் கொடுக்க வேண்டும். அவ்வப்போது என்று கொடுக்காமல் சரியான நேரத்தில் தினமும் உண்ணக் கொடுத்தல் அவசியம். அப்போதுதான் பசித்து உண்ண இயலும்.
- வெவ்வேறு வகையான உணவுகள் ருசியுடன் கொடுக்கும் போது சுலபமாக குழந்தைகள் அந்த உணவை ஏற்றுக் கொள்ளத் தயங்குவதே இல்லை.
- உணவு உண்ணும்போது அது ஒரு இனிய அனுபவமாக குழந்தைக்கு இருக்க வேண்டும். நாம் வெளியே போக வேண்டுமென்ற ஆசையில். அக்குழந்தையை அவசரம். அவசரமாக சாப்பிடச் சொல்லி வாயில் திணித்து சாப்பிடச் சொன்னால் அந்தக் குழந்தைக்குச் சாப்பிட வேண்டுமென்ற ஆசையே போய்விடும். உணவு உண்ணும்போது அவசரப்படுத்தக் கூடாது. நன்றாக மென்று விழுங்கும் பழக்கத்தை ஏற்படுத்தவேண்டும்.
- காபி, டீ போன்ற பானங்கள் குழந்தைகளுக்கு பழக்கப்படுத்தக் கூடாது. அவர்கள் வளரும்போது உள் உறுப்புகள் நல்லபடி தானாக இயங்குதல் நல்லது. (Never allow their system to be over stimulated by these drinks).
- பொரித்த உணவுகள், அதிகக் கொழுப்பு உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஜீரண உறுப்புகளுக்கு இவை அதிகப்பளுவைத் தரும்.
- நன்கு பழுக்காத வாழைப் பழங்கள், ஆப்பிள் போன்ற உணவுகளைக் குழந்தை விழுங்க முடியாமல் அவதிப்படலாம். ஆறு வயது வரை இவற்றைத் தவிர்ப்பது நலம். பெற்றோர் கண்காணிப்பு இருந்தால் நன்கு பழுத்த பழங்களைத் தரலாம். ஜூஸாகக் கொடுப்பது நல்லது.மற்றபடி பல பிரச்னைகளை உணவுப்பழக்கங்களில் சந்திக்க நேரிடும்.
பெற்றோர்கள் பல் சொத்தையைத் தவிர்க்க என்ன செய்யவேண்டுமென்று கற்றுக் கொடுத்தல் அவசியம்.
தினமும் பல் தேய்ப்பதில் இருந்து எந்தெந்த உணவுகள் உண்டால் வாயில் பாக்டீரியா போன்ற தொற்றுக்கள் அதிகமாகும் என்பது வரை பெற்றோர் தாமும் புரிந்து குழந்தைகளுக்கும் புரிய வைக்க வேண்டும். வைட்டமின் "ஏ" பல்லின் எனாமலுக்கும். வைட்டமின் "சி" டென்டைன் என்ற பல்லின் முக்கியப் பொருளுக்கும் தேவை. கால்சியம். பாஸ்பரஸ். வைட்டமின் "டி" போன்றவை பல்லின் கெட்டித் தன்மைக்கும் தேவை. பல் சொத்தை சீக்கிரம் வராமல் தடுக்க புளுரின் தேவை. சீக்கிரமாகப் புளிக்கும் தன்மை வாய்ந்த மாவுப் பொருட்கள், நேரடி இனிப்புகளான சர்க்கரை அல்லது கலந்த உணவுகள் முக்கியமாக பல் சொத்தைக்குக் காரணம்.
ஒவ்வொரு நேர உணவிற்கு முன்னும். பின்னும் நன்றாக வாய் கொப்பளிப்பது முக்கியம் என்பதையும் உணர்த்த வேண்டும். மற்றபடி குழந்தைகளுக்கு விதவிதமான உணவை ருசியுடன் தயாரிக்க தாயானவள் கற்றுக் கொண்டு அன்புடன் அளிப்பது முக்கியம்.