குழந்தைகள் சத்துணவு - நான்கு வயதுக்கு உட்பட்டவர்களுக்கு
இன்ஸ்டன்ட் புரோட்டீன் மிக்ஸ்
கேழ்வரகு, கொண்டைக்கடலை, பச்சைப் பயறு, பார்லி, முந்திரி, பாதாம், பிஸ்தா – தலா 150 கிராம், புழுங்கலரிசி, சம்பா கோதுமை, வேர்க்கடலை, மக்காச் சோளம், உடைத்த கடலை - தலா 100 கிராம், கொள்ளு, கம்பு, காராமணி, பச்சரிசி, ஜவ்வரிசி - தலா 50 கிராம், துவரம் பருப்பு, வெந்தயம், உளுத்தம் பருப்பு மூன்றும் தலா ஒரு டீ ஸ்பூன், சுக்கு 3 துண்டு, கசகசா 2 டீஸ்பூன்.
செய்முறை: தானிய வகைகளை தனித்தனியே தண்ணீரில் ஊற வைத்து, முளை கட்ட விடவும். பிறகு வெயிலில் உலர்த்தி, வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து வைக்கவும். சுக்கு தவிர மற்ற சாமான்களையும் தனித்தனியாக வறுக்கவும் ஆறியவுடன் எல்லாவற்றையும் மெஷினில் கொடுத்து அரைத்து வைக்கவும்.
8 மாத குழந்தைக்கு ஒரு கரண்டி மாவிற்கு, ஒன்றரை டம்ளர் பால் அல்லது தண்ணீர் விட்டுக் கரைத்து, அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். நன்கு கொதித்துக் கஞ்சியாக மாறும் சமயத்தில், ஒரு சிட்டிகை உப்பும், தேவையான அளவு வெல்லமும் கலந்து இறக்கவும். ஆறியதும் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, குழந்தைக்குப் புகட்ட, சப்புக் கொட்டிக் கொண்டு சாப்பிடும்.
ஓன்றரை வயதிற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு: இந்த வயதில் குழந்தைகளுக்கு தயிரின் வாசனை பிடிக்காது. மேற்சொன்ன முறையில் கஞ்சி தயாரித்து, அதில் 2 ஸ்பூன் தயிர் கலக்கித் தரவும்.
நன்கு கொதித்த, சூடான தண்ணீரில் தேவையான உப்பும், ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயிலும் போட்டு, மைதா 3 பங்கு, சத்து மாவு ஒரு பங்கு என்ற விகிதத்தில் கலந்து, சப்பாத்தி – பூரி செய்யலாம்.
இட்லி மாவில் ஒரு ஸ்பூன் சத்து மாவைக் கலக்கவும். கேரட், அல்லது பீட்ரூட்டை துருவி வைக்கவும். இட்லித் தட்டில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணை தடவி, இட்லி மாவை ஊற்றி, மேலே துருவிய காய்களைத் தூவி, வேக வைத்துத் தரலாம்.
தோசை மாவில் 2 அல்லது 3 ஸ்பூன் சத்து மாவைக் கலந்து ஊற்றி, ஏதேனும் கீரைகளைக் கிள்ளிப் போட்டு, மிதமான தீயில் வேக வைத்துத் தரவும்.
தோல் நீக்கிய இஞ்சித் துண்டு, தக்காளி ஒன்று மிக்ஸியில் அடித்து, சத்து மாவுடன் கலந்து, இட்லி மாவு பதத்துக்குக் கரைக்கவும். நறுக்கிய வெங்காயமும், உப்பும் சேர்த்து, அரை ஸ்பூன் நெய் விட்டு அடையாக வார்க்கவும். கறிவேப்பிலை, மல்லித் தழையை கைகளால் கிள்ளி, மேலே தூவித் தரவும்.
நல்ல கொதித்த தண்ணீரில் உப்பும், சத்து மாவும் கலந்து, நன்கு கிளறி, இடியாப்பக் குழலில் பிழிந்து எடுத்தால், இடியாப்பம் ரெடி. ஆவியில் வேக வைத்து இனிப்பு அல்லது காரம் சேர்த்துக் கொடுக்கலாம்.
கொஞ்சம் மாவை ஒரு ஈரத்துணியில் கட்டி, இட்லிப் பானையில் வேக வைக்கவும். பிறகு சூடு ஆறியவுடன் வாணலியில் லேசாக வறுத்து எடுத்து, மீண்டும் ஆற வைத்து, தேவையான உப்பைத் தண்ணீரில் கரைத்து, மாவில் தெளித்துப் பிசிறவும் கட்டியில்லாமல் பிசிறி, மீண்டும் இட்லிப் பானையில் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். இனிப்புப் புட்டு என்றால் வெல்லமும், பழமும் போட்டுப் பிசைந்து தரலாம். காரப் புட்டு வேண்டுமெனில் தாளித்துத் தரவும்.
குறிப்பு: வெல்லத்திற்குப் பதில் கருப்பட்டி உபயோகிக்கலாம். அதில் இரும்புசத்து இன்னும் அதிகம்.
குழந்தைகள் தானே சாப்பிடப்பழகும் வயது இது. எனவே ஒவ்வொரு ஐட்டத்திற்கும் மேலே காய்களைத் தூவிப் பரிமாறலாம்.
எனி டைம் மல்டி மீல்ஸ்
புழுங்கல் அரிசி, சம்பா – பஞ்சாப் கோதுமை இரண்டிலும் தலா 200 கிராம், பச்சைப் பயறு, காபூலி சனா, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, சோயா பீன்ஸ், கேழ்வரகு - தலா 100 கிராம்.
எல்லா தானியங்களையும் நன்றாகச் சுத்தம் செய்து கொள்ளவும். கேழ்வரகை 2-3 தரம் களைந்து விட்டுக் கல் அரிந்து, நிழல் உலர்த்தலாக உலர்த்திக் கொள்ளவும் இரும்பு அல்லது கனமான அலுமினியம் வாணலியில் ஒவ்வொரு தானியத்தையும் தனித்தனியாகப் போட்டு மணம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். வறுக்கும் போது அதிகம் சிவக்காமல், தீய்ந்து போகாமல் இருத்தல் வேண்டும். பிறகு எல்லாவற்றையும் கலந்து ஆறியபிறகு, மிக்ஸியில் அரைத்து சலிக்கவும்.
முதல் இருமுறை அதாவது சலித்த கப்பி (50 சதம்) இருக்கும் வரை நைஸ் சல்லடையாலும், அதன் பிறகு மெல்லிய ரவை சல்லடையாலும் சலிக்கவும். அப்போதுதான் 'ரெடி மிக்ஸ்' லேசாக, கரகரப்பாக இருக்கும். செய்யும் பொருளும் நாக்கில் ஒட்டிக் கொள்ளாமல் பொல பொல என்று இருக்கும். இந்த மாவைக் காற்று புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
தேவையானபோது, இந்த 'ரெடி மிக்ஸ்' உபயோகித்து, பல சத்தான உணவுகள் செய்து, நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இந்த தானியங்களில் புரோட்டீன், கார்போ-ஹைட்ரேட் மற்றும் தேவையான வைட்டமின்கள் இருப்பதால், இது ஒரு சத்தான சமச்சீரான உணவாகும்.
சுவையான கூழ்: ஒரு டேபிள் ஸ்பூன் மேற்குறிப்பிட்ட 'ரெடிமிக்ஸ்' மாவு எடுத்து, அரை கப் நீரில் கரைத்து, ஒரு கொதி விட்டு இறக்கி, அரை கப் பால், அரை ஸ்பூன் சர்க்கரை கலந்து, ஒரு ஸ்பூன் தேன் விட்டு, மெலிதாக சீவின பாதாம் போட்டு, ஸ்பூனால் எடுத்துச் சாப்பிடும் பதத்தில் (கூழ் பதத்தில்) கொடுக்கலாம்.
வெயில் காலமாக இருந்தால், ஃப்ரிட்ஜில் வைத்துக் குளிர வைத்துக் கொடுக்கலாம்.
திடீர் மாலாடு: 2 டேபிள் ஸ்பூன் மாவு, 1 டேபிள் ஸ்பூன் பொடித்த சர்க்கரை, ஈரம் இல்லாமல் வறுத்த கசகசா, கால் டீஸ்பூன் வறுத்த முந்திரி அல்லது திராட்சை, ஏலப் பொடி எல்லாம் கலந்து, கொஞ்சமாக நெய் காய்ச்சி விட்டு சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்துக் கொடுக்கலாம்.
மினி டோக்ளா: 2 டேபிள் ஸ்பூன் மாவை, புளிக்காத கெட்டி மோர் விட்டு, உப்புப் போட்டு இட்லி மாவுப் பதத்தில் கரைக்கவும். அரை ஸ்பூன் எண்ணெய் காய விட்டு, மஞ்சள் தூள் போட்டு, மாவில் கலக்கவும். ஒரு சிட்டிகை ஈனோஸ் ஃப்ரூட் சால்ட் எடுத்து, ஒரு ஸ்பூன் நீரில் கலந்து மாவில் கலந்தால், புஸ் என்று நுரைத்து வரும்.
இந்த மாவை நன்கு கலந்து, மினி இட்லித் தட்டில் விட்டு, ஸ்டீம் குக் செய்து ஆறிய பிறகு, ஒவ்வொரு டோக்ளா மீதும் கொஞ்சமாக 'சீஸ்' துருவல் வைத்து, அதன் மேல் ஒரு துளி தக்காளி சாஸ் விட்டுக் கொடுக்கலாம்.
ஹெல்தி கட்லெட்: 2 டேபிள் ஸ்பூன் மாவை ஒரு சிட்டிகை மிளகுப் பொடி, உப்புப் போட்டுக் கலந்து வைக்கவும். ஒரு மீடியம் சைஸ் தக்காளியை வெந்நீரில் போட்டு, தோல் உரித்து கூழ் ஆக்கிப் பொறுக்கும் சூட்டில் சுட வைத்து, மாவில் விட்டுக் கெட்டியாகப் பிசையவும்.
கொஞ்சம் கேரட் துருவல், சாஃப்ட்டாக இருக்கும். பச்சைப் பட்டாணி கொஞ்சம் எடுத்து, உப்பு, மஞ்சள் பொடி போட்டு அரை வதக்கல் வதக்கி, மாவுடன் நன்கு கலந்து, ஒரு தட்டில் அரை இன்ச் கனத்திற்கு தட்டி குக்கீஸ் மோல்டுகளால், பல டிசைன்களில் கட் பண்ணவும். மோல்டு இல்லாவிட்டால், கத்தியால் துண்டு போடவும். கட் செய்த துண்டுகளை, ரொட்டித் தூளில் புரட்டி, நான்-ஸ்டிக் தவாவில், கொஞ்சமாக நெய் விட்டு, இருபுறமும் சிவக்கச் செய்து, கட்லெட் தயார் செய்து, தயிர் அல்லது தக்காளி சாஸுடன் கொடுக்கலாம்.
புட்டு மாவு கஞ்சி கூழ்:
புழுங்கல் அரிசி 4 ஆழாக்கு, ஓமம் 50 கிராம், கல் உப்பு சிறிது
சுத்தம் செய்த புழுங்கல் அரிசியில் கொதி நீரை ஊற்றி, 30 நிமிடம் மூடி வைக்கவும். தண்ணீரை வடிகட்டி, நல்ல வெண்மையான துணியில் அரிசியைப் பரவலாகப் போட்டுக் காய விடவும். நன்கு காய்ந்ததும், ஓமம் சுத்தம் செய்ததைப் போட்டு, கல் உப்பு கொஞ்சம் போட்டு, மிஷினில் அரைக்கவும். நன்கு சூடு ஆறினதும், டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.
இந்த மாவில் 2 ஸ்பூன் போட்டு, கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கரைத்து வைக்கவும். அடுப்பில் வைத்துக் கூழ் போல் கிளறி, வெந்ததும், இறக்கி ஆறவிட்டு, காய்ச்சிய கொஞ்ச பாலில் கலந்து, சர்க்கரை கலந்தும் ஸ்பூனால் ஊட்டலாம்.
குழந்தைகளுக்குப் பசி அடங்கும். சாதத்திற்கு ஈடாகும். வேக வைத்து மசித்த காய்கறி, பருப்பு, உருளைக் கிழங்கு ஒரு ஸ்பூன் அளவுக்கு மசித்துக் கலந்தும் ஊட்டலாம்.
எளிதில் ஜீரணமாகவும், வயிறு சம்பந்தப்பட்ட உபாதை வராமல் தடுக்கவும் ஓமம் சேர்ந்து உள்ளது. இது ஒரு ஹெல்தி ஃபுட்.
தானிய சாதம்:
கேழ்வரகு, கம்பு, பாசிப் பயறு, கொண்டைக்கடலை, வேர்க்கடலை தலா 50 கிராம், கேரட், பீட்ரூட் - தலா 1, ஏலக்காய் – 5, தேங்காய் அரை மூடி, மல்லி, கறிவேப்பிலை – தேவைக்கு.
எல்லா தானியங்களையும், ஒன்றாகச் சேர்த்து, காலையில் ஒரு பாத்திரத்தில் போட்டு, ஊற வைக்கவும். மாலையில் அதைக் களைந்து, ஒரு துணியில் போட்டு கட்டி வைக்கவும்.
மறுநாள் தானியங்கள் முளை வந்து இருக்கும். அதை ஆவியில் வேக வைத்து எடுக்கவும். (இட்லிப் பானையின் மேல் துணி போட்டு, அதன் மேல் தானியங்களைப் போடவும்.) 20 நிமிடங்களில் வெந்து விடும். கேரட், பீட்ரூட், தேங்காய் என அனைத்தையும் தனித்தனி ஆகத் துருவி வைக்கவும்.
இத்துருவல்களை தனித்தனி தட்டுகளில் போட்டு, தானியத்தைப் போட்டுக் கலக்கவும். மஞ்சள், சிவப்பு, வெள்ளை எனத் தனித்தனி நிறங்களில் பார்க்க அழகாக இருக்கும்.
இனிப்பு தேவை எனில் வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து ஏலப்பொடி தூவிக் கொடுக்கவும். காரம் தேவை எனில் மிளகுப் பொடி கொஞ்சம் கலந்து கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்துக் கொடுங்கள்.
அனைத்துச் சத்துகளும் நிரம்பிய இந்தச் சத்துள்ள சாதத்தைக் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
வீட் சோயா சப்பாத்தி அன்ட் மஷ்ரூம் தால்:
கோதுமை மாவு - 30 கிராம், சோயா மாவு, கடலை மாவு - தலா 20 கிராம், வெதுவெதுப்பான பால் - 3 ஸ்பூன், துருவிய கேரட் சிறிது, உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய், நெய் - 1 டீ ஸ்பூன்.
3 மாவு வகைகளையும் சலித்து, வெதுவெதுப்பான பால் ஒரு டீஸ்பூன், எண்ணெய் அல்லது நெய் மற்றும் துருவிய கேரட், உப்பு சேர்த்து, தேவையான வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்துப் பிசையவும். பின்பு வழக்கம் போல் தேய்த்து, மெல்லிய சப்பாத்திகளாக இடவும்.
மஷ்ரூம் தால்
சிறியதாக நறுக்கிய (பட்டன்) காளான் - 3 அல்லது 4, பச்சை மிளகாய் – 1, துவரம் பருப்பு - ஒன்றரை ஸ்பூன், இஞ்சி - 2 சிறிய துண்டு, எண்ணெய் - 1 ஸ்பூன், வெங்காயம் – 2 (சிறியது), தக்காளி – ½ (சிறியது), உப்பு, மல்லி, கறிவேப்பிலை – சிறிது, மஞ்சள் தூள், கடுகு தாளிக்க
துவரம் பருப்பை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து, வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகைத் தாளித்து, பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, தக்காளி, வெங்காயம், சிறியதாக நறுக்கிய காளான் சேர்த்து, வேகும் வரை வதக்கவும். இடையில் நீர் சிறிது சேர்த்துக் கொள்ளவும். பின்பு வேக வைத்து மசித்த துவரம் பருப்பை இதனுடன் சேர்க்கவும்.