வளரும் குழந்தைகள் - Growing Children (3)

குழந்தைக்கு வேறு உணவுகள் ஆரம்பிக்கும்போது முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.

  1. ஒரு தடவைக்கு ஒரு உணவு மட்டுமே புதிதாகக் குழந்தைகளுக்குச் சேர்க்கப்பட வேண்டும்.
  2. அந்த உணவின் ருசிக்குக் குழந்தை பழக்கப்பட்ட பின்பே அடுத்த உணவு தரவேண்டும்.
  3. முதல் தடவை கொடுக்கும் போது மிகக் குறைந்த அளவே குழந்தைக்குத் தரவேண்டும். (1 டீஸ்பூனுக்கும் குறைவு)
  4. படிப்படியாகக் குழந்தைக்குப் பழக்கப்படுத்தி உணவின் அளவை அதிகரிக்க வேண்டும்.
  5. முதலில் வடிகட்டிய திரவ உணவுகள் கொடுத்து படிப்படியாக அடர்த்தியை அதிகமாக்கி கஞ்சி போன்ற உணவுகளுக்குப் பழக்கப்படுத்த வேண்டும். அப்போதுதான் குழந்தையால் விழுங்க இயலும்.
  6. குழந்தைக்கு ஏதாவது ஒரு உணவு பிடிக்கவில்லையெனில் அதை அப்போது தவிர்த்து சிறிது நாள் கழித்துக் கொடுத்துப் பார்க்கவும்.
  7. குழந்தைக்குப் பிடிக்காததை கட்டாயப்படுத்திக் கொடுப்பதைத் தவிர்க்கவும். அதனால் அந்த உணவின் மீது எப்போதும் வெறுப்பு ஏற்படுமாறு அமைந்து விடும்.
  8. பெரியவர்களைப் போல உப்பு. காரம் போன்றவற்றைப் போடக் கூடாது. மிக மிகக் குறைந்த உப்பு, மிகக் குறைவான காரம் சேர்க்கலாம்.
  9. குழந்தையால் கடிக்க. விழுங்க. நன்றாக வாயை மெல்ல இயலும் போது தான் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றைச் சேர்க்க வேண்டும்.
  10. ஒரே நேர உணவில் பலப்பல உணவுகளைக் கலந்து ருசியாக சத்துள்ளதாக மாற்றி அமைத்துக் கொடுக்கவும். [தானியம் + காய்கறி (அ) தானியம் + பழங்கள்]
  11. மிகச்சிறிய அளவில் நெய், வெண்ணை, எண்ணெய் போன்றவற்றை உணவில் கலந்து கொடுத்தால் அதிகக் கலோரிச் சத்துள்ள உணவாக அமையும்.
  12. எப்போதும் புதிதாகக் கலந்த உணவைக் கொடுப்பது நல்லது.
  13. அதிக நார்ச்சத்துள்ள அதிக வாசனையுள்ள உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

குழந்தைகள் அதிகக் குண்டாகாமல், அதே நேரம் ஒல்லியாக சத்தில்லாமல் இருக்காமல் நார்மலாக சரியான எடை உயரத்துடன் அமைய சரியான உணவுப் பழக்கங்கள் அவசியம்.

இன்ஸ்டண்ட் முட்டை மா

பச்சரிசி 2 டம்ளர், உளுத்தம் பருப்பு அரை டம்ளர், முட்டை 4, சர்க்கரை 2 டம்ளர், பேரீச்சம்பழம் 20, வேர்க்கடலை - கால் டம்ளர், திராட்சை 25 கிராம், நெய், எண்ணெய் 4 டேபிள் ஸ்பூன்.

அரிசியைக் கழுவி கல் அரித்து, பதமாக உலர்த்தி, பின் மிஷினில் நைசாகத் திரிக்கவும். உளுத்தம் பருப்பையும் லேசாக வறுத்துத் திரித்து வரவும். இரண்டையும் ஒன்றாகக் கலந்து விடவும். வாணலியில் எண்ணெய் நெய் ஊற்றி இந்த மாவை கொட்டி, சிறு தீயில் நல்ல பொன் நிறமாக வறுக்கவும். மாவு வறுபட்டவுடன் பொடித்த ஏலக்காய் அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வறுக்கவும். பின்பு முட்டையை நன்றாக அடித்து அதனைச் சிறிது சிறிதாகத் தெளித்து நன்கு கிளறவும். முட்டை வாடை அகன்றவுடன் அடுப்பை நிறுத்தி விடவும். இதில் ஏலக்காய்ப் பொடி சேர்க்கவும். சிறிது நெய்யில் அவரவர் விருப்பப்படி கொட்டை நீக்கி துண்டுகளாக்கிய பேரீச்சம்பழம், திராட்சை, முந்திரி, நிலக்கடலை வறுத்துச் சேர்க்கவும். சூடு ஆறியபிறகு இதை பாட்டிலில் போட்டு வைத்தால் 3 மாதங்கள் வரை கெடாது.

இது தான் இன்ஸ்டண்ட் முட்டை மா

பயன்படுத்தும் விதம்

6 மாதக் குழந்தைகளுக்கு: இதனைப் பயன்படுத்தும் போது திராட்சை, முந்திரி, கடலை இவை சேர்க்கவேண்டாம். ஒரு ஸ்பூன் மாவை ஒரு கப்பில் போட்டுச் சூடான பாலை அதன் மேல் ஊற்றினால். செரிலாக் போல் திரண்டு வரும். அதைச் சிறிது சிறிதாக ஸ்பூனில் குழந்தைகளுக்கு ஊட்டலாம். பழம் அல்லது ஜூஸ் சேர்த்தும் ஊட்டலாம். தானியங்கள், பருப்பு வகை, முட்டை கலந்திருப்பதால் இது முழுமையான ஊட்டச்சத்து மிகுந்த உணவாகிறது.

2 வயது முதல்: இந்த மாவினை அப்படியே கிண்ணத்தில் வைத்து ஸ்பூன் போட்டுக் கொடுக்கலாம்

மாலாடு: தேங்காயை துருவி சேர்த்து, சிறிது பால் தெளித்து நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாகப் பிடித்துக் கொடுக்கலாம். இது ஒரு மாலாடு.

மா புட்டு: சிறிது மாவுடன் சூடான நீர் அல்லது பால் தெளித்து கட்டிகள் இல்லாமல் உதிர்த்து சற்று அதிகமாகத் தேங்காய்ப்பூ சேர்க்க. இதுவே இன்ஸ்டன்ட் புட்டு. இத்துடன் அவித்த வாழைப்பழம் அல்லது ஏதேனும் பழம் பிசைந்து சாப்பிட சிறுவர்களுக்குக் காலை டிபன் ஆகிறது.

அலங்கரித்த மா கேக்: அரை டம்ளர் இன்ஸ்டன்ட் மாவுடன் சூடான டால்டா - நெய் 4 ஸ்பூன் சேர்த்து பிஸ்கட் மாவு பிசைவது போல் பிசையவும். இதனை பிஸ்கட் அச்சு அல்லது ஹார்லிக்ஸ் மூடியில் அழுத்தித் தட்டினால் பல டிசைன்களில் மா கேக் கிடைக்கும்.

இந்த மாவினை பூரிக்கு நடுவில் வைத்து சமோசா போல் பொரித்து எடுக்கலாம். கொழுக்கட்டை பூர்ணமாக உபயோகிக்கலாம். இந்த மாவை ஃப்ரிட்ஜில் வைத்தால் 6 மாதம் வரை கெடாது.

சத்தான ஸ்நாக்ஸ்

சோள மாவு, கடலை மாவு, அரிசி மாவு – 1 கப், மிளகாய் தூள் – 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1 ஸ்பூன், வெங்காயம் 1/2 கப், பொடியாக நறுக்கிய பாலக்கீரை 1 கட்டு, உப்பு, எண்ணெய் தேவைக்கு, கறிவேப்பிலை சிறிது.

பாலக்கீரையை சுத்தம் செய்து வெறும் வாணலியில் வதக்கவும். வதங்கியபின் ஒரு பாத்திரத்தில் பாலக்கீரை, வெங்காயம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சோள மாவு, கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும். அடித்துப் பிசைய கூடாது. பின்னர் சிறிய உருண்டைகளாகச் செய்யவும். அலுமினியம் ஃபாயில் அல்லது பால் கவரைச் சுத்தம் செய்து சிறிது எண்ணெய் தடவி, அதில் உருண்டைகளை தட்டவும். பின்னர் தோசைக் கல்லை சுடவைத்து சிறிது எண்ணெய் விட்டு தட்டிய உருண்டைகளை சுடவும். நடுவில் சிறிய ஓட்டை போட வேண்டும். இருபுறமும் எண்ணெய் விட வேண்டும். ஒரு தட்டால் மூடவும். சிவந்த பிறகு எடுத்துவிட வேண்டும்.

குழந்தைகளுக்கு மிகவும் சத்தான ஸ்நாக்ஸ் இது. இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. சட்னி அல்லது சாஸ் சேர்த்து சிறிது வெண்ணை தடவியும் சாப்பிடலாம்.
Powered by nasrullah.in - TechnoNasr 2003-2020.
Designed & Developed by Mohamed Nasrullah.M