குழந்தை குண்டாக கொழு கொழுவென்று இருக்க என்ன கொடுக்க வேண்டும்?
பலப்பல தாய்மார்கள் கேட்கும் முதல் கேள்வியே இதுதான். குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று முதலில் எண்ணுங்கள். குழந்தையின் எடையானது அதன் எலும்பு, தசை போன்றவற்றினால் இருக்க வேண்டும். கொழுப்புச் சத்தினால் எடை போடக் கூடாது. நோய் எதிர்ப்புச் சக்தி குழந்தைக்கு இயற்கையாகவே அமையும்படி அதன் உணவுப் பழக்கங்கள் அமைய வேண்டும். அதனால் உணவைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பது என்பது அவசியமாகிறது. புரதச்சத்தானது குழந்தையின் எலும்பு, தசை, பற்கள் போன்றவை வலுவாக அமைய உதவும். அதை பருப்பு வகைகள், கீரை, முட்டை போன்றவற்றில் இருந்து பெறலாம்.
வைட்டமின்கள், தாது உப்புக்களை காய்கறிகள், பழங்கள், பால் போன்றவற்றில் இருந்து பெறலாம். "சக்தியை" தானியங்கள், பழங்கள், பாலிலிருந்து பெறலாம்.
முதல் வருடம் எந்தெந்த உணவு கொடுக்கப்படலாம் என்பதற்குக் கீழ்க்காணும் குறிப்புகள் பயனுள்ளதாக அமையும்.
திரவ வகை உணவுகள்
- பால்: தாய்ப்பாலானது குழந்தைக்கு ஆறு மாதங்கள் ஆகும்போது ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறைகள் வருமாறு குறைந்து போகும். அப்போது பசும்பாலைத் தரலாம். முதன் முதல் பசும்பால் தரும்போது 2 பங்கு பாலுடன் ஒரு பங்கு தண்ணீர் சேர்க்கவும். ஒரு சில வாரங்களில் பழகப்பழக தண்ணீர் ஊற்றுவதைக் குறைத்து அப்படியே தரலாம். அப்போது தான் குழந்தையின் ஜீரண உறுப்புகள் அதைச் சரிவர ஏற்றுக் கொள்ளும். ஒரு நாளுக்கு 2 தடவை ஒரு தடவைக்கு 225 மில்லி லிட்டர் அளவு பால் சரியாக இருக்கும். சரக்கரை வேண்டுமானால் சேர்க்கலாம்.
- ஜூஸ் பழரசங்கள்: குழந்தைக்கு மூன்று அல்லது நான்கு மாதங்கள் ஆகும்போது ஜூஸ் தர ஆரம்பிக்கலாம். பொதுவாக ஆரஞ்சு, சாத்துக்குடி, தக்காளி, திராட்சை போன்ற பழ ரசங்களைக் கொடுப்பதால் வைட்டமின் "சி" சத்து கிடைக்கும். முதன் முதலில் கொடுக்கும் போது ஜூஸ் உடன், சம அளவு காய்ச்சி ஆற வைக்கப்பட்ட தண்ணீர், சேர்த்துக் கலந்து கொடுக்கவும். படிப்படியாக தண்ணீர் விடுவதைக் குறைத்து ஒரு சில வாரங்களில் ஜூஸை அப்படியே தரலாம். முதலில் மிகக் குறைந்த அளவே கொடுக்கப்படவேண்டும். அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சம் தரலாம். ஆரஞ்சு சாத்துக்குடி ஜூஸானால் ஒரு நாளைக்கு 75 மி.லி, தக்காளி ஜூஸானால் 170 மி.லி கொடுத்தால் சரியாக இருக்கும்.
- கீரை சூப்: கீரையைக் குக்கரில் தண்ணீர் விட்டு வேக வைத்து அரைத்து நன்கு வடிகட்டி "சூப்" போல் கொடுக்கலாம். ருசிக்காக ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கலாம்.
- மீன் எண்ணெய்: டாக்டரின் பரிந்துரையின் பேரில் "டானிக்" போல கிடைக்கும். மீன் எண்ணெய் தரலாம். இதில் வைட்டமின் "ஏ" மற்றும் “டி” கிடைக்கப்பெறும். சிறிதளவு பாலில் ஒரு சில சொட்டுகளைக் கலந்து தர வேண்டும்.
மசிக்கப்பட்ட உணவுகள்
7 அல்லது 8வது மாதத்தில் இருந்து குழந்தைக்கு மசிக்கப்பட்ட உணவுகள் தரலாம். அதுவரை அதற்கு ஜூஸ், பால், சூப் டானிக் போன்றவை தரலாம்.
ஸ்டார்ச் உள்ள கஞ்சி வகைகள் கலோரிகளும் புரதமும் கிடைப்பதற்குப் பலவித தானியங்கள், பயறுகள், கலந்து தயாரிக்கப்படும் சத்துமாவு கஞ்சியை பால், சர்க்கரை கலந்து தரலாம். அதில் புரதத்தின் சத்தை அதிகமாக்கவும், சுலபமாக ஜீரணிக்கப்படுவதற்கும் முளை கட்டிய தானியம், பயறுகள் உபயோகப்படுத்தப்படுகிறது. இவை ஊற வைக்கப்பட்டு முளை கட்டப்படுகிறது. அதற்குப்பின் காய வைக்கப்பட்டு பதமாக வறுக்கப்பட்டு சலித்து கஞ்சி மாவாகத் தயாரிக்கப்படும். இதைப் போல முளை கட்டப்பட்ட தானியங்களில் ஸ்டார்ச்சானது மால்டோஸாக மாற்றப்படும். இந்த மாவைத் தயாரித்து பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டால், தினமும் தண்ணீர் விட்டு கஞ்சியாகக் காய்ச்சி பிறகு அதில் பால், சர்க்கரை சேர்த்துக் குழந்தைக்குத் தரலாம். அதிக விலை கொடுத்து கடைகளில் விற்கப்படும் உணவுகள் தான் வாங்க வேண்டுமென்பதில்லை. நாமாகவே தயாரித்தால் விலையும் குறைவு. நாமே சுத்தமாக செய்தோமென்ற திருப்தியும் கிடைக்கும்.
சத்து மாவு
கேழ்வரகு (ராகி) - 1 கிலோ, பொட்டுக்கடலை அரை கப், பஞ்சாப் கோதுமை (200 கிராம்), முழு பச்சைப் பயறு தலா 1 கப்.
கேழ்வரகை 24 மணி நேரம் ஊறவைத்து அதன் பின் முளைகட்டி 2-3 நாள் வைக்கவும். முளை வந்தபிறகு ஒரு மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்துக் கொஞ்சம் கொஞ்சமாக வாணலியில் போட்டு நல்ல வாசனை வரும்படி வறுக்கவும். பஞ்சாப் கோதுமையை நன்றாக வறுக்கவும். கோதுமை வறுபட்டதும் கடைசியாக பொட்டுக்கடலை சேர்த்துச் சூடானதும், இறக்கவும். பயறை தனியாக நன்றாக வறுக்கவும். இவை எல்லாவற்றையும் ஒன்றாக மிஷினில் அரைத்து நைஸ் பவுடராக்கவும். விருப்பமானவர்கள் பாதாம் பருப்பு. குங்குமப்பூ சேர்த்துக் கொள்ளலாம். இந்த முறை சத்துமாவு அக்காலத்தில் இருந்து பல குடும்பங்களில் செய்து வைத்துக் கொள்வது வழக்கம். இதில் தானியம், பயறு கலவை சிறப்பானதாக உள்ளதால் சக்தி, புரதம் மற்றும் பல முக்கிய சத்துக்கள் கிடைக்கிறது. சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் கஞ்சி காய்ச்சிக் குடிப்பது வழக்கம். இதைப் போல செய்து வைத்துக் கொண்டு அதோடு வேகவைத்து மசித்த காய்கறி, பழங்கள் விதவிதமாக மாற்றி தினமும் தரலாம். முட்டையின் மஞ்கள் கரு அல்லது மாமிசம் வேகவைத்த தண்ணீர் (சூப்) போன்றவைகளை சிறிதளவு கலந்து தரலாம்.