வளரும் குழந்தைகள் - Growing Children (1)

1 - 6 மாதங்களில்...

குழந்தை பிறந்தவுடன் தேன், சர்க்கரைத் தண்ணீர் தொட்டுவைப்பது கூடாது. குழந்தையின் முதல் உணவாக தாய்ப்பால் மட்டுமே இருக்க வேண்டும். அதனைச் சீம்பால் என்பர். குழந்தைக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களும் தாய்ப்பாலில் உள்ளது. குழந்தைக்குக் தண்ணீர் கொடுக்கவேண்டிய அவசியமே இல்லை. தாய்ப்பாலிலேயே தேவையான நீரும் இருக்கிறது. அரைகுறையாகப் பால் கொடுக்காமல், குழந்தையின் பசியாறும் வரை கொடுக்க வேண்டும். குழந்தையை உடம்புடன் எவ்வாறு அணைத்து, பாலூட்டுவது என்பதை ஒரு தாய் தெரிந்துவைத்திருக்க வேண்டும். இதை ‘அட்டாச்மென்ட்’ என்பார்கள்.

தாய்ப்பாலில் மூன்று வகை உள்ளன. முதலில், 'முன்னம் பால்' என்பர். இது, சர்க்கரை தண்ணீர் போன்று இருக்கும் அடுத்து, திரவமான பால். மற்றொன்று, திடமான பால். இத்தகைய பால் சுரப்புக்குத் தாய்க்கு உடல் மட்டும் ஆரோக்கியமாக இருந்தால் போதாது. மனநிலையும் மிகவும் முக்கியம். மனநிலையை நன்றாகவைத்திருந்தால், பால் சுரப்பிகள் நன்றாகச் செயல்பட்டு குழந்தைக்குப் போதிய அளவு பால் சுரக்கும். 2 மணி நேரம் முதல் 3 மணி நேர இடைவெளியில் பால் கொடுக்க வேண்டும். இவ்வாறு ஒருநாளைக்கு 10 முறையாவது பால் கொடுக்க வேண்டும். இப்படி 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.

6 - 8 மாதங்களில்...

இந்த மாதங்கள்தான் குழந்தைகளுக்குத் திட உணவுகள் கொடுக்க ஆரம்பிக்கும் காலகட்டம். இதை இணை உணவு என்பர். அதேநேரம், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக் கூடாது. 3 அல்லது 4 மணி நேரத்துக்கு ஒருமுறையாவது அளிக்க வேண்டும். மசித்த உணவு அல்லது ராகிக்கூழ், அரிசி கஞ்சி கொடுக்கலாம். இணை உணவு கொடுக்க ஆரம்பிக்கும்போது, முழுமையான திரவ உணவாகவோ, திட உணவாகவோ இல்லாமல், கஞ்சி பக்குவத்தில் கொடுக்க வேண்டும். முக்கியமான விஷயம், கட்டாயப்படுத்தி உணவை அளிக்கக் கூடாது. இணை உணவு கொடுக்க ஆரம்பித்ததும், குழந்தையானது தாய்ப்பால் குடிப்பதைக் குறைக்கும். அதற்காக, கவலைப்பட வேண்டாம்.

8 - 10 மாதங்களில்...

கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் உணவுகளைத் தவிர்க்கவும். வீட்டிலேயே செய்யப்பட்ட கலப்படமில்லாத உணவு வகைகளான மசித்த வாழைப்பழங்கள், ஆவியில் வேகவைத்த ஆப்பிள், உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றைக் கொடுக்கலாம். ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களைச் சுடுநீரில் மசித்துக் கொடுப்பது சிறந்தது.

10 - 12 மாதங்களில்...

வேகவைத்து மசித்த கேரட், பீட்ரூட், முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றைக் கொடுக்கலாம். பிறகு, வீட்டில் நாம் சாப்பிடும் உணவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுக்க ஆரம்பிக்கலாம். இட்லி, பருப்பு சாதம், கீரைச் சாதம் மற்றும் கேரட், பீட்ரூட் போன்றவற்றை வேகவைத்து மசித்து, சாதத்துடன் கலந்துக்கொடுக்கலாம். ஒரு வயதுக்கு மேல் நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம்.

தவிர்க்க வேண்டியவை...

படுத்துக்கொண்டே பால் கொடுப்பது தவறு. அது குழந்தைக்கு மிகவும் ஆபத்து.

சில சமயங்களில் உணவின் கலப்படத்தாலோ, உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவினாலோ குழந்தைக்கு ஒவ்வாமை உண்டாகி, வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இதற்குத் தாய்ப்பாலிலேயே பாதி குணமாகிவிடும். அது மட்டுமின்றி, ORS எனப்படும் (Oral Rehydration Solution / உப்பு சத்து குடிநீர்) என்று சொல்லப்படும் மருந்தினைக் கொடுக்கலாம். இவை கிடைக்காதபட்சத்தில், 200 மில்லி தண்ணீரைக் கொதிக்கவைத்து ஆறியவுடன், அதில் ஒரு டீஸ்பூன் சர்க்கரையும் ஒரு சிட்டிகை உப்பும் கலந்து 50 மில்லியாகக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளைக் குளிக்க வைக்கும்போது கண்களை மூடுதல் போன்றவை செய்யக் கூடாது.

குழந்தைகளுக்கு பவுடர் போடுவது, மை வைப்பது, சாம்பூராணி காட்டுவது போன்றவை, நுரையீரல் பிரச்னையை ஏற்படுத்தும். சிலருக்கு நிமோனியா, ஆஸ்துமா போன்றவையும் ஏற்படலாம்.

பிறந்த குழந்தைக்கு பசும் பால் கொடுக்கக் கூடாது. குழந்தைக்கு ஜீரணமாகாமல் ஒவ்வாமை ஏற்படும். ஒரு வயத்துக்குப் பிறகுதான் பசும் பால் கொடுக்க வேண்டும்.

உணவை மிகவும் குளிர்ச்சியாகவோ, சூடாகவோ கொடுக்கக் கூடாது. மிதமான நிலையில் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்குக் கொடுக்கும் பழங்களைச் சுடுநீரில் சுத்தமாகக் கழுவி கொடுக்க வேண்டும். ஃப்ரிஜில் வைக்கப்பட்ட உணவுகளைக் கொடுக்கவே கூடாது.

ஒரு குழந்தைக்கு சிறு வயதில் கொடுக்கும் உணவுதான், ஆயுள் முழுவதும் சத்தாகத் தொடரும். நாம் தினமும் குழந்தைகளுக்குச் சத்தான உணவுகளைக் கொடுத்து வந்தாலே, பிற்காலத்தில் மருந்து, மாத்திரை போன்றவை தேவைப்படாது.
Powered by nasrullah.in - TechnoNasr 2003-2020.
Designed & Developed by Mohamed Nasrullah.M