பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணெய் தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணெயைக் காய்ச்சித் தேய்க்கணும். குழந்தை தலையிலேயும், உடம்புலேயும் தேய்க்க தேவையான அளவு சுத்தமான தேங்காயெண்ணெயைக் காயவைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய்ப்பால் விடுங்க. அது படபடன்னு கொதிச்சு அடங்கினதும் 1 டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் பொடியைப் போட்டு இறக்குங்க. குழந்தைக்கு 1 வயது வரை இந்த எண்ணெயைத்தான் தேய்க்கணும். ஆனால் இந்த எண்ணெய் நல்லாப் போற மாதிரி பாசிப்பயறு மாவு தேய்த்துக் குளிப்பாட்டணும். இப்படிச் செய்து வந்தால் குழந்தைக்கு உடம்பில் சொறி, சிரங்கு என எதுவும் வராமல் மேனி பட்டுப் போல் இருக்கும்.
பொதுவா குழந்தைக்கு நாலு வயசாகும் வரை தலைக்கு தேங்காயெண்ணெய் தேய்ச்சு குளிப்பாட்டறதுதான் நல்லது. நல்லெண்ணெய் குளியல் வேண்டாம். முன்னெல்லாம் ஃப்ரெஷ்ஷா தேங்காய்ப்பால் எடுத்து காய்ச்சி எண்ணெய் எடுத்து குழந்தைக்கு தேய்ச்சுக் குளிப்பாட்டுவோம். இப்பவும் கேரளாவுல அப்படித்தான் செய்யறாங்க. அதான் குழந்தையில் இருந்தே அவங்க சருமமும் தலைமுடியும் பட்டுப்போல இருக்கு. ஆனால்.. இந்தக் காலத்துல உடனுக்குடன் எண்ணெய் எடுக்குறதெல்லாம் நடக்கிற காரியமா? அதுக்குப் பதிலா நல்ல தேங்காயெண்ணெய் ரெண்டு கரண்டி அளவுக்கு எடுத்து, சுட வெச்சு அதுல கால் கரண்டி தேங்காய்ப்பாலும் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளும் போட்டா, தேங்காய்ப்பால் சடசடங்கற கத்தத்தோட முறிஞ்சு ஃப்ரெஷ் தேங்காயெண்ணெய்யா கமகமனு மணக்கும். இதை குழந்தையோட தலை, உடம்பு என முழுக்கப்பூசி குளிப்பாட்டினால் ஜோரா இருக்கும். எண்ணெய் பசை போக சீயக்காயெல்லாம் போடக்கூடாது. பாசிப்பயறு அல்லது கடலை மாவு தேய்ச்சுக் குளிப்பாட்டினாலே எண்ணெய் பசை போய்டும். இப்பிடி குளிக்க வெச்சா, குழந்தைக்கு சொரி சிரங்கு மாதிரியான சரும வியாதிகள் எதுவும் பக்கத்துலயே வராது. வெயில் காலத்துல ஒரு பக்கெட் தண்ணியிலே ஒரு கொத்து வேப்பிலை போட்டு சூரிய வெப்பத்துலே வெச்சு சூடேரினதும் அந்தத் தண்ணியிலே குளிப்பாட்டினா, இன்னும் நல்லது.
குழந்தைகள் தலைக்குக் குளிக்கும் நீரில் வேப்பிலை போட்டுக் குளிப்பாட்டுவது நல்லது.
மாதமொரு முறை வெந்தயம் 1 ஸ்பூன், மிளகு அரை ஸ்பூன், வேப்பிலை 4, துளசி 4 ஆகியவற்றை அரைத்துத் தலையில் தேய்த்து 5 நிமிஷம் ஊறியபின் குளிப்பாட்டுவது சூட்டைத் தணிக்கும். கிருமிகள் அணுகாமல் தடுக்கும்.
ஓமம், வசம்பு, மஞ்சள், இந்துப்பு, அதிமதுரம், சீரகம், திப்பிலி, சுக்கு இவைகளைச் சம அளவு எடுத்து, இடித்துத் தூளாக்கி வைத்துக் கொண்டு, ஒரு கரண்டி பசும் நெய்யில் கலந்து, தினசரி காலையில் ஒரு கரண்டி கொடுத்து வந்தால், மக்குப் பிள்ளையும் கெட்டிக்காரப் பிள்ளை ஆகி விடும்.
குழந்தை நோய்களுக்குத் துளசி மிகவும் கைகண்ட மருந்து. கொஞ்சம் துளசியை எடுத்து சுத்தம் செய்து சற்று ஆவியில் காட்டிக் கசக்கிப் பிழிந்து சாற்றை எடுக்கவும். ஒரு தேக்கரண்டி அளவு சாற்றில் சிறிய கோரோசனை மாத்திரை ஒன்றைக் கரைத்துக் குழந்தைக்குக் கொடுக்க, அவ்வப்போது வரும் நோய்கள் அனைத்துமே குணமாகும்.
முற்றின தேங்காயிலிருந்து எடுத்த தேங்காய்ப்பாலை (தண்ணீர் கலக்காமல்) காய்ச்சி எண்ணெய் எடுக்கவேண்டும். அந்த எண்ணெயை வடிகட்டி, தினமும் காலை மாலை ஒரு ஸ்பூன் உள்ளுக்குக் கொடுத்தால் வாய்ப்புண் வயிற்றுப்புண் குணமடையும். தவிர இந்த எண்ணெயை 5 மாதம் வரை குழந்தைகளுக்குத் தேய்த்துக் குளிப்பாட்டினால், தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் குழந்தைகளுக்கு வராது.
கடுக்காய்த்தூளை வெந்நீரில் போட்டுக் கொதிக்க வையுங்கள். இந்தத் தண்ணீரில் குழந்தையைக் குளிப்பாட்டினால் ஜலதோஷம் பிடிக்காது.
குழந்தைகளைக் குளிப்பாட்டும் போது தண்ணீரில் கொஞ்சம் உப்பும், டெட்டாலும் கலந்து கொண்டால், குழந்தைகளுக்கு சரும நோய்கள் வராது.
வேப்பங்கார உருண்டை: பிறந்த குழந்தைகளுக்கு வேம்பின் கொழுந்து இலை சிறிதளவு, இரண்டு மிளகு, சீரகம் இவைகளை மைபோல முன்னதாகவே அரைத்து வைத்துக் கொண்டு, அதில் சுண்டைக்காய் அளவு வெந்நீரில் கலக்கி, எண்ணெய் குளியல் முடிந்ததும் கொடுத்து வர, நோய் நொடியின்றி ஆரோக்கியமாக இருப்பார்கள்.