வயிற்றில் பூச்சி - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே வசம்பைச் சுட்டுப் பொடியாக்கித் தேனில் குழைத்துக் குழந்தையின் நாக்கில் தடவி கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுக்குக் கொடுத்தால் வயிற்றில் பூச்சிகள் எளிதில் இறந்து விடும்.
கொக்கிப்புழுக்கள் - மஞ்சள் கிழங்குச் (பச்சை மஞ்சள்) சாற்றை அரை அல்லது ஒரு தேக்கரண்டி வரை பாலில் கலந்து இரண்டு மூன்று நாட்கள் கொடுத்தால் கொக்கிப் புழுக்கள் மாண்டு மலத்தோடு கழிந்துவிடும்.
பூச்சித் தொல்லை - மாதம் ஒரு முறையோ அல்லது வாரம் ஒரு முறையோ 5 மில்லி விளக்கெண்ணெயுடன் 5 மில்லி வேப்பெண்ணெயையும் கலந்து உள்ளங்கையில் ஊற்றி நாவால் நக்கிச் சாப்பிடவும். சற்று குமட்டலாம். என்ன செய்வது, இதைச்சாப்பிட்டு ஒரு மணி நேரத்திற்குப்பின்னே சிற்றுண்டி சாப்பிட வேண்டும். மலத்தோடு பூச்சிகள் வெளியே வந்துவிடும்.
திமிர்ப்பூச்சிகள் வெளியாக - வேலிப்பருத்தியின் (உத்தாமணி) வேரை உலர்த்தி இடித்துத் தூள் செய்து, 2 அ 3 சிட்டிகை பாலில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால், வாயுத் தொல்லை நீங்கி, நன்றாக பேதியாகும். வயிற்றிலுள்ள திமிர் பூச்சிகளும் வெளியாகும்.
வயிற்றில் உண்டாகும் நாடா போலிருக்கும் நாக்குப் பூச்சிக்கு - 2 அவுன்ஸ் மாதுளை வேரின் தோல், ஒரு அவுன்ஸ் மாதுளம்பூ இரண்டையும் 16 அவுன்ஸ் தண்ணீரில் வேக வைத்து 8 அவுன்ஸ் ஆக்கி, இதில் 2 அவுன்ஸ் மருந்தை அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு, பிறகு அரை மணி நேரத்திற்கு ஒரு தடவை சாப்பிட, மிகவும் சுலபமாக பேதியாகும். வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சிகள் எல்லாம் வெளியாகும். இந்த மருந்தை விட சிறந்த மருந்து வேறு ஒன்றும் இல்லை எனலாம்.
இளநீருடன் ஒன்று அல்லது அரை அவுன்ஸ் தேன் கலந்து காலையில் சாப்பிட்டால் பூச்சிகளுடன் பேதியாகும். அதிகமாகப் பேதியானால் மோர் சாப்பிட வேண்டும். மேலும் பேதியானால் மோர்ச் சாதம் சாப்பிட பேதி நிற்கும்.
பிரண்டைச்சாறு, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை மோர் கலந்து சாப்பிட்டால் (அரை டம்ளர்) வயிற்றில் பூச்சிகள் போய்விடும்.
சிறு குழந்தைகள் இனிப்பு வகைகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதால் பூச்சிகள் உண்டாகும். இதற்கு ஒரு எளிய வைத்தியம். தித்திப்பு மாதுளையை முதல் நாள் சாப்பிடக் கொடுத்து, மறுதினம் பாலில் சிறிது விளக்கெண்ணெயைக் கலந்து கொடுத்தால் பூச்சிகள் வெளியேறும்.
வெங்காயம் 3, வேப்பிலைக் கொழுந்து கொஞ்சம், ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம் அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சிறு நெல்லிக்காயளவு 5 - 6 நாட்கள் சாப்பிட்டு வந்தால், குடலில் உள்ள புழுக்கள் வெளியாகும். வயிற்று வலி, வயிற்றை புரட்டி வலிக்கும் வலிகளும் குணமாகும்.
மண்ணூண்பாண்டு (மண், ஊண், பாண்டு), மண் உண்பதினால் வருகின்ற பாண்டு என்று பெயர். தவறு என்று தெரிந்த பின்னரும் மேற்கூறியவற்றைத் தின்பதை நிறுத்த வேண்டும். வயிற்றுப் பூச்சியை அகற்ற பேதிக்கு மருந்து உட்கொள்ளுதல் வேண்டும். அகத்திக் கீரையை அவித்து எடுத்த குடிநீருடன், பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்தால், 2-3 முறை வயிறு கழிந்து பூச்சிகள் வெளிப்படும். உடலில் ரத்தத்தை அதிகரிக்கும்.
குழந்தை இரவில் பல்லை நறநற என்று கடிப்பது குடல் புழுக்களின் உறுத்தல் இருப்பதனால் தான். வேப்பங்கொழுந்தை அரைத்து வெல்ல உருண்டையில் வைத்து விழுங்கச் சொல்லுங்கள். அல்லது ஒரு பிடி துளசியோடு ஒரு ஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து 2 டம்ளர் நீரில் கலந்து கொதிக்க வைத்து, அரை டம்ளர் ஆனதும் வெது வெதுப்பாகக் குடிக்கச் செய்யுங்கள். தினமும் வெறும் வயிற்றில் இதைச் சாப்பிட்டால், பூச்சித் தொல்லை நீங்கும்.
கொக்கிப் புழுக்கள் தொந்தரவிலிருந்து விடுபட, துளசிச் சாற்றுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்து வரவும். தினமும் சில இலைகளை மென்று வந்தாலே, புழுக்கள் வெளியேறும்.
வேப்பிலைக் கொழுந்துடன் சிறிது உப்பைச் சேர்த்து, மையாக அரைத்து, சுண்டைக்காய் அளவு உருண்டைகளாக்கி, இரண்டு உருண்டைகளை வெறும் வயிற்றில் சாப்பிடச் செய்தால், பூச்சிகள் செத்து, வெளியே வந்துவிடும்.
நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் மாங்கொட்டையை நன்றாகப் பொடி செய்து, ஒரு ஸ்பூன் தேனில் அரை ஸ்பூன் பொடியைக் கலந்து, காலையும், மாலையுமாக (விடுமுறை நாட்களில்) இரண்டு நாட்கள் தரவும்.
வயிற்று உப்புசம், வயிற்று வலி, முடக்குவாதம், நாக்குப் பூச்சி இவைகளைப் போக்க, நொச்சி இலையையும், மிளகையும் சேர்த்து, கஷாயம் வைத்துச் சாப்பிடலாம். இந்நொச்சி இலைகளை நசுக்கித் தலையில் வைத்துக் கட்ட, தலை பாரம், உடல் நோவு தீரும்.
வயிற்றிலிருக்கும் பூச்சிகளை, இயற்கை வழியில் ஒழிக்க, வெறும் எலுமிச்சம்பழத்தைத் தண்ணீரில் பிழிந்து, சர்க்கரை போடாமல் சாப்பிட்டு வந்தால், வயிற்றிலுள்ள பூச்சிகள் இறந்து விடும். பூச்சிகள் இறக்கும் வரை, இனிப்பைத் தொடக் கூடாது.
வயிற்றில் கீரைப்பூச்சிகள் இருந்தால், வாரத்திற்கு ஒரு முறை அன்னாசிப் பழம் சாப்பிடுங்கள். வயிற்றைச் சுத்தம் செய்து, வயிற்றிலுள்ள பூச்சிகளை எல்லாம் கொன்று அழித்து விடும் தன்மை அன்னாசிப் பழத்திற்கு உண்டு.
கொட்டைப் பாக்கை சந்தனம் போல் இழைத்து, சுமார் ஒரு ஸ்பூன் அளவு காலை வெறும் வயிற்றில், சிறிது பாலில் அல்லது தண்ணீரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, குடல் பூச்சிகள் மொத்தமும் அன்றே வெளிவரும். கடும் பத்தியம் கிடையாது. குழந்தைகளின் வயதுக்கேற்ப அளவைக் கூட்டியோ, குறைத்தோ கொடுக்கலாம்.
வேப்பம்பூவை பூக்கும் காலத்தில் சேர்த்து உலர்த்தி வைத்துக் கொண்டு, வாரம் ஒரு நாள் 2 தேக்கரண்டி வேப்பம்பூவும், 1 தேக்கரண்டி மிளகும், நெய்யில் வாட்டி, அரைத்து, சுண்டைக்காய் அளவு குழந்தைகளுக்குக் கொடுக்க வயிற்றுக் கிருமிகள் நாசமாகும்.
குப்பை மேனி இலைகள் 100 கிராம் எடுத்து, தூய்மை செய்து கொள்ளவும். சிற்றாமணக்கு எண்ணெய் அரை லிட்டர் எடுத்து, அதில் இந்த இலைகளைப் போட்டுக் காய்ச்சவும். இலைகள் மிதக்கும்போது, அவைகளை வெளியே எடுத்து நன்கு அரைத்து, மேற்படி எண்ணெயில் கலந்து வைக்கவும். குழந்தைகளுகு ஒரு தேக்கரண்டி, பெரியவர்களுகு இரண்டு தேக்கரண்டி அளவு, காலையில் உள்ளுக்குக் கொடுத்து, இச்சா பத்தியம் இருக்கவும். குடல் கிருமிகள் யாவும் வெளியேறும்.
தூங்கும்போது பற்களை 'நறநற' என்று கடிக்கும் குழந்தைகளுக்கு, சிறிய வெள்ளைப் பூச்சிகள், அரிசி, இனிப்பு நிறைய தின்னும் பிள்ளைகட்கு உண்டாகும். ஆமணக்கெண்ணெய் சங்கு அளவு எடுத்து, குப்பைமேனி வேர், வேப்பிலை இவைகளை சமமாக அரைத்து, ஒரு கொட்டைப் பாக்கு அளவு எடுத்து, மேற்படி எண்ணெயில் கரைத்து ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை வெறும் வயிற்றில் கொடுத்து விடவும்.
நன்றாக பேதி ஆக - மிளகு ரசம், நிற்க - மோர் சாதம். இப்படி செய்ய, பூச்சி இருந்த இடம் தெரியாமல் ஒழியும். பற்களைக் கடிப்பதும் நிற்கும்.
காய்ந்த திராட்சை ஒரு பிடி, சூரத் விதை (நிலா விதை) இரண்டையும் கஷாயம் வைத்துக் கொடுத்தால், வயிற்றில் உள்ள பூச்சிகள் இறந்து விடும்.
அகத்திக் கீரையை அவித்து எடுத்த குடிநீருடன் பனங்கற்கண்டு சேர்த்து, குடித்தால் 2, 3 முறை வயிறு கழிந்து, பூச்சிகள் வெளிப்படும். உடலில் ரத்தத்தை அதிகரிக்கும்.
சிறு குழந்தைகள் இரவில் தூக்கத்தில் நறநறவென பல்லைக் கடிக்கும். இதற்கு முதல் நாள் காலை ஒரு கடுக்காயை உடைத்து, கால் டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து, மறு நாள் அதைக் கொதிக்கவைத்து, ஆறவைத்து, வடிகட்டி, வாரம் ஒருமுறை குழந்தைகளை குடிக்கச் செய்தால், பல் கடிப்பது நாளடைவில் நின்றுவிடும்.
குழந்தைகளுக்கு நீர் பிரியாமல் கஷ்டப்பட்டால், தாய்ப்பால் சிறிது எடுத்து, வெள்ளைத்துணியில் நனைத்து, தொப்புளில் வைத்தால் உடனே நீர் பிரியும். தாய்ப்பால் கிடைக்காவிட்டால் பச்சைத்தண்ணீரில் நனைத்தும் போடலாம்.
குழந்தைக்கு சரியாக சிறுநீர் போகாமல், வயிறு உப்பியிருக்கிறதா? சில சமயங்களில் கை கால்கள் கூட வீங்குவதுண்டு. கற்பூரத்தையும் சந்தனத்தையும் நல்லெண்ணெயில் கலந்து சூடாக்கி, குழந்தையின் அடிவயிற்றில் தடவி ஒத்தடம் கொடுத்து வாருங்கள், சிறுநீர் போக ஆரம்பித்து விடும்.
மீன் எண்ணெய். கடுகு எண்ணெய் இவற்றைத் தினமும் தேய்த்தால் கால்களுக்குப் பலம் உண்டாகும். கால் சூப்பிய குழந்தையை அரிசி கழுவிய நீரில் நிற்க வைத்தால் அல்லது ஆற்று மணலில் நிற்க வைத்தால் காலப்போக்கில் சரியாகிவிடும்.
முற்றின தேங்காயிலிருந்து எடுத்த தேங்காய்ப்பாலை (தண்ணீர் கலக்காமல்) காய்ச்சி எண்ணெய் எடுக்கவேண்டும். அந்த எண்ணெயை வடிகட்டி, தினமும் காலை மாலை ஒரு ஸ்பூன் உள்ளுக்குக் கொடுத்தால் வாய்ப்புண் வயிற்றுப்புண் குணமடையும். தவிர இந்த எண்ணெயை 5 மாதம் வரை குழந்தைகளுக்குத் தேய்த்துக் குளிப்பாட்டினால், தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் குழந்தைகளுக்கு வராது.
சிறு கட்டிகள் வந்துவிட்டால்: சிறிது சோப்பும், மஞ்சளும் கலந்து, கட்டியில் தடவினால், உடனே உடைந்து விடும்.
உட்காயங்கள்: குழந்தைகள் கீழே விழுந்து அடிபட்டால் மேல்காயம் இல்லாமல் உட்காயமாகக் கூட இருக்கலாம். அதனால் கீழே விழுந்த குழந்தைக்கு பாலுடன் மஞ்கள் பொடி சேர்த்துக் குடிக்க வைத்தால் உள்புண் ஏற்பட்டிருந்தாலும் ஆறிவிடும்.