அஜீரணத்தால் அவதிப்பட்டால், தாய்ப்பாலிலோ வெந்நீரிலோ, சிறிது பெருங்காயத்தையோ அல்லது மிளகையோ கரைத்துக் கொடுக்க வயிற்றுவலி நின்று விடும்.
குழந்தைகளின் அஜீரணத்திற்கு லேகியம்: ஓமம் - கால் படி, வெல்லம் - கால் படி, நெய் - 4 ஸ்பூன், தேன் - 4 ஸ்பூன். ஓமத்தைக் கல்நீக்கி சுத்தம் செய்து, புளித்த மோர் அல்லது தயிரில் ஊறவைக்கவும். மறுநாள் காலை வெயிலில் உலர்த்தி, நன்றாக உலர்ந்ததும், வாணலியில் சிவக்க வறுத்து, அத்துடன் வெல்லமும் சேர்த்துப் பொடி செய்யவும். அடுப்பில் சிறு தீயாக எரியவைத்து, வாணலி வைத்து, அதில் நெய் விட்டு, பொடி செய்தவைகளைப் போட்டுக் கிளறி, லேகியபதம் வந்ததும் தேன் விட்டு இறக்கி வைத்துக் கொள்ளவும் (ரொம்ப கட்டியாகக் கிளறினால் கட்டியாகிவிடும்) குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்று சம்பந்தமான அஜீரணம், வயிற்றுவலி, வயிற்றுப்போக்குக்கு தினம் காலை சிறு சுண்டைக்காயளவு கொடுத்தால் அவை நீங்கிவிடும்.
சரியா பசி எடுக்காமல், சாப்பிடவே சங்கடப்படுற குழந்தைகளுக்கு 3 வெற்றிலையோட சாறுல, கொஞ்சம் மிளகுத்தூள்போட்டு கஷாயம் காய்ச்சிக் குடிக்கக் கொடுத்துப் பாருங்க. கபகபனு பசி எடுத்து நீங்க போட்டதை மூச்சுக் காட்டாம சாப்பிட்டுவிட்டுப் போயிடுவாங்க.
வயிற்றுப்புரட்டல்: ஓமம், 2-3 வெற்றிலை, பெருங்காயம், சிறுதுண்டு சுக்கு, ஒரு பல் பூண்டுடன் அரைத்து, வெந்நீரில் கலக்கிக் கொடுத்தால் நல்லது. வாந்தி எடுத்தாலும் இதை உபயோகிக்கலாம்.
மாந்தம்: குழந்தை வியாதிகளுக்கு என்றே இறைவன் சிருஷ்டியில் உண்டாக்கப் பட்ட இயற்கை மருந்துகளில் மஞ்சள் நீராட்டி, மஞ்சனாட்டி, மஞ்சனாத்தி என்னும் நுணா இலையும் ஒன்று. குழந்தைகளுக்குக் காணும் தீவிர (கடுமையான) வியாதிகளில் மாந்தம் என்பது ஒன்று. இதில் பலவிதம் உண்டு. உப்பு மாந்தை, கண மாந்தை, மூச்சை இழுக்கும் மோது மார்பு விலாப் பக்கங்களில் பள்ளம் விழுதல், போன்றவைகளுக்கு அள்ளு மாந்தை, குண்டிக்காய் அச்சரம் என்று சொல்வதுண்டு. மற்றும் உளை மாந்தம், போர் மாந்தம், பீச்சாங்குழல் அடித்த மாதிரி வயிற்றிலிருந்து வேகமாக வரும் பேதி, மற்றும் சகல மாந்த, கண ஜூரங்களுக்கு நுணா இலைச் சாறு மிகுந்த பயன் தரவல்லது.
நல்ல பசுமையான நுணா இலையை இடித்துப் பிழிந்த சாறு ஒரு பங்கு, உத்தாமணி இலைச் சாறு, நொச்சி இலைச் சாறு, பொடுதலை சாறு ஆகியவை மூன்றும் ஒரு பங்கு சேர்த்து ஒன்றாகக் கலக்கி, 6 மாத குழந்தைகளுக்கு வேளை ஒன்றுக்கு அரை சங்கு அளவு (40 முதல் 60 துளி), 1 வருடத்திற்கு மேல் 2 வயதுள்ள குழந்தைக்கு அரை சங்கு அளவும், 3 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 1 சங்கு அளவு ஆக நாள் ஒன்றுக்கு 3 முதல் 4 வேளை, இரண்டு முதல் மூன்று நாள் நோய்க்குத் தக்கபடி கொடுத்து வர, சகல மாந்த ரோகமும் தீரும்.
தாய்ப்பால் கொடுப்பவர்களுக்கு வாயைக் கட்டிவிட வேண்டும். "வாயைக் கட்டினவளுக்கு பிள்ளையும், வயிற்றைக் கட்டினவளுக்குக் கணவனும்", இது நம் நாட்டுப் பழமொழி. குழந்தை நோய் நீங்க, தாய்க்குப் பத்தியம் அவசியம். சுட்ட புளி, வறுத்த உப்பு, மிளகு ரசம், துவரம் பருப்பு துவையல் போன்றவை மட்டும் சேர்ப்பதால், மேலே குறிப்பிட்ட மாந்த நோய்கள் எவ்வளவு கடினமாக இருந்த போதிலும் குணமாகி விடும் என்பதில் ஐயமில்லை. பசுமையான இலைகளை தினமும் கொண்டு செய்வது நல்லது. இப்படிச் செய்ய வசதியற்றவர்கள் கீழ்க்கண்ட முறைப்படி தயாரித்து வைத்துக் கொண்டால், வேண்டும் போது, கஷாயம் தயாரித்து உபயோகித்துக் கொள்ளலாம்.
முற்றிய நுணா இலை, உத்தாமணி இலை, நொச்சி இலை, பொடுதலை ஆகிய நான்கையும் சுத்தம் செய்து, பழகிய வாயகன்ற சட்டியில் போட்டு தண்ணீர் விடாமல் நன்றாகக் கருக்கி, கருகிய உடன் எடுத்து வைத்துக் கொண்டு, அதே சட்டியில் சுக்கு, மிளகு, சீரகம், ஓமம், பெருங்காயம் இவைகளை ஒவ்வொன்றாய் நல்லெண்ணை விட்டு சிவப்பாக வறுத்து எடுத்து, யாவும் ஒன்றாய் இடித்துத் தூள் செய்து, காற்று புகாத புட்டியில் வைத்துக் கொண்டு, வேளை ஒன்றுக்கு ஒரு மேஜைக் கரண்டி அளவு, தூளை ஒரு மெல்லிய துணியில் இளக்கமாக முடிச்சு கட்டி, அரைக் குவளை தண்ணீரில் போட்டு, கொதிக்கக் காய்ச்சி, சுண்ட எடுத்து மேற்சொன்ன அளவுபடியே குழந்தைகளுக்குக் கொடுத்து வர, மாந்த கண ரோகங்கள் யாவும் மாயமாய் மறைந்து விடும்.
மந்தம்: வெற்றிலையும் ஓமமும் உள்ளங்கையில் வைத்து நன்கு கசக்கி சாறு எடுத்து, வயிற்றில் தடவி மிக லேசாக சூடு காண்பித்தால் (விளக்கில் கை வைத்து, அந்த சூட்டை) மந்தம் விலகி பசி எடுக்கும். அந்தச் சாற்றை ஒரு துளித் தாய்ப்பாலுடன் கலந்து உள்ளுக்கும் கொடுக்கலாம்
கைக்குழந்தைக்கு மாந்தம். உப்புசம்லாம் வராம இருக்க, உரை மருந்து கொடுக்கணும்: ஜாதிக்காய், மாசிக்காய், வசம்பு, கடுக்காய், சுக்கு எல்லாம் தலா ஒன்று எடுத்து வேக வைக்கவும். அப்புறம் அதை எடுத்து வெயிலில் சுக்கா காய வைக்கவும். குழந்தைக்குத் தலைக்குக் குளிப்பாட்டும்போது எல்லாம், இந்த மருந்துப் பொருட்களை சுத்தமான சந்தனக்கல்லில் ஒரு உரை (அதிகம் கூடாது) உரைச்சு, 2 டேபிள் ஸ்பூன் தாய்ப்பாலில் கலந்து புகட்டணும். ஆறு மாதக் குழந்தை என்றால் 10 நாளுக்கு ஒரு முறை, ஒரு வெற்றிலை, ஒரு பல் பூண்டு, ஒரு சிட்டிகை ஓமம் எல்லாத்தையும் அரைத்து வெந்நீரில் கலந்து ஒரு பாலாடை அளவு புகட்டினால் குழந்தைக்கு வயிற்றில் வாயு சேராம இருக்கும்.
குழந்தைகளுக்கு வயிற்றில் உண்டாகும் மப்பு, மாந்தம் முதலிய கோளாறுகளைத் தடுக்க பசும்பாலுடன் ஆரஞ்சுப் பழ ரசமும், தோல் சத்து நீரும், மூன்று சம பங்காகக் கலந்து கொடுத்து வர, நல்ல குணத்தைக் காணலாம். (தோல் சத்து நீர்: ஆரஞ்சுத் தோலை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி 8 அவுன்ஸ் சுடுதண்ணீர் விட்டு அரை மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்)
கறிவேப்பிலையில் எட்டும், வயதுக்குத் தக்கபடி ஒன்று முதல் நான்கு மிளகையும் சேர்த்து நெய்யில் வறுத்து, வெந்நீர் விட்டு அரைத்துக் கரைத்துப் பாலர்களுக்கு நீராட்டிய பின் குடிக்கச் செய்தால், மந்தம்-மாந்தம், முதலியன நீங்கிப் பசியை உண்டு பண்ணும். சுறுசுறுப்பாக இருக்கும்.
அஜீரணத்தால் வயிறு உப்பிக் கொண்டு அழும் குழந்தைகளுக்கு, பெருங்காயம் ஒரு புளியங்கொட்டை அளவு, ஒரு தேக்கரண்டி ஓமம், ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு சிறிய துண்டு சுக்கு, அரை தேக்கரண்டி உப்பு, 10 பற்கள் பூண்டு, 10 துளசி இலைகள், 10 வில்வ இலைகள், 10 வேப்பங்கொழுந்து, 10 முள் நீக்கிய தூதுவளை இலை, 2 வெற்றிலை ஆகியவைகளை நைசாகக் கெட்டியாக அரைத்து, பட்டாணி அளவு மாத்திரைகளாகச் செய்து, நல்ல வெயிலில் நன்றாக 2-3 நாட்கள் உலர்த்தி, காற்று புகாமல், கண்ணாடி பாட்டிலில் எடுத்துப் போட்டு வைத்தால், அதில் ஒரு மாத்திரை எடுத்துக் கரைத்து, குழந்தைகளுக்கு உடம்பு குளிப்பாட்டியவுடன் கொடுத்தால், அஜீரணம் நெருங்குவதே இல்லை. பெரிய குழந்தைகளுக்கு 3 மாத்திரை கொடுத்தால், நல்ல பசி எடுத்து உணவு உட்கொள்ளும். கைக்குழந்தைகளுக்கு இது நல்ல மருந்து.
குழந்தை வயிறு வலித்து அழுதால் கடுக்காயை சந்தனம் மாதிரி உரைத்து, குழந்தையோட வயிற்றில் சதும்பப்பூசி விடணும். ஒரு வெற்றிலையை விளக்கில் காட்டி சூடு படுத்தி இளஞ்சூட்டில் குழந்தையின் தொப்புளில் போட வேண்டும். 2 நிமிஷத்தில் வலி நீங்கி குழந்தை சிரிக்கும்
மலச்சிக்கல்: தினமும் 2 – 3 பெரிய காய்ந்த திராட்சையை நீரில் ஊற வைத்து, பழத்தை நன்கு பிழிந்து எடுத்து விட்டு, நீரைப் புகட்டலாம்.
வயிற்று வலி: சூட்டினால் ஏற்படும் வலியாக இருந்தால், தொப்புளைச் சுற்றி, ஒரு ஸ்பூன் விளக்கெண்ணை அல்லது நல்லெண்ணை தடவி, தொப்புளுக்கு உள்ளும் விடலாம்.
சிறு குழந்தையின் வயிற்றுக்கடுப்புக்கு கசகசாவை அரைத்து பசும்பாலில் கலக்கிக் கொடுக்க உடனே நின்றுவிடும்.
அடிக்கடி பேதியானால்: ஓமத்தைக் கருப்பாக வறுத்து, அதில் 3 டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு பங்காக வற்றவைத்து, வடிகட்டி, அத்துடன் தேன் கலந்து கொடுக்க வேணடும். சிறு குழந்தைக்கு, ஒரு பாலாடை வீதம் 3 அல்லது 4 நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை நாளைக்கு 5 வேளை கொடுக்கலாம்.
சூடு காரணமா குழந்தைக்கு மலம் தண்ணியாகப் போனால்: ஜாதிக்காயைத் தாய்ப்பாலில் 2 உரை உரைச்சு புகட்டிப் பாருங்க. உடனே குணம் கிடைக்கும். 3 வேளை இப்படிக் கொடுத்தால் முழுவதுமா குணமாயிடும். ஆனால் ஒரு விஷயம் ஜாக்கிரதை! ஜாதிக்காயை 2 உரைக்கு மேல் உரைக்கக்கூடாது. டோஸ் ஜாஸ்தியாச்சுன்னா, குழந்தைக்கு மயக்கம் வரவும் சான்ஸ் இருக்கு.
துளசி விதையை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து, ஒரு சங்கு வீதம் கொடுக்க வாந்தியும் பேதியும் உடனே நிற்கும்.