குழந்தைகள் புஷ்டியாக வளர
"அஷ்டா வங்கர அ. தானிகி தம்புடு சொ. நாலு கால்ல பெ. நல்ல குட்ல மி"
அ - அல்லம் (இஞ்சி), சொ - சொன்டி (சுக்கு), பெ - பெல்லம் (வெல்லம்), மி - மிரிகாலு (மிளகு)
இது ஒரு தெலுங்குப் பாடல். இவற்றைக் கலந்து. உருண்டை செய்து தினமும் சாப்பிட, வேறு மருந்துகளே தேவையில்லை. பறந்துவிடும் நோய்கள். தடுத்துவிடும் நோய்களை.
மிளகு, சீரகம், அதிமதுரம், தென்னம்பூ, ஆலம்விழுது - ஒவ்வொரு தோலா எடுத்து, பசும்பாலிட்டு மை போல அரைத்து, முக்கால் படி பசு நெய்யில் கலக்கிக் காய்ச்சி வடித்து வைத்துக் கொள்ளவும். காலை, மாலை ஒரு மொச்சை அளவு கொடுத்து வந்தால், குழந்தைகள் புஷ்டியாக வளரும்.
குழந்தைகளுக்குக் கொடுக்கும் பசும்பாலைக் காய்ச்சும்போது, அதில் 5 துளசி இலைகளை நன்றாகக் கழுவி, துடைத்துப் போட்டு, நன்றாகக் கொதித்ததும் இறக்கி, ஆறினபிறகு துளசி இலைகளை எடுத்துவிட்டு, அந்தப் பாலை கொடுத்து வந்தால், எந்த நோயும் வராது. வயிற்றில் புளிப்பு சேராது. ஜலதோஷம் பிடிக்காது. ஜீரண சக்தி உண்டாகும்.
9 மாதங்கள் கடந்த குழந்தைகள் துரித வளர்ச்சியும், பருமன் ஆகவும் வளர, பகல் உணவில் நெய் பருப்புச் சாதத்துடன், வேகவைத்த உருளைக்கிழங்கை பாதி சேர்த்து பிசைந்து ஊட்டி விடவும். வாரம் 3 நாட்கள் இவ்வாறு செய்து வரலாம். வேக வைத்த உருளைக் கிழங்குடன் பால் ஏடு சிறிதும், சர்க்கரை சிறிதும் சேர்த்துப் பிசைந்தும் ஊட்டலாம்
ஒரு பிடி கொத்துமல்லி இலையை ஆய்ந்து, பழுப்பு இலைகளை நீக்கித் தனியே வைக்கவும். இரண்டு ஸ்பூன் உளுந்து, இஞ்சி 1 துண்டு, சிறிது புளி, பெருங்காயம் 1 துண்டு, மிளகு 10, ஆகியவற்றை நெய்யில் வேக வைத்து, வறுத்து, வதக்கி, தேங்காய்த் துண்டு சிறிது மேற்படி கொத்துமல்லி இலையுடன் சேர்த்து மை போல் அரைக்கவும். அதன்பின் சிறிது சீரகம் சேர்த்துத் தாளித்து கலந்து துவையல் ஆக்கவும். பகல் உணவில் 3 பிடி சூடான சாதத்தில் அரை ஸ்பூன் நெய், 5 ஸ்பூன் துவையல் கலந்து பிசைந்து சாப்பிட்டு வரவும். 3 மாதத்தில் உடலுக்குத் தேவையான இரத்தத்தை இதன் மூலம் பெற்றிடலாம். வாரம் இரண்டு நாளாவது இவ்வாறு சாப்பிடுவது உடல் வளர்க்கும் எளிய உபாயமாகும். இரண்டு வயதைத் தாண்டும் குழந்தைகளும், மகப்பேறு அடைந்த தாய்மார்களும் இவ்வாறு உண்பது 'இரத்த சோகை' நோயை விரட்டும்.
ஏத்தன் (நேந்திரம்) காய்களை தோலைச் சீவி, சிறிய துண்டுகளாக்க வேண்டும். பிறகு அவைகளை நல்ல வெயிலில் காய வைத்து, நன்றாக உரலில் இடித்து, சல்லடையில் சலித்து, பொடியை காற்றுப் புகாத டின்னில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளின் வயதுக்கு ஏற்றவாறு அளவான பொடியை எடுத்து, அதற்குரிய தண்ணீரை அடுப்பில் வைத்து, கொதிக்க வைக்கவும். நன்கு தண்ணீர் கொதித்ததும், பொடியைப் போட்டுக் கூழ் போல் கிளறி இறக்கவும். அளவான சர்க்கரை சேர்த்து, வளரும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். கேரளாவில் மூன்றாம் மாதம் முதலே இக்கூழைக் காய்ச்சிக் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். அதிவிரைவாக குழந்தை 'கொழு-கொழு' என புஷ்டியாக வளர்வதைப் பார்த்து மகிழலாம்.
வளர்ற குழந்தைகளுக்கு விளாம்பழம் ரொம்ப நல்லது. அப்பப்போ விளாம்பழத்தைக் கொடுத்து சாப்பிட வைத்தால், உறுதியான எலும்புகள் அமையும். ஞாபக சக்தி அபாரமா இருக்கும். நோய்களும் சட்டுனு தாக்காது. பற்கள் பலப்படும். வயதானவர்களுக்கும் டானிக் மாதிரி செயல்படும்.
இரவில் தூங்கும் முன் சூடான பாலில் தேன் கலந்து குடித்தால், நல்ல 'ஞாபக சக்தி' வரும் தூக்கமும் வரும் மெலிந்த தேகம் சற்று பூசினாற் போன்று வரும்.
அரிசிக் குருணையுடன் கொள்ளையும் சேர்த்துக் கஞ்சியாக வைத்துச் சாப்பிட்டு வந்தால், உடலில் நன்றாக சதை பிடிக்கும்.
பீட்ரூட், பீன்ஸ், அவரை, முள்ளங்கி, நூல்கோல், காரட், முட்டைக்கோஸ், டர்னிப், ஒரு முருங்கை, புடலை, தக்காளி இவற்றைச் சிறு துண்டுகளாக நறுக்கி வேக வைத்து, தண்ணீரை வடிகட்டி, அதனுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் குழந்தைகளுக்கு "சூப்" போல செய்து கொடுத்தால் மிக நன்றாகப் பசி எடுத்து பலம் கொடுக்கும். வெந்த காய்களை கறி, கூட்டு செய்யலாம். தொடர்ந்து 10 நாட்கள் குடித்தால் உடல் எடை கூடும். "அனிமிக்"கினால் (சோகை) பலஹீனம் ஏற்படாமல் இருக்கும்.
சிறு குழந்தைகளுக்கு வசம்பை அரைத்துச் சிறு உருண்டையாக்கி வெற்றிலையில் வைத்து அதை விளக்கில் காட்டி சிறிது சூடு படுத்தி, தலை உச்சி உள்ளங்கால். விலா முழுவதும் தடவ வேண்டும். சிறிது நாக்கில் தடவலாம். அஜீரணம், மலச்சிக்கல் தடுக்கப்படுவதோடு நினைவாற்றல் பெருகும். வாரத்தில் 3-4 நாட்கள், ஒரு வயது வரை இதைச் செய்யலாம்
தற்போது குழந்தைகளுக்கு நினைவாற்றல் அதிகம் தேவை. படிப்பு சுமை அதிகம். வசம்பு அதற்கு வழி செய்யும். இரவில் படுக்கும் சமயம் அரைத்த வசம்பை, சுண்டைக்காயளவு வென்னீரில் கலக்கிக் குடித்தால் குழந்தைகளுக்கு நல்ல நினைவாற்றல் இருக்கும். 12 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு இது பலிக்கும்
புதினா, கொத்தமல்லி செடியை சமஅளவு எடுத்து அரைத்து, அந்தச் சாறை வடிகட்டி குடித்தால், குழந்தைகளுக்கு நல்ல ஞாபக சக்தி கிடைக்கும். புத்துணர்வு ஏற்படும்.
கைக்குழந்தைகள் இரவில் தூங்காமல் அழுது கொண்டிருந்தால் - அரை ஸ்பூன் தேன் கொடுத்தால், நன்கு தூங்கும்.
இழுப்பு என்னும் இசிவு நோய்: குழந்தைக்கு இழுப்பு வந்து, கை-கால் உதறி, பல் கிட்ட ஆரம்பிக்கும். உடனே காயப்படுத்தாத சிறு பென்சில் அல்லது கட்டையை, இரு பல் வரிசைக்கு நடுவே வைத்து விடவேண்டும். பிறகு, இஞ்சியை தட்டி சாறு எடுத்து சர்க்கரை சேர்த்துப் புகட்டிவிட வேண்டும். பூண்டைத்தட்டி ஒரு துணியில் கட்டி. விளக்கில் காட்டினால் அதிலிருந்து ஒரு எண்ணெய் வடியும். அதை உள்ளங்கை, உள்ளங்கால், விலா முதலிய இடங்களில் தடவ வேண்டும். வேப்பெண்ணெயையும் தடவலாம். சிறு குழந்தைகள் இருக்குமிடத்தில் இந்த எண்ணெயை வைத்திருப்பது நல்லது.
குழந்தைகளுக்கு வலிப்பு நோய் வந்தால், தினசரி 3 வேளை, 2 தேக்கரண்டி அளவு திராட்சைப் பழச்சாறு கொடுங்கள். வலிப்பு நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் திராட்சைப் பழத்திற்கு மட்டுமே உண்டு.
தூதுவளை இலைச்சாறு இஞ்சிச்சாறு, துளசிச்சாறு இவைகளை ஒன்று சேர்த்து, அதனளவு தேன் சேர்த்து, ஒரு தேக்கரண்டி வீதம் குழந்தைகளுக்கு 3 நாட்கள் கொடுக்க, தெக்கத்திக்கணை என்னும் இழுப்பு உடனே நிற்கும். கபம் கரைந்து ஆரோக்கியம் பெறும்.
குழந்தைகளுக்கு இழுப்பு நோய் வந்தால் உடனே வெங்காயத்தை நசுக்கி, ஒரே ஒரு துளியை குழந்தையின் கண்களில் விடுங்கள். கண்களில் எரிச்சல் ஏற்படும். இழுப்பு நிற்கும்.
சில குழந்தைகளுக்கு வாயில் மாவு மாதிரி வெள்ளை படிந்து இருக்கும். அதை நீக்க, மாசிக்காயை சந்தனக்கல்லில் உரசி, அந்த விழுதை குழந்தையோட நாக்கில் தடவினால் போதும்.
சின்னக் குழந்தை வாந்தி பண்ணினால், வசம்பைச்சுட்டுப் பொடி பண்ணி ஒரு ஸ்பூன் தாய்ப்பாலில் கலந்து, நாக்கில் தடவினால் சட்டுனு குணம் கிடைக்கும். வசம்புக்கு "பிள்ளை வளர்ப்பான்"னு பேரே உண்டு.
குழந்தைகளுக்கு வாந்தியும், பேதியுமானால், மருந்துக் கடையில் கிடைக்கக் கூடிய துளசி விதையை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து, ஒரு சங்கு வீதம் கொடுக்க, உடனே நிற்கும்.
துளசிச் சாற்றில் ஒரு காசு எடை எடுத்து வெற்றிலையில் விட்டு கொஞ்சம் தேன் சேர்த்துக் குழப்பி குழந்தையின் வாயில் தடவினால் வாந்தி நின்றுவிடும். குழந்தை நன்றாகப் பால் குடிக்கும்.
துளசி விதையை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து, ஒரு சங்கு வீதம் கொடுக்க வாந்தியும் பேதியும் உடனே நிற்கும்.
ஒரு வயது குழந்தைக்கு பல் முளைக்கும்போது, மலக்கட்டு உண்டாகும். ஜலதோஷம், காய்ச்சல் உண்டாகும். அப்போது திராட்சைப் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து, தினமும் இருவேளை 1 ஸ்பூன் அளவு கொடுத்துவரவும்.