மூளை - Brain

சீமை அத்திப்பழம் 2, உலர்ந்த திராட்சைப்பழம் 10 கிராம், இரண்டையும் பாலில் கலந்து காய்ச்சி, தினம் காலையில் சாப்பிட்டுவர கண்களுக்கும் மூளைக்கும் நல்ல வளர்ச்சியும் வலிமையும் தரும்.

இரவில் தூங்கும் முன் சூடான பசும்பாலில் தேன் கலந்து குடித்தால், நல்ல 'ஞாபக சக்தி' வரும் தூக்கமும் வரும், மெலிந்த தேகம் சற்று பூசினாற் போல் வரும்.

தேவையான அளவு கொத்துமல்லி, உப்பு, மிளகு ஆகியன சேர்த்துத் துவையல் செய்து பகல் உணவில் ஒருபிடி சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டுவர, மூளைத் திசுக்களின் வளர்ச்சி குன்றாது. குறிப்பாக பக்கவாதம் மூளையின் ரத்தச் சுழற்சித் தடைகள் ஆகியவை வராது காக்கும்.

மூளையைப் பற்றிய பல்வேறு நோய்களைத் தடுத்து சீர்ப்படுத்தும் தன்மை கறிவேப்பிலையில் உண்டு.

சித்தப்பிரமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கால்பிடி கறிவேப்பிலையுடன், 1 சிட்டிகை மஞ்சள் பொடி, 2 சிட்டிகை சீரகம் தூள் செய்து சேர்த்து தினசரி காலையில் அரைத்து மோருடன் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டுவர பிற மருத்துவ சிகிச்சைகளில் காணமுடியாத நற்பலன்களை இதில் காணலாம்.

கரிசாலை, குப்பை மேனி, சிறுசெருப்படை என்று ஒரு மூலிகை, ஆகிய இவைகளை சமஅளவு எடுத்துச் சூரணம் செய்து உட்கொள்ள, உடலில் ஏற்படும் தோஷங்களும், அறிவும் நன்கு விருத்தியாகி உடல் பொன் நிற மேனியாகும்.

புத்திக்கூர்மை

'புத்தி கூர்மைக்கு மோர் இன்றியமையாதது' - மோரைப் பெருக்கி எலுமிச்சம்பழச் சாற்றுடன் கலந்து சாப்பிட்டு வந்தாலேயே பிறர் சாதிக்க முடியாத காரியங்களைத தனது மதி வன்மையால் சாதிக்கலாம்.

எலுமிச்சம்பழச் சாறு கலந்து நிறைய நீருடன் பெருக்கி அளவான உப்பு இட்டுப் பருகலாம்.

ஓமம், வசம்பு, மஞ்சள், இந்துப்பு, அதிமதுரம், சீரகம், திப்பிலி, சுக்கு இவைகளை சம அளவு எடுத்து இடித்துத் தூள் செய்து வைத்தக் கொண்டு, ஒரு கரண்டி பசும் நெய்யில் கலந்து, தினசரி காலையில் ஒரு கரண்டி கொடுத்து வந்தால் மக்குப் பிள்ளையும் கெட்டிக்காரப் பிள்ளையாகி விடும்.

துளசி இலைகள் 10 முதல் 20 எடுத்துக் கழுவி, அத்துடன் ஏலக்காய் 4, சுக்கு அரைத் துண்டு, இவைகளைச் சேர்த்து நசுக்கி 1 குவளை கொதி நீரில் கலந்து காய்ச்சி அரைக் குவளையாக வடிகட்டி, தேவையானால் சிறிது பால், தேன் கலந்து வர மணமுடன் மருத்துவ குணமும் உடலுக்குச் சேரும். இந்தத் துளசி டீ சாப்பிட்டு வந்தால், மூளையின் செயல் திறன் ஊக்குவிக்கப் படுகிறது.

மூளைச் சோர்வு

கல்யாணிப்பூசணிக்காயின் சாற்றை ஒரு அவுன்சுக்குக் குறையாமல் எடுத்து ஒரு தேக்கரண்டி தேனோ அல்லது போதுமான அளவு கற்கண்டோ பனைவெல்லமோ சேர்த்து சாப்பிட்டு வருவதன் மூலம் அதி மோகத்தால் உண்டான தளர்ச்சியைப் போக்கிக் கொள்ளலாம். மேலும் இம்முறைப்படி சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தம் அடைந்து களைப்பு நீங்கிவிடுகின்றது. மூளை சோர்வும் அசதியும் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த பானமாகும். இதற்குச் சமமான சோர்வு நீக்கும் மருந்தே இல்லை எனலாம்.

தாமரைப் புஷ்பத்தை நீரில் காய்ச்சி காலை மாலைகளில் உண்டு வந்தால் மூளை பலப்படும், தேகமும் சிவந்து காணும். நரை திரை மாறிவிடும்.

பைத்தியம் தெளிய

சங்கு புஷ்பத்தின் வேரை பசுவின் பாலில் அரைத்து 80 நாட்கள் காலையில் கொடுத்து வரவும். அல்லது கூவளத்தின் வேர், பட்டை, இலை, பூ, காய் இவைகளைக் கொண்டு வந்து, தண்ணீரில் அரைத்து வெண்ணெய் சேர்த்து 96 நாட்கள் கொடுக்கவும். பைத்தியம் குணமாகும்.

சித்தப்பிரமை

ஊமத்தன் என்ற உன்மத்தம் பூவை தண்ணீரில் போட்டு வைத்திருந்து மேல்படி தண்ணீரில் தினமும் தலைக்கு குளித்து வர, சித்தப் பிரமை விலகும்.

கல்தாமரை இலையை நிழலில் உலர்த்தி எடுத்துக் கொண்டது 5 பங்கு, சீந்தில் சர்க்கரை 1 பங்கு, மூங்கிலுப்பு 1 பங்கு, சீனாக்கற்கண்டு பொடி 10 பங்கும் சேர்த்து நன்றாகப் பொடி செய்து வைத்துக் கொண்டு, காலை மாலை வேளைகளில், பசு நெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் புத்தி மயக்கம், சித்தப்பிரமை, இரத்தக் கொதிப்பு முதலியவற்றைப் போக்கி, நல்ல பலத்தைத் தரும்

மனக்குழப்பம்

பச்சை அருகம்புல் ஒரு கைப்பிடி, மிளகு-6, சீரகம் இரண்டு சிட்டிகை சேர்த்து அரைத்து, எலுமிச்சங்காயளவு காலையில் சாப்பிட்டு பால் குடிக்கவும். 7 நாள் செய்ய, மனக்குழப்பம் நீங்கி, மன அமைதி உண்டாகும்.

ஞாபக சக்தி

வல்லாரைக்கீரை வாங்கி நன்கு சுத்தம் செய்து, தண்ணீரில் மண் போகும்படி அலசி 4 அல்லது 5 நாட்கள் நிழலில் உலரச் செய்து, ஈரம் வற்றி உலர்ந்தவுடன், சிறிது எண்ணெய் விட்டு லேசாக வறுத்துக்கொண்டு மிக்சியில் பவுடராக செய்து கொள்ள வேண்டும். அரைத்த பவுடர் ஒரு ஆழாக்கு இருக்குமானால், அதற்கு மிளகாய் வற்றல்-10, கொத்துமல்லி விதை ஒரு தேக்கரண்டி, க.பருப்பு ஒரு தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு, புளி - கோலிக்குண்டு அளவு எடுத்துக் கொண்டு, மி.வற்றல், மல்லிவிதை, க.பருப்பு மற்றும் உப்பு, புளியுடன் மிக்சியில் இட்லிப்பொடி அரைக்கும் பக்குவத்தில் அரைத்து, முதலில் அரைத்த வல்லாரைக் கீரைப் பொடியை இத்துடன் கலந்து ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளவும். சாதத்துடன் நெய் விட்டு 1 ஸ்பூன் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும். வாரத்தில் 2 நாட்கள், படிக்கும் குழந்தைகளுக்கு கொடுத்தால் ஞாபக சக்தி நன்கு வளரும்.

பள்ளி மாணவர்களுக்கு ஞாபகசக்தி பெருக, அடிக்கடி சுண்டைக்காய் சாப்பிட வேண்டும். மூளை பலம் பெறும்.

மாங்கனீஸ் சத்து உள்ள பாதாம்பருப்பையும், தேங்காயையும் அடிக்கடி சாப்பிட்டால் ஞாபகசக்தி வளரும்.

வல்லாரைக்கீரையை சர்பத் செய்து தினசரி சாப்பிட்டு வந்தால் நல்ல ஞாபக சக்தி உண்டாகும். வயிற்றில் பூச்சி இருந்தாலும் அதை வெளியேற்றிவிடும்.

சர்பத் செய்யும் முறை –
  • வல்லாரைக்கீரையை உரலில் போட்டு இடித்துச் சாறு எடுத்துக் கொள்ளவும்.
  • கொஞ்சம் தண்ணீர் விட்டுக் காய்ச்சவும். நன்றாக சுண்டக் காய்ச்ச வேண்டும்.
  • பிறகு சர்க்கரை, சுக்கு, ஏலக்காய், மிளகு, வசம்பு இவைகளைப் பொடி செய்து அதில் போட்டு மறுபடியும் அடுப்பில் வைத்துக் கொதிக்க வையுங்கள்.
  • கொதித்த பிறகு வடிகட்டி வைத்துக் கொண்டு, தினசரி காலையில் கொஞ்சம் சாப்பிடுங்கள். நல்ல ஞாபகசக்தி வரும்.

வல்லாரைக்கீரையை நிறைய சேகரித்துக் கழுவி, பாலில் அவிக்கவும். பின் நிழலில் உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். சிறிது மிளகு, சீரகம், ஏலம், சுக்கு இவற்றையும் இத்துடன் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். இப்பொடியினை காபி டிகாக்சன் போல் வேண்டும் போது தயாரித்து, பால், தேன் அல்லது பனை வெல்லம் கலந்து பருகலாம். வாரம் 2 நாட்கள் பருகிவர, நினைவாற்றல் பெருகும். மூளைத்திறன் வளரும்.

அரிசித்திப்பிலி 45ஐ எடுத்து தேனில் போட்டு 45 நாள் ஊற வைத்துப் பின்பு தினம் ஒன்றாகக் காலையில் சாப்பிட்டுவர ஞாபகமறதி குணமாகும்.

ஒருபிடி வில்வ இலையை 300 மில்லி தண்ணீரில் இரவு ஊறப்போட்டு, காலையில் அந்த இலையில் ஒன்றை மென்று சாப்பிட்டு, ஊறிய நீரை 50 மில்லி வீதம் குடிக்கவும்.

ஒரு கைப்பிடி வல்லாரையை 200 மில்லி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அதில் 200 மில்லி பால், 2 தேக்கரண்டி சர்க்கரை கூட்டி, காலையில் அருந்தவும், 48 நாட்கள் அருந்த, நினைவாற்றலைப் பெருக்கும்.

தேனும், பேரீச்சம்பழமும் கலந்து தினமும் காலையில் கொடுத்துவர, குழந்தைகள் சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும், ஞாபகசக்தியுடனும் விளங்குவார்கள்.
Powered by nasrullah.in - TechnoNasr 2003-2020.
Designed & Developed by Mohamed Nasrullah.M