உடல் சூடு – Body Heat

அன்று மலர்ந்த அகத்திப்பூ 30 கிராம் அளவு எடுத்து, ஒரு டம்ளர் பசும்பாலில் காய்ச்சி, சர்க்கரை சேர்த்து ஒரு வாரம் சாப்பிட்டால் உடல் காங்கை நீங்கும்.

வெள்ளை அல்லி சர்பத் சாப்பிட்டால் அதிக வெப்பத்தால் வரும் கண் நோய்கள் விலகும். உடல் சூடு, நாவறட்சி நீங்கும்.

ஆடாதோடாப் பூவை வதக்கி இரவில் படுக்கைக்கு முன்பு கால்களில் வைத்துக் கட்டி, காலையில் எறிந்து விடலாம். உடல் வெப்பத்தால் ஏற்பட்ட கண் நோய்கள் எளிதில் நீங்கி விடும்.

பொன்னாங்கண்ணிக் கீரையைச் சுத்தம் செய்து பச்சையாகவும் சாப்பிடலாம். சிறிது கசப்போடு வழவழப்பாக இருக்கும். தேகக்காந்தல், கண் எரிச்சல் நீங்கும். வாய்ப்புண் தொண்டைப்புண் நீங்கும்.

எப்பொழுதும் கணைச்சூடு உள்ளவர்களுக்கு முகத்தில் களையே இருக்காது. இவர்கள் தினந்தோறும் சுத்தமான தேனை வெதுவெதுப்பான வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும். அத்துடன் உணவில் வெங்காயத்தை அதிகமாகச் சேர்த்துக் கொள்வதும் நல்லது. சில நாட்களுக்குள்ளாகவே கணைச்சூடு மாறி சுறுசுறுப்பு ஏற்படும்.

உடலைக் குளிர்ச்சியடையச் செய்ய வெள்ளரிப் பிஞ்சை அடிக்கடி சாப்பிடுங்கள். அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொள்ளலாம். பச்சையாகவும் மிளகுத்தூள் கலந்தும் சாப்பிடலாம்.

நெருஞ்சிமுள் 2 செடியைக் கழுவி நசுக்கி ஒரு கைப்பிடி அருகம்புல் சேர்த்து மண் சட்டியிலிட்டு கசாயம் வைத்து வடிகட்டி, வேளைக்கு 2 அவுனஸ் வீதம் தினசரி 3 வேளையாக இரண்டு மூன்று நாட்கள் குடித்தால் கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், தேக உஷ்ணம் குணமாகும்.

பருப்புக்கீரையை சமைத்து உண்டால் உடல் குளிர்சியடையும். கண்கள் நல்ல ஒளி பெறும். குளிர்ந்த உடல் உடையோர் மிளகும் சீரகமும் சேர்த்துச் சமைத்து உண்ணுதல் நல்லது.

உடல் உஷ்ணமாக இருக்கிறதா? அரை ஸ்பூன் வெந்தயத்தை வாயில் போட்டு மென்று தின்று கொஞ்சம் மோர் சாப்பிடுங்கள். உடலிலுள்ள உஷ்ணம் குறைந்து விடும். அடிக்கடி சாப்பிட வேண்டாம். உடல் அதிக குளிர்ச்சியடையும்.

கேழ்வரகு மாவில் தண்ணீர் விட்டு அதைப் புளிக்க வையுங்கள். 3 நாட்கள் தண்ணீரில் ஊறினால் மாவு புளித்து விடும். இந்த மாவை வேகவைத்து, இத்துடன் மோரைக் கலந்து சாப்பிட்டால் உடம்பில் உஷ்ணம் குறையும். இரத்த விருத்தி கூட ஏற்படுகிறது.

ஒரு கைப்பிடி அளவு கோதுமையை இரவில் ஊறவையுங்கள். காலையில் அதை அரைத்து சிறிது இனிப்பு சேர்த்து சாப்பிடுங்கள். சூடு தணிந்து விடும்.

சிலரது உடம்பு நம் உடம்பில் தவறி பட்டுவிட்டால் சூரியனே அருகில் வந்த மாதிரி சுடும். மாசிக்காயை பொடித்து தேனிலாவது வெந்நீரிலாவது கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டால் உடம்பு குளிர்ச்சியாகி விடும்.

வெடித்த மாதுளம்பழத்தை சீக்கிரமாகப் பிழிந்து மெல்லிய துணியில் வடிகட்டி சீனாக்கற்கண்டு சேர்த்து சாப்பிட உஷ்ணம் ஒழியும். சரீரம் முழுவதும் குளிர்ச்சி அடையும்.

நான்கு தேக்கரண்டி அளவு மோருடன் இரண்டு தேக்கரண்டி அளவு தக்காளிச் சாற்றைக் கலந்து உடலில் பூசி வர உடல் எரிச்சல் சூடு தணியும். தடவி அரை மணி நேரம் கழித்து குளித்து விடலாம்.

தினமும் தக்காளிச் சாறு பருக உடல் உஷ்ணம் குறையும்.

கரும்புச்சாறுடன் இஞ்சி, எலுமிச்சம்பழச்சாறு கலந்து வாரம் 3 நாட்கள் பருகிவர பித்தத்தைத் தணிக்கும். பித்தம் காரணமாக வரும் குடல்புண், மலக்குடல் வறட்சி, இரத்தமூலம், வெள்ளை படும் நோய், வெட்டைச்சூடு ஆகியவை நீங்கும்.

வெங்காயத்தை நெய் விட்டு வதக்கிச் சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.

5 வெங்காயத்தையும், இஞ்சி சிறு துண்டும், பச்சை மஞ்சள் சிறு துண்டு, மிளகு ஒரு தேக்கரண்டி சீரகம் ஒரு தேக்கரண்டி, நல்லெண்ணெய் 50 மில்லி போட்டுக் காய்ச்சி, மணம் வரும் தருவாயில் இறக்கி ஆறவைத்து, வெந்த வெங்காயத்தையும் இஞ்சியையும் மென்று சாப்பிட்டு எண்ணெயை தலைக்குத் தேய்த்து 15 நிமிடங்கள் வைத்துக் குளிக்க உடலில் உள்ள சகல உஷ்ண ரோகங்களும், உடல் சூடும் தணியும்.

5 வெங்காயம், மிளகு, கசகசா, ஓமம் மூன்றும் ஒவ்வொரு தேக்கரண்டி பாலில் அரைத்து தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் வைத்து வெந்நீரில் குளித்து வர தலைப்பொடுகு, தலை அரிப்பு குணமாகும். கண்களுக்கு குளிர்ச்சி உண்டாகும். உடல் சூடு தணியும்.

3 டீஸ்பூன் வெள்ளை எள்ளு, முந்தைய நாள் இரவே வெந்நீரில் ஊற விடுங்கள். மறுநாள் அரைத்து, அதனுடன் சம அளவு பயத்தம் பருப்பு மாவைக் கலந்து, உடம்பெல்லாம் தேய்த்துக் குளியுங்கள். வாரம் ஒரு முறை இப்படிக் குளிப்பதால், உடம்பில் உஷ்ணம் குறையும்.

செம்பருத்தி, மருதாணி இரண்டும் தலா ஒரு பிடி எடுத்து அரைத்துக் கொண்டு வாரம் ஒரு முறை தலையில் தேய்த்துக் குளித்தாலும், தலையில் சூடு தணியும். உஷ்ணத்தினால் கண்களுக்கு ஏற்படும் ஒட்டு மொத்தப் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும்.

ஆலிவ் எண்ணெய், விளக்கெண்ணை, நல்லெண்ணை என ஒவ்வொரு நாள் ஒவ்வொரு எண்ணையை உச்சி முதல் உள்ளங்கால் வரை நன்றாகத் தடவுங்கள். ஒரு மணி நேரம் கழித்து, மிதமான சுடுநீரில் குளியுங்கள். முடிக்கும் முன்பு சந்தனப் பவுடர், சிவப்பு சந்தனப் பவுடர் இரண்டையும் சம அளவு கலந்து உடம்பில் தேய்த்து அலசி விடவும். இப்படிக் குளிப்பதால், உடல் சூடு தணிவதுடன், சருமமும் வறண்டு போகாமல், பளபள என மின்னும். குற்றாலத்தில் இருப்பது போல் உடம்பு குளு குளு என்றும் இருக்கும்.

அனலாகக் கொதிக்கும் உடம்பை அருவிபோல் குளிர்ச்சியூட்டும் அசத்தலான பொடி.

பச்சைப் பயறு அரை கிலோ, சுத்தப்படுத்திய துளசி இலை – 10 கிராம், வேப்பிலை – 5 கிராம், கஸ்தூரி மஞ்சள் 5 கிராம் இவற்றை லேசாகக் காய வைத்து பவுடராக்குங்கள். தினமும் பூசிக் குளித்துப் பாருங்கள். மேனியே ஜில்லிடும்.

எலுமிச்சைத் தோலை சிறு துண்டுகளாக்கி, வெயிலில் உலர்த்தி, மிஷினில் அரைத்துக் கொள்ளவும். இதில் 1 டீஸ்பூன் எடுத்து, பாலில் கரைத்து, உடம்பு முழுவதும் தேய்த்துக் குளியுங்கள். வெயிலின் பாதிப்பில் இருந்து உங்களைப் பாதுகாக்கும் இந்தப் பேஸ்ட் குளியல்.

முதல் நாள் இரவு ஒரு சின்னக் கிண்ணத்தில் மோரில் வெந்தயம் 1 ஸ்பூன் ஊற வைத்து, அதை அடுத்த நாள் காலையில் சாப்பிட்டால், உடல் சூடு தணியும். ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களைத் தணிக்கும்.

மருதாணி இலை, துளசி, கறிவேப்பிலை இவற்றில் தலா ஒரு பிடியும், கொட்டை நீக்கிய கடுக்காய்த் தூள் ஒன்றும், இவை நான்கையும் அரைத்து வடி கட்டுங்கள். இதனுடன் 25 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து இறக்குங்கள். மிதமான சூட்டில் தலையில் நன்றாகப் பூசி, பிறகு சீயக்காய் போட்டு அலசுங்கள். வாரம் ஒரு முறை இந்தத் தைலக் குளியல் போடுங்கள். ஜில்லுனு இருக்கும்.

வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு நெய்யும், சர்க்கரையும் கலந்து குடித்தால், பிரயாணச் சூடு போய் விடும்.

செம்பருத்தி இலையைக் கொஞ்சம் பறித்து சிறிது நேரம் அடுப்பில் கொதிக்க வைத்து இறக்கி வைக்க வேண்டும். நன்றாக ஆறியவுடன் பார்த்தால் ஷாம்பூ போல "கொழ-கொழ" என்றிருக்கும். அதை தலை உச்சி, தலை முடி, முகம், கால்-கை எல்லாம் தேய்த்து, 10 நிமிஷங்கள் ஊற வைக்க வேண்டும். பின் பச்சைத் தண்ணீரில் குளிக்க வேண்டும். உடம்பின் சூட்டைத் தணிக்க இதை விட வேறு ஒன்றுமே கிடையாது.

5 வெங்காயம், மிளகு ஒரு தேக்கரண்டி, கசகசா ஒரு தேக்கரண்டி, ஓமம் ஒரு தேக்கரண்டி, பாலில் அரைத்துத் தலையில் தேய்த்து 15 நிமிஷங்கள் வைத்து, வெந்நீரில் குளித்து வர, பொடுகு தொல்லை, அரிப்பு குணமாகும். இதனால் கண்களுக்குக் குளிர்ச்சி உண்டாகும். உடல் சூடு தணியும்.

கசகசாவை 3 (அ) 4 ஸ்பூன் எடுத்து அரைத்து, வடித்த கஞ்சி (அ) தயிரில் போட்டுக் கலக்கி, உடம்பில் தேய்த்துக் குளித்து வர, சரும அரிப்பு, உடல் வெப்பம் போன்ற தொல்லைகள் தீரும்.
Powered by nasrullah.in - TechnoNasr 2003-2020.
Designed & Developed by Mohamed Nasrullah.M