கிரீன்ஸ் அண் கிரெய்ன்ஸ் புலாவ்
தேவையான பொருள்கள் : பாசுமதி அரிசி - 2 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப், ப. மிளகாய் - 10, தக்காளி - 1 கப், கொத்துமல்லி, புதினா - 1/4 கப், பாலக்கீரை - 1/4 கப், முளைக்கீரை - 1/4 கப், முருங்கைக் கீரை (உருவியது) - 1/4 கப், வெந்தயக்கீரை - 1/4 கப், கேரட் - 1/4 கப், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 3 குழிக் கரண்டி.
ஊறவைத்து முளை கட்டியவை : ப. பட்டாணி - 1/4 கப், ப. மொச்சை - 1/4 கப், ப. பயிறு - 1/4 கப், நிலக்கடலை - 1/4 கப், தாளிக்க : பட்டை, கிராம்பு தலா - 4, சோம்பு - 1 டேபிள் ஸ்பூன், சீரக, மிளகுப் பொடி - 2 டேபிள் ஸ்பூன், முந்திரி - 10, இஞ்சி, பூண்டு விழுது - 1/2 கப், கறிவேப்பிலை - 1 ஆர்க்கு, மிளகாய், மஞ்சள் பொடி - தலா 1 டீஸ்பூன், தேங்காய்ப் பால் - 2 கப், தயிர் - 1 கப், நெய் - 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை : முதலில் பாசுமதி அரிசியை தேங் காய்ப் பாலில் அரை மணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, சோம்பு, முந்திரி போட்டு வெடித்ததும், வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி, புதினா போட்டு நன்கு வதக்கவும்.
பின் தக்காளி, கேரட் போடவும். தக்காளி குழையும் வரை வதக்கிவிட்டு, இஞ்சி, பூண்டு விழுது, மிளகு சீரகப் பொடியைச் சேர்க்கவும். அதனுடன் மிளகாய், மஞ்சள் பொடியையும் சேர்க்கவும்.
பின்னர் தேவையான உப்பு சேர்த்து ஒரு புரட்டு புரட்டி முளைகட்டிய பயறு வகைகளை ஒவ்வொன்றாகப் போட்டு 2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து 1 கப் தண்ணீர் விட்டு மூடவும். வெயிட் போட வேண்டாம். நன்கு கொதி வந்ததும் 1 கப் தயிர் சேர்த்து பாசுமதி அரிசியை தேங்காய்ப் பாலோடு போட்டு ஒரு கிளறு கிளறி பின்னர் மூடவும். ஐந்து நிமிடங்கள் சிம்மில் வைக்கவும்.
பின்னர் திறந்து பார்த்து அடியோடு லேசாக ஒரு கிளறு கிளறி குக்கரை மூடி அடுப்பை அணைத்து விடவும். 10 நிமிடங்கள் கழித்து எடுத்து சூடாகப் பரிமாறவும்.
கீரையுடன் கூடிய ஒரு முழு தானிய பிரியாணி தேவையான கலோரிஸ் கொண்டது மட்டுமின்றி சுவையானதும் கூட!